"தென்னிந்தியாவில் அடித்து தூக்கும் பாஜக.." பிரசாந்த் கிஷோர் சொல்வது இருக்கட்டும்.. கள நிலவரம் என்ன
டெல்லி: கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் பாஜக மிகப் பெரியளவில் வெல்லும் என்று பிரசாந்த் கிஷோர் கூறிய நிலையில், அங்கே களநிலவரம் எப்படி இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளிக்க பிரசாந்த் கிஷோர், கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் இந்த முறை பாஜக தான் என்றும் இந்த பகுதிகளில் இதற்கு முன்பு வெல்லாத அளவில் பல இடங்களில் பாஜக வெல்லும் என்றும் கூறியிருந்தார்.

உண்மையில் பாஜக கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறுமா கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.
பிரசாந்த் கிஷோர்: பாஜக இப்போது 400 இடங்களில் வெல்ல வேண்டும் என்பதை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. அப்படி 400 இடங்களில் அவர்கள் வெல்ல வேண்டும் என்றால் இந்த மாநிலங்களில் கணிசமான இடங்களில் வென்றே தீர வேண்டும். ஏனென்றால் இந்த மாநிலங்களுக்கு மொத்தம் 192 சீட்கள் லோக்சபா இடங்கள் உள்ளன. கடந்த தேர்தலில் பிரசாந்த் கிஷோர் சொன்ன இந்த சீட்களில் பாஜக எத்தனை இடங்களில் வென்றுள்ளது என்று பார்க்கலாம்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. மேற்கு வங்கத்தில் கணிசமான வெற்றியைப் பதிவு செய்தது. இருப்பினும், ஒடிசா மற்றும் தெலுங்கானாவில் பாஜக ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதாவது இந்த 192 சீட்களில் 55 இடங்களில் மட்டுமே பாஜகவால் வெல்ல முடிந்தது. அதிலும் கர்நாடகாவில் இருந்து மட்டும் அவர்கள் 25 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது. சரி ஒவ்வொரு மாநிலத்திலும் இப்போது களநிலவரம் எப்படி இருக்கிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.
ஒடிசா: 2019 லோக்சபா தேர்தலைப் போலவே, இந்த முறையும் அங்கே பிஜு ஜனதா தளத்திற்கும் பாஜவுக்கும் இடையே தான் போட்டி. 2019 தேர்தலில் அங்கிருந்த 21 தொகுதிகளில் பாஜக 8 இடங்களில் வென்ற நிலையில், இந்த முறை அதை விட அதிக இடங்களில் வெல்லும் என்றே அம்மாநிலத்தில் உள்ள அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்த முறை பாஜக 15 முதல் 16 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
வல்லுநர்கள் இது குறித்து மேலும் கூறுகையில், "மக்கள் மோடிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். லோக்சபா தேர்தலில் இந்த மோடி பேக்டர் முக்கியமானது. மேலும், கிராமப் புறங்களில் ஆளும் நவீன் பட்நாயக் அரசு மீது கோபம் அதிகமாக இருக்கிறது. அரசாங்கத்தை நவீன் பட் நாயக் அவுட்சோர்சிங் செய்வதாகக் கிராமப்புறங்களில் மக்கள் கோபமாக இருக்கிறார்கள். இதுவும் ஒரு முக்கிய காரணம்" என்றார்.
மேற்கு வங்கம்: அடுத்து மேற்கு வங்கம்.. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. 2019இல் பாஜக 18 இடங்களை வென்று 40% வாக்குகளைப் பெற்றது. கடந்த காலங்களில் மேற்கு வங்கம் பாஜகவின் வலுவான இடங்களில் இருந்தது இல்லை. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் களத்தில் இறங்கி வேலை செய்து பாஜக தனது ஆதரவை அதிகரித்துள்ளது. 10க்கும் குறைவான எம்எல்ஏக்கள் என்ற நிலையில், இருந்து இப்போது 77 எம்எல்ஏக்கள் என்ற நிலைக்கு பாஜக வந்துள்ளது.
