பாபர் மசூதி இடிப்பு, தாவூத் கூட்டாளி, பாலியல் புகார் +12 தொகுதிகள்- பிரிஜ் பூஷணும் பம்மும் பாஜகவும்!
டெல்லி: இந்திய தேசத்துக்கு சர்வதேச அரங்குகளில் பெருமை தேடித் தந்த மல்யுத்த வீராங்கனைகள் வீதிகளில் நின்று போலீஸ் ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு நீதிக்காக கண்ணீரும் கம்பலையுமாக கதறுவது 'ஜனநாயக' மனசாட்சிகளை உலுக்காமல் இருக்காது. இந்திய மண்ணுக்கு மகுடம் சூட்டிய மல்யுத்த வீராங்கனைகளைவிட பிரிஜ் பூஷண் என்ற ஒற்றை எம்.பி.யை அப்படி ஏன் பாதுகாக்க வேண்டும் பாஜக? என்பதுதான் தேசப்பற்றுமிக்க இந்தியர்களின் கேள்வி.
மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கூட வழக்கு பதிவு செய்யவே பெரும் போராட்டமாக இருந்து வருகிறது. பிரிஜ் பூஷணை கைது செய்து சிறையில் அடைத்தாக வேண்டும் என்பதற்காகவே மல்யுத்த வீராங்கனைகள் இடைவிடாமல் போராடுகின்றனர். ஆனால் பிரிஜ் பூஷண் மீது அப்படி எல்லாம் கை வைத்து சிறைக்குள் மத்தியில் ஆளும் பாஜக அரசால் அனுப்பிவிடமுடியாது.

கிரிமினல் பூஷண்: ஏன்? அப்படி என்ன பிரிஜ் பூஷணின் பின்னணி? சம்பல் பள்ளத்தாக்கை அதிரவைத்த பூலான் தேவி போலவோ சந்தனக் காட்டுக்குள் நின்று கொண்டு தென்னிந்திய மாநிலங்களுக்கு சவால்விட்ட ராபின் ஹூட் வீரப்பனைப் போலவோ அல்ல இந்த பிரிஜ் பூஷண்.. பக்கா கிரிமினல்.. நாடி நரம்பு ரத்தம் நாளம் எல்லாம் கிரிமினலாகவே ஊறிப் போனவர்தான் இந்த பிரிஜ் பூஷண். கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் அறிவிக்கப்பட்ட தாதா. அப்பாவிகளின் நிலங்களை அபகரிப்பதில் தொடங்கிய பிரிஜ் பூஷணின் கிரிமினல் ஹிஸ்டரி மெல்ல மெல்ல அரசியல் முகம் கொண்டது. நினைத்த போது எல்லாம் ஒரு கட்சியில் இணைந்து எம்பியாவது பிரிஜ் பூஷண் வாடிக்கை. 1991-ல் பாஜக லோக்சபா எம்பியானார். அதன்பின்னர் ஒருமுறை சமாஜ்வாதி கட்சி எம்பியானார். தற்போது வரை 6 முறை எம்பியாக இருக்கிறார்.
தாவூத் இப்ராஹிம் கூட்டாளி: கொடூரமான கிரிமினலான பிரிஜ் பூஷண், 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். 1996-ம் ஆண்டு மும்பை நிழல் உலக தாதாவும் 1993-ல் பல நூறு அப்பாவிகள் உயிரைக் குடித்த மும்பை தொடர் குண்டுவெடிப்பின் சூத்திரதாரியுமான தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியாக செயல்பட்டு வந்தது அம்பலமானதால் கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டார். உத்தரப்பிரதேச அரசியலில் கிரிமினல்கள் ஆதிக்கம் அதிகம் என்று சும்மா சொல்ல வேண்டாம்.. பிரிஜ் பூஷண் போன்ற உதாரண புருஷர்கள் அனேகம் பேர் அந்த மாநிலத்தில் உண்டு.

12 லோக்சபா சீட் அவுட்?: இந்த பிரிஜ் பூஷண் மீது கை வைக்க பாஜக அச்சப்பட காரணங்கள் ஆயிரம் உண்டு. கிழக்கு உத்தரப்பிரதேசத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் பிரிஜ் பூஷண். 50க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்துகிறேன் என்ற பெயரில் சட்டவிரோத சாம்ராஜ்ஜியத்தின் தலைவனாக இருப்பவர் பிரிஜ் பூஷண். ராஜபுத்திர ஜாதி வாக்குகளை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர். பிரிஜ் பூஷணை பகைத்துக் கொண்டால் 12 லோக்சபா தொகுதிகளை 2024 தேர்தலில் பாஜக மறந்துவிடத்தான் வேண்டும் என்ற நிலைமை உள்ளது. அதுவும் உ.பி.யில். இதனால்தான் பிரிஜ் பூஷணுக்கு லாடம் கட்டாமல் நீதி கோரி போராடும் இந்தியாவின் தங்க மங்கைகளை தரதரவென தெருவில் இழுத்துப் போட்டு மிதித்துக் கொண்டே போகிறது மத்தியில் ஆளும் பாஜகவும் அதன் பாதுகாப்பு படை பரிவாரங்களும்- ஆம் பிரிஜ் பூஷணுக்கு பாஜக தேவையானதாக இல்லை.. பாஜகவுக்குதான் பிரிஜ் பூஷண் தேவைப்படுகிறவராக இருக்கிறார்!












Click it and Unblock the Notifications