ஆடு, மாடு வளர்க்கும் ஐபிஎஸ் அதிகாரி; பணி ஓய்வுக்குப் பிறகு விவசாயம் செய்யும் ரவி
திண்டுக்கல்: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ரவி பணி ஓய்வுக்குப் பிறகு தனது சொந்தக் கிராமத்தில் ஆடு, மாடுகளை வளர்ந்து கொண்டு விவசாயம் செய்து வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெரியப்பூர்தான் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவியின் சொந்த ஊர். இங்குதான் இவரது விவசாய நிலம் உள்ளது. இந்த வீட்டை 1927இல் கட்டி உள்ளனர். மிக அழகான ஓட்டு வீடு. சுற்றிலும் வயல்வெளிகள் எனப் பார்க்கவே இயற்கை சூழ்ந்து காணப்படுகிறது. "என் சின்ன வயதில் நாங்கள் 12 எருதுகள் வைத்திருந்தோம். அதைக் கட்டிதான் ஏர் உழுவோம். சுமார் 200 ஆடுகள் வளர்த்தோம். இப்போது பழைய மாதிரி கிராமத்தில் மக்கள் இல்லை. பலரும் வேலை வாய்ப்புக்காக நகரத்தை நோக்கிச் சென்று குடியேறிவிட்டார்கள்.

என் அப்பா 1977இல் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டிப் போட்டார். அப்போதே அப்பாவுக்கு 50 ஆயிரம் ரூபாய் செலவானது. அந்தக் காலகட்டத்தில் இங்கே காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கி இருந்தார். ஆனாலும் இங்கே அதிமுக வெற்றி பெறவில்லை. அப்பா காங்கிரஸ் சார்பாக நின்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தோல்வியைத் தழுவினார்.
அந்தத் தேர்தல் செலவுக்காக அப்பா 120 ஆடுகளை விற்றார். அதன் மூலம் 20 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. ஆடு வளர்ப்பது என்பது வேளாண்மை சார்ந்த ஒரு உபரி தொழில். அதன் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். இந்த வீட்டில்தான் நான் படித்தது, வளர்ந்தது எல்லாம். இன்று சென்னையில் உள்ள மிகப்பெரிய வீட்டில் வாழ்ந்தாலும், இந்தக் கிராமத்தில் உள்ள ஓட்டு வீட்டில் வாழ்ந்தபோது கிடைத்த மகிழ்ச்சிதான் மனதில் அப்படியே இருக்கிறது" என்கிறார். அவர் சொல்வதைப் போல அவர் வீட்டைச் சுற்றிலும் மிக அழகான மலைகள் உள்ளன. தென்னந்தோப்புகள் உள்ளன. அதிக மக்கள் நெரிசல் இல்லாமல் அமைதியாக உள்ளது. வீட்டுத் தோட்டத்தில் மிக இயல்பாக மயில்கள் வலம் வருகின்றன.
இவர் தோட்டத்தில் உள்ள பசு ஒரு கன்றை ஈன்றுள்ளது. அதையும் காட்டுகிறார் ரவி. பசு கன்று ஈன்றவுடன் கிடைக்கும் பால் புரதச்சத்து மிகுந்தது. அது உடல்நலத்திற்குச் சத்தானது என்கிறார். கூடவே வீட்டுத் தோட்டத்தில் பட்டிப் போட்டு செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். தான் ஓய்வு பெற்றாலும் இன்னும் வேளாண்மை மூலம் வேலை செய்து கொண்டே இருக்கிறேன் என்றும் தனக்கு ஓய்வே இல்லை என்றும் சொல்கிறார்.
இந்தக் கிராமத்து வீட்டில் படித்துத்தான் ஐபிஎஸ் ஆனேன் என்று சொல்லும் ரவி, ஒரு விவசாயியின் மகன் ஐபிஎஸ் ஆகிவிட்டான் என்று அன்றைக்குப் பலரும் கிராமத்தில் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். அந்தளவுக்குத்தான் கிராம மக்களின் நிலை இருந்துள்ளது. ஆகவே, இப்போதும் அந்த வீட்டை மறக்காமல் தனது பணி ஓய்வுக்குப் பிறகு சென்று விவசாயியாக வலம் வருகிறார்.
அவரே அங்கே உள்ள தோட்டத்தில் வேளாண்மை செய்தும் வருகிறார். சில வயல்கள் இன்னும் கரம்பைக் காடாக மாறி உள்ளது. 60 மற்றும் 70களில் இதைவிட இந்த நிலம் பசுமையாக இருந்தது என்கிறார். விரைவில் இதை முழுமையாக அதே நிலைக்குத் திரும்பக் கொண்டுவருவேன் என்கிறார்.

பலரும் படித்துவிட்டு விவசாயமே வேண்டாம் என டவுன் பக்கம் குடியேறி வரும் காலத்தில் இவர் இன்று மீண்டும் விவசாயம் செய்யச் சென்றுள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஒரு காலத்தில் அவர் ஐபிஎஸ் ஆக இருந்தபோது உடற்பயிற்சி பற்றிய டிப்ஸ்களை தருவதில் வல்லவராக இருந்தார். அவரது சென்னை வீட்டில் மாடியில் மிகப்பெரிய ஜிம் ஒன்றை வைத்து அதில் ஒர்க் அவுட் செய்து வந்தார். ஆகவே அவர் என்றும் இளமையாக இருந்து வந்தார். உடற்கட்டை மிகச் சிறப்பாக பராமரிப்பதில் ரவி கெட்டிக்காரர்.
இப்போது பணி ஓய்வுக்குப் பிறகு தனது காவல்துறை அனுபவங்களைத் தனது யூடியூப் மூலம் பகிர்ந்து இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார். இந்த சேனலை 4 லட்சத்திற்கு மேலானவர்கள் பின் தொடர்கிறார்கள். ஃபேஸ்புக் பக்கத்தில் 2.5 லட்சம் பேர் உள்ளனர். யுபிஎஸ்சி தேர்வுக்காக தயாராகும் நிறைய மாணவர்களுக்கு இவரது அனுபவம், வழிகாட்டல் உதவியாக இருப்பதால் லட்சக்கணக்கான மாணவர்கள் இவரது காணொளிகளைக் கண்டு ரசித்து வருகிறார்கள். சட்டம் சார்ந்த பிரச்சினைகள், நாட்டு நடப்பு பற்றிய அரசியல் ரீதியான விளக்கங்களை அவர் அதில் பேசி வருகிறார். அதற்கு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் ரவி.












Click it and Unblock the Notifications