என்ன இருந்தாலும் காங்கிரஸ் ரத்தம் தானே.. விவசாயிகளுக்கு பரிதாபப்பட்டால்? மேனகா, வருண் மீது நடவடிக்கை
டெல்லி: பாஜக தேசிய நிர்வாகக் குழுவில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, அவரின் மகனும், எம்.பி.யுமான வருண் காந்தி இருவரும் நீக்கப்பட்டுள்ளது ஏன் என்பது குறித்து பரபரப்பு கருத்துக்கள் வலம் வருகின்றன.
உ.பி. லக்கிம்பூர் கெரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய அமைச்சர் மிஸ்ரா, துணை முதல்வருக்கு எதிராகப் போராடிய விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்தக் கலவரத்தின்போது விவசாயிகள் கூட்டத்துக்குள் அமைச்சரின் வாகனம் புகுந்ததில் 4 விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டனர்.

வருண் காந்தி கருத்து
இந்தச் சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்த பில்பித் தொகுதி பாஜக எம்பி வருண் காந்தி "தாக்குதல் வீடியோ மிகத் தெளிவாக இருக்கிறது. கொலை செய்து போராட்டக்காரர்களின் வாயை அடைக்க முடியாது. ஒவ்வொரு விவசாயியின் மனதிலும் அகங்காரம், கொடூரம் பற்றிய செய்தி நுழைவதற்கு முன், அப்பாவி விவசாயிகளின் ரத்தத்துக்குக் காரணமாணவர்களை நீதி முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும்" என கூறஇனார். ஒரு பக்கம், பாஜக தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர் இது கொலையல்ல என கூறி வரும் நிலையில், வருண் காந்தி இவ்வாறு தெரிவித்திருந்தார்.

புதிய நிர்வாக குழு
இந்நிலையில் பாஜகவின் 80 உறுப்பினர்கள் கொண்ட புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பட்டியலை அக்கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா இன்று வெளியிட்ட நிலையில், அதில், முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, வருண் காந்தி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
80 உறுப்பினர்களில் 37 பேர் மத்திய அமைச்சர்களாகும்.

உ.பி.க்கு முக்கியத்துவம்
உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுவதையடுத்து, நிர்வாகக் குழுவில் மத்திய அமைச்சர் பி.எல்.வர்மா மற்றும் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த தலைவர் சிறப்பு அழைப்பாளர்களாகவும், 80 உறுப்பினர்களில் 12 பேர் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவும், சிறப்பு அழைப்பாளர்களில் 6 பேர் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாஜக தலைவர்கள்
"முழு தவறும் பாஜக தலைவர்களிடம் உள்ளது போல் வருண் காந்தி கூறுகிறார். நாம் இந்த சம்பவம் பற்றி விசாரணை அறிக்கைக்கு காத்திருக்கிறோம் மற்றும் அந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது என்று நம்புகிறோம். முழு எதிர்க்கட்சியும் பாஜக கட்சியை குறிவைக்கும் நேரத்தில் அவர் பொறுமையாக இருந்திருக்க வேண்டும்" என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் ஒரு பாஜக தலைவர் கூறியுள்ளார். எனவே வருண் காந்தி மற்றும் மேனகா காந்தியின் நீக்க காரணம் விவசாயிகள் போராட்டம் தொடர்பான கருத்துதான் என்பது உறுதியாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications