கொடுமை.. போராடும் மல்யுத்த வீராங்கனைகள் போட்டோ மார்ஃபிங்! சீனுக்குள் சர்வதேச மீடியாக்கள்.. விமர்சனம்
டெல்லி: கடந்த ஞாயிறு அன்று புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது அதை நோக்கி டெல்லி ஜந்தர் மந்தரிலிருந்து பேரணியாக சென்ற மல்யுத்த வீராங்கனைகள் கைதாகி போலீஸ் வாகனத்தில் சிரிப்பதை போன்று எடிட் செய்யப்பட்ட படத்தை பாஜகவினர் பகிர்ந்த நிலையில் இதனை தற்போது உலக மீடியாக்களும் விமர்சிக்க தொடங்கி இருக்கின்றன.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருக்கும் உத்தரப்பிரதேச பாஜக எம்பி பிரிஜ்பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாஜக எம்பி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்தனர்.

இதையடுத்து விசாரணை மேற்கொள்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. இதனால் இடைக்காலமாக நிறுத்தினர் போராட்டத்தை மல்யுத்த வீரர்கள் நிறுத்தி வைத்தனர். ஆனால் முறையாக அந்த குழு விசாரிக்கவில்லை என்று குற்றம்சாட்டி கடந்த மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர்.
ஒலிம்பிக் மற்றும் சர்வதேச மல்யுத்த போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற சாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் உள்ளிட்டோர் தலைமையில் இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று டெல்லியில் புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நடைபெற்றபோது அதை நோக்கி இந்த மல்யுத்த வீரர்களும் வீராங்கனைகளும் பேரணியாக சென்றனர்.
அப்போது அங்கிருந்த போலீசார் வீரர், வீராங்கனைகளை தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இந்த சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் தங்கி இருந்த கூடாரங்களையும் போலீசார் அகற்றினார்கள்.
மேலும் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் அமர்ந்து இருந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிரித்துக்கொண்டு இருப்பதை போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.
பாஜகவினரும் இதனை அதிகளவில் பகிர்ந்து வெளியில் அழுது புலம்பிய வீராங்கனைகள் சிரித்துக்கொண்டு இருப்பதாக விமர்சித்தனர். தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளும் இதே விமர்சனத்தை முன்வைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டு கைதான சங்கீதா போகத், வினேஷ் போகத் ஆகிய 2 மல்யுத்த வீராங்கனைகள் சிரித்துக்கொண்டு இருப்பதை போன்ற அந்த புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து பல்வேறு உண்மை கண்டறியும் நிறுவனங்கள் ஆராய்ந்தன.
அப்போதுதான், இருவரும் சோகமாக அமர்ந்தபடி செல்பி எடுத்த புகைப்படம் கிடைத்தது. இந்த புகைப்படமும், பாஜகவினர் பகிர்ந்து விமர்சித்த புகைப்படமும் அச்சு அசலாக ஒரே மாதிரி இருந்தது. அதில் இருந்த போலீசார் கைதான மற்றவர்கள் அமர்ந்திருக்கும் விதத்தில் எந்த மாற்றமும் இல்லை.
இது குறித்து ஆராய்ந்தபோதுதான் Faceapp என்ற AI செயலியின் மூலம் வீராங்கனைகள் சிரித்துக்கொண்டு இருப்பதுபோல் எடிட் செய்து பகிர்ந்து இருக்கிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் இது குறித்து விளக்கமளித்து இருந்தார். ஏன் இந்த செல்பியை எடுத்தீர்கள் என்று கேட்டபோது, அவர்கள் எங்களை எங்கே அழைத்து செல்வார்கள் என்று தெரியாததால் இந்த செல்பியை எடுத்தோம் என்று சங்கீதா போகத் விளக்கமளித்து உள்ளார்.
இந்த நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடி கைதான வீராங்கனைகள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் அவர்கள் சிரித்துக்கொண்டு இருப்பதைபோல் புகைப்படத்தை எடிட் செய்து பரப்பியது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது. இத்தகைய செயலிகள் அச்சமூட்டுவதாக தகவல் புலனாய்வு பிரிவு இயக்குநர் பெஞ்சமின் ஸ்ட்ரிக் தெரிவித்துள்ளார்.
AI செயலிகளில் ஒன்றான FaceApp பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமாகி இருந்தாலும், இப்போது அதன் உண்மை முகத்தை காட்டத் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக பொய் செய்திகள் அதிகம் பரப்பப்படும் இந்த காலத்தில் அது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கும் சூழலில், நாட்டை திரும்பி பார்க்க வைத்த போராட்டத்தை நடத்திய மல்யுத்த வீராங்கனைகள் மீதே அவதூறு பரப்பப்படுவது பிபிசி உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களிலும் செய்தியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications