ஆத்திரத்தில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான்.. உரி பகுதியில் பெண் பலி! 4 பேர் படுகாயம்
உரி: ஜம்மு - காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும், 4 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் ஏராளமான வீடுகளும் சேதம் அடைந்துள்ளன.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் 9 தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம். இது பாகிஸ்தானை கொந்தளிக்க வைத்துள்ளது.

தவிடுபொடி
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை 'எஸ்-400' வான் பாதுகாப்பு அமைப்பைக் கொண்டு தவிடுபொடி ஆக்கியது இந்தியா.
இரவு நேரத்தில் பாகிஸ்தான் இந்தியா மீது குறிவைத்து டிரோன் ஏவுகணைகளை ஏவிய நிலையில், அவை நடு வானிலேயே இந்திய ராணுவத்தால் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்
இதனிடையே, எல்லையோரப் பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் பொதுமக்களின் குடியிருப்புகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
இந்தநிலையில், ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் உரி பகுதியில் உள்ள மொஹுரா அருகே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் கார் மீது குண்டு பாய்ந்ததில் நர்கீஸ் பேகம் என்பவர் பலியானார். மேலும், காயமடைந்த ஹஃபீசா என்ற மற்றொரு பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உரி பகுதியில் பெண் பலி
பாகிஸ்தான் ராணுவத்தால் நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலால் அந்தப் பெண் பயணித்த வாகனம் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தினர் மோட்டார் மற்றும் பீரங்கி குண்டுகளால் உரி பகுதியில் தாக்கியுள்ளனர்.
உரியில் உள்ள ரசார்வானி கிராமத்திலிருந்து, இந்த தாக்குதலில் இருந்து தப்பிச் செல்ல நர்கிஸ் பஷீர் என்ற பெண்ணும் அவரது குடும்ப உறுப்பினர்களும் ஒரு வாகனத்தில் ஏறினர். வாகனம் மொஹுர்ராவை அடைந்தபோது, ஒரு ஷெல் தாக்கியுள்ளது.
4 பேர் காயம்
இதில் நர்கீஸ் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும், மேலும் மூன்று குடும்ப உறுப்பினர்கள் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் பாரமுல்லாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி (ஜிஎம்சி) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உரியின் தாஜல் கிராமத்தில் ஷெல் தாக்கியதில் மற்றொரு நபர் காயமடைந்துள்ளார்.
இதுபோல இதுவரை நடந்ததில்லை
பாகிஸ்தானின் பீரங்கித் தாக்குதல் வியாழக்கிழமை இரவு 11 மணிக்குத் தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை இடைவிடாமல் தொடர்ந்ததாக அப்பகுதியை சேர்ந்த ஒரு குடியிருப்பாளர் கூறி உள்ளார். "பல தசாப்தங்களாக எல்லையைத் தாண்டி இவ்வளவு கடுமையான துப்பாக்கிச் சூட்டை நாங்கள் பார்த்ததில்லை" என்று அவர் கூறினார்.
ஜம்மு நகரம் பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஸ்ரீநகரில் வியாழக்கிழமை இரவு மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டாலும், பிற பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை தான் மின்சாரம் மீண்டும் உயிர்பெற்றது.
ஜம்மு காஷ்மீரில் பதற்றம்
பதட்டங்கள் அதிகரித்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீர் முழுவதும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் மூடப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் அரசு அறிவித்தது. "திங்கள் கிழமை எப்படியும் விடுமுறை, திங்கள் கிழமை பிற்பகலில் முடிவை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம். அந்த நேரத்தில் நிலவும் சூழ்நிலையைப் பொறுத்து, விடுமுறை நீட்டிக்கப்படுமா இல்லையா, நீட்டிக்கப்பட்டால், எவ்வளவு காலம் என்பது தீர்மானிக்கப்படும்" என்று ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் அலுவலகம் வியாழக்கிழமை எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.












Click it and Unblock the Notifications