யஷ்வந்த் சின்ஹா VS திரௌபதி முர்மு - குடியரசுத் தலைவர் தேர்தலில் மோதும் பாஜக முன்னாள் நிர்வாகிகள்
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் இருக்கும் பலம் பலவீனம் அரசியல், நிர்வாக அனுபவங்களை சற்று அலசுவோம்.
Recommended Video
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9 ஆம் தேதி அறிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பணியில் ஆளும் பாஜகவும், காங்கிரஸ், திரிணாமூல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் முழு மூச்சாக இறங்கின.

குடியரசுத் தலைவர் வேட்பாளர்கள்
அதன் விளைவாக இன்று காலை முன்னாள் மத்திய அமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார்.

யஷ்வந்த் சின்ஹா VS திரௌபதி முர்மு
யஷ்வந்த் சின்ஹாவுக்கும் திரௌபதி முர்முவுக்கும் இடையே பல வேற்றுமைகளும் ஒற்றுமைகளும் உள்ளன. பீகாரில் பிறந்தவரான யஷ்வந்த் சின்ஹா முன்னேறிய வகுப்பை சேர்ந்தவராவார். அதே சமயம், திரௌபதி முர்மு ஒடிசா மாநிலத்தின் பின்தங்கிய பகுதியிலிருந்து வந்த பழங்குடியின பெண் ஆவார். இதன் காரணமாக பெண்கள் மற்றும் பழங்குடியின மக்களின் ஆதரவு கிடைக்கும் என்பது பாஜகவின் திட்டம். எந்த கூட்டணியிலும் இல்லாத பீகாரை ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏக்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் தங்களுக்கு விழும் என்பது பாஜகவின் நம்பிக்கை.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்
அதே நேரம் இருவருமே ஆசிரியர்களாகவும், அரசு பணியாளர்களாகவும் இருந்தவர்கள். பாட்னா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய யஷ்வந்த் சின்ஹா, ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று 24 ஆண்டுகள் பல்வேறு அரசு பதவிகளில் அங்கம் வகித்தவர். திரௌபதி முர்முவை பொறுத்தவரை பட்டப்படிப்பை முடித்த பிறகு ஆசிரியராக பணியாற்றியவர். அதன் பின்னர் அரசு ஊழியராக நீர்வளம் மற்றும் மின்சார துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றியவர்.

யஷ்வந்த் சின்ஹாவின் அரசியல் பயணம்
அதேபோல் இருவருமே அரசுப் பணியிலிருந்து விலகி அரசியலுக்கு சென்றவர்கள். யஷ்வந்த் சின்ஹா 1986 ஆம் ஆண்டு பாஜகவில் அகில இந்திய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் மத்திய நிதியமைச்சராகவும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் யஷ்வந்த் சின்ஹா. மோடி - அமித்ஷா மீதான அதிருப்தியால் அக்கட்சியிலிருந்து விலகிய யஷ்வந்த் சின்ஹா திரிணாமூல் காங்கிரஸில் இணைந்து அக்கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்றார்.

திரௌபதி முர்முவின் அரசியல் பயணம்
பாஜகவை சேர்ந்த திரௌபதி முர்முவும் கடந்த 2000 வது ஆண்டில் ஒடிசாவில் பாஜக, பிஜு ஜனதா தளம் கட்சி கூட்டணி ஆட்சி நடந்தபோது அமைச்சராக பதவியேற்றார். ஒடிசா மாநிலத்தில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், அதைத் தொடர்ந்து மீன்வளம் மற்றும் விலங்குகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து இருக்கிறார். அதன் பின்னர் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டார்.

ஏன் திரௌபதி முர்மு?
யஷ்வந்த் சின்ஹா தொடர்ந்து பாஜகவை கடுமையாக சாடி வருபவர். அதே நேரம் ஆளுநராக இருந்ததால் பாஜகவின் கட்சி செயல்பாடுகளில் ஒதுங்கி இருக்கும் திரௌபதி முர்மு, அக்கட்சியின் திட்டங்கள், கொள்கைகளின் ஆதரவாளராகவே உள்ளார். இனி நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வரும் புதிய மசோதாக்களுக்கு எந்த கேள்வியும் எழுப்பாமல் ஒப்புதல் அளிக்கும் சரியான நபரை தேடி வந்த பாஜக முர்முவை வேட்பாளராக அறிவித்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications