திண்டுக்கல் : போலீஸ் ஸ்டேஷனில் விஷம் குடித்த விவசாயி.. பறிபோன உயிர்.. பரபரப்பு புகார்
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே தன்னுடைய புகார் மீது போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என்று கூறி, விஷம் குடித்த விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயி தற்கொலை செய்து கொண்ட நிலையில் டிஎஸ்பி அலுவலகத்திற்கு நேரடியாக அவரது உறவினர்களை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் 3 பேரை போலீசார் கைது செய்தனர். என்ன நடந்தது, எதற்காக விவசாயி விபரீத முடிவெடுத்தார். இதற்கு என்ன காரணம் என்பதை இப்போது பார்ப்போம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பொடிசெட்டிபட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் பாண்டி வயது 52. இவர் அங்கு விவசாயம் செய்து வந்தார். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த நாச்சியப்பன் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்ததாம். மேலும் நில அபகரிப்பு தொடர்பாகவும் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது.

போலீஸ் நடவடிக்கை இல்லை
இதற்கிடையே பாண்டியின் மகன் சதீஷ் கண்ணன் தோட்டத்துக்கு சென்றபோது அவரை வழிமறித்த, நாச்சியப்பன் தரப்பினர் அவருக்கு கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்கள். இதுகுறித்தும் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. பாண்டி, சதீஷ் கண்ணன் இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் போலீஸாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

ஆனாலும் அலட்சியம்
இதனால் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார்களாம். ஆனாலும் விசாரணை நடத்தப்படவில்லையாம். இதையடுத்து நீதிமன்றத்தை நாடியபோது, போலீஸார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க நிலக்கோட்டை கோர்ட் உத்தரவிட்டதாம். ஆனால் அதையும் போலீஸார் அலட்சியப்படுத்தியதாக பாண்டி தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.

நிலக்கோட்டை
இதுகுறித்து பாண்டி, பிப்ரவரி 7-ம் தேதி அம்மையநாயக்கனூர் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமியிடம் கேட்டதாகவும் அவரும் முறையாக பதில் அளிக்கவில்லை என்றும் பாண்டியின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனிடையே விரக்தியடைந்த பாண்டி காவல் நிலைய வாசலில் விஷம் குடித்து மயங்கியதாக கூறப்படுகிறது. அவரை போலீஸார் நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிகிச்சை தாமதம்
ஆனால் அவரிடம் போலீஸார் யாரும் செல்லவில்லை என்றும் இதனால் மருத்துவமனையில் அவரைச் சேர்த்து சிகிச்சையளிக்க தாமதமானதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தகவலறிந்த டிஎஸ்பி முருகன், நிலக்கோட்டை போலீஸாரை அனுப்பி பாண்டியை சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார். இரண்டு நாள்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

3 பேர் கைது
இதனால் பாண்டியின் உறவினர்கள் கொதித்து போனார்கள். இதனிடையே போலீஸார், பாண்டியின் உறவினர்களை டிஎஸ்பி அலுவலகத்துக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாண்டி அளித்த புகார் அனைத்தையும் விசாரித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து விசாரிக்கிறோம் என்றும் உறுதி அளித்தார்கள். இதையடுத்து பாண்டி புகாரின் அடிப்படையில், வழக்கறிஞர் சங்கர், குல்லலக்குண்டைச் சேர்ந்த நாச்சியப்பன், சின்னக்கருப்பு ஆகியோரைப் போலீஸார் உடனடியாக கைது செய்தனர். விவசாயி அளித்த புகாருக்கு போலீஸார் உரிய விசாரணை நடத்ததால் தான், ஒரு உயிர் பலியானதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு கொடைரோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து போலீசார் விளக்கம் அளித்தால் தான் என்ன நடந்தது என்பது தெளிவாக தெரியவரும்.












Click it and Unblock the Notifications