இந்த முறை பாஜக எத்தனை இடங்களில் வெல்லும் என்பது தனி டாபிக் என்றாலும் அவர்கள் வாக்கு வங்கி நிச்சயம் அதிகரிக்கும் என்று மேற்கு வங்க அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். சிஏஏ உள்ளிட்ட விவகாரங்களில் பாஜகவுக்கு எதிராக இருப்பது ஒரு சிக்கல். ஆனால், அங்கே காங்கிரஸ், திரிணாமுல் தனித்தனியாகக் களமிறங்குவது பாஜக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்கும். கடந்த முறை வென்ற அதே அளவுக்கு இந்த முறையும் வெல்ல வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகம்: சரி தமிழ்நாட்டிற்கு வருவோம். தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்தாலும் கூட அவர்களால் எந்தவொரு சீட்டிலும் வெல்ல முடியாது என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். சில இடங்களில் அவர்கள் போட்டி கொடுத்தாலும் வெற்றி வாய்ப்பு என வரும் போது குறைவாகவே உள்ளதாகக் கூறுகிறார்கள். பாஜக தலைமை நேரடியாகத் தமிழகத்தில் கவனம் செலுத்தி வருவதால் இங்கே வாக்கு வங்கி கணிசமாக அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்ற போதிலும் சீட் கிடைப்பது கடினம் தான் என்கிறார்கள்.
தெலுங்கானா: தெலுங்கானாவில் கடந்த முறை டிஆர்எஸ் 9 சீட்களில் வென்ற நிலையில், பாஜக 4 இடங்களிலும் காங்கிரஸ் 3 இடங்களிலும் வென்றது. சட்டசபைத் தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்த காங்கிரஸ் தெம்புடன் லோக்சபா தேர்தலுக்கு வேலை செய்கிறது. அங்கே பெரிய வீழ்ச்சி என்றால் அது கேசிஆர் கட்சிக்குத் தான் இருக்கும்.. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் இந்த முறை 3ஆவது இடத்திற்குச் செல்ல வாய்ப்புகள் அதிகம்.
காங்கிரஸின் கடன் தள்ளுபடி, மகளிர் இலவச பயணம் ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே, இந்த முறை அங்கு அவர்களுக்குத் தான் அதிக இடம் கிடைக்கும். அடுத்து பாஜக வரும். பாஜக கடந்த முறை வென்ற 4 சீட்களை விடக் கூடுதல் இடங்களை வெல்லும் என்றாலும் அது மிகப் பெரிய வெற்றியாக இருக்காது என்பது வல்லுநர்கள் கருத்தாக உள்ளது.
ஆந்திரா: அடுத்து ஆந்திரா. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் உடன் கூட்டணி அமைத்து பாஜக களமிறங்குகிறது. மேலும், ஜெகன் மோகன் ரெட்டி மீதான எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது. எனவே, இந்த முறை ஆந்திராவில் மொத்தம் இருக்கும் 25 சீட்களில் என்டிஏ கூட்டணி 18 முதல் 18 இடங்களில் வெல்ல வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆந்திராவில் சட்டசபைத் தேர்தலும் நடக்கும் நிலையில், அதிலும் என்டிஏ கூட்டணியே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடகா: கேரளாவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இடையே தான் போட்டி. பாஜக அங்குச் சற்று கவனம் செலுத்தினாலும் வெற்றிக்கு வாய்ப்பு இல்லை. அதாவது கேரளாவிலும் தமிழகத்தைப் போலவே வாக்கு வங்கி அதிகரித்தாலும் வெல்ல முடியாது. கர்நாடகாவைப் பொறுத்தவரை அங்கே காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் லோகக்சபா தேர்தலில் பாஜக பெரியளவில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகவே உள்ளூர் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது பிரசாந்த் கிஷோர் சொன்னது போலத் தான் ஒடிசா, கர்நாடகாவில் களநிலவரம் இருக்கிறது. ஆனால், மேற்கு வங்கம், கேரளா, தமிழகத்தில் வாக்கு வங்கி அதிகரித்தாலும் கூட லோக்சபா சீட்களில் வெல்ல வாய்ப்பு குறைவு என்றே வல்லுநர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications