இந்தியாவுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்! இனி அமெரிக்கா, கனடாவில் மருத்துவ உயர் கல்வி படிக்கலாம்!
டெல்லி: இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு, மருத்துவக் கல்விக்கான உலகக் கூட்டமைப்பானது அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் உயர்கல்வியை இந்திய மாணவர்கள் மேற்கொள்ளலாம்.
மருத்துவத்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கான தேவை உலகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்படி இருக்கையில், இந்தியாவில் மருத்துவர்களுக்கான எண்ணிக்கை மேலும் அவசியமாக இருக்கிறது. இந்நிலையில்தான் நமது தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் மூலம் மேற்குறிப்பிட்டதைப்போல இந்திய இளங்கலை மருத்துவர்கள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் முதுநிலை மருத்துவம் பயின்று பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். இந்த அங்கீகாரம் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இது சர்வதேச அளவில் இந்தியாவுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 706 மருத்துவ கல்லூரிக்கும் இந்த அங்கீகாரம் பொருந்தும் என்பதால் நாட்டின் எந்த மூலையில் பயிலும் மருத்துவ மாணவர்களாக இருந்தாலும் அவர்கள் மேற்குறிப்பிட்ட நாடுகளில் உயர்கல்வியை பயிலலாம். இது நமது நாட்டின் மருத்துவ மாணவர்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் என்றும் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மருத்துவக் கல்விக்கான உலகக் கூட்டமைப்பு (WFME) என்பது உலகளவில் மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக இயங்கி வரும் ஒரு உலகளாவிய அமைப்பாகும். இதன் நோக்கம் மனிதகுலத்திற்கு சிறப்பான சுகாதாரம் கிடைக்க உறுதி செய்வதுதான். அதேபோல மருத்துவக் கல்வியில் மிக உயர்ந்த அறிவியல் மற்றும் நெறிமுறை தரத்தை மேம்படுத்துவதன் மூலம் உலகளவில் மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த முடியும் என்று இந்த கூட்டமைப்பு நம்புகிறது.












Click it and Unblock the Notifications