கிராமம் கிராமமாக கிரிக்கெட் போட்டி! இளைஞர்களை படைதிரட்ட வியூகம்! தர்மபுரி தொகுதியை குறிவைக்கும் பாமக
தருமபுரி: 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தருமபுரி தொகுதியை குறிவைத்து பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தருமபுரி நாடாளுமன்ற தொகுதி முழுவதும் கிராமம் கிராமமாக Dr AMR கிரிக்கெட் டோர்னமெண்ட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. டாக்டர் அன்புமணி ராமதாஸ் என்பதன் சுருக்கமே Dr AMR என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த 22ஆம் தேதி தொடங்கி கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூன் 4ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. முதல் பரிசாக 2 லட்சம் ரூபாய் ரொக்கமும் கோப்பையும் வழங்கப்படுகின்றன. அதேபோல் இரண்டாம் பரிசாக ஒரு லட்ச ரூபாய் ரொக்கமும் கோப்பையும், மூன்றாக பரிசாக 50,000 ரூபாய் ரொக்கமும் கோப்பையும் வழங்கப்படுகின்றன.

இந்த கிரிக்கெட் போட்டிகளில் தருமபுரி மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 1,000 அணிகள் பல்வேறு வயது நிலைகளில் பதிவு செய்து விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று வருகின்றனர். கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து கபடி போட்டிகளை நடத்தவும் அன்புமணி திட்டமிட்டுள்ளார்.
மொத்தத்தில் தருமபுரி மக்களவை தொகுதியில் இளைஞர்களை தன் பக்கம் படை திரட்டும் பணியில் அன்புமணி மும்முரமாக இறங்கியிருக்கிறார். கடந்த முறையில் திமுக வேட்பாளர் செந்தில்குமாரிடம் வெற்றியை பறிகொடுத்த அன்புமணி, வரும் தேர்தலில் மீண்டும் தருமபுரியை கைப்பற்றியே தீர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

இதனால் தான் அந்த தொகுதிக்கு திடீர் திடீரென்று விசிட் அடித்து வருகிறார். இதனிடையே தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மீண்டும் தர்மபுரியில் திமுகவை வெற்றிபெற வைக்க இப்போதே களப்பணிகளை தொடங்கிவிட்டார்.
இதனால் மற்ற தொகுதிகளில் என்ன நிலையோ தெரியவில்லை, தருமபுரி மக்களவை தொகுதியில் கோடை வெப்பத்துக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் அனல் பறக்க நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications