தூக்குங்க.. நள்ளிரவில் கொடைக்கானலுக்குள் புகுந்த போலீஸ்! கபடி கோச் ராஜூவுக்கு காத்திருந்த ட்விஸ்ட்!
திண்டுக்கல்: சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த மகளிர் கபடி அணியின் பயிற்சியாளர் ராஜூ, இளம் கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த அவரை கொடைக்கானலில் பதுங்கியிருந்தபோது தனிப்படை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜூ மீது மேலும் சில மாணவிகள் புகார் அளிக்கலாம் என சொல்லப்படும் நிலையில், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை கண்ணகி நகர் பகுதியில் வசித்து வரும் 34 வயதான ராஜூ, மகளிர் கபடி வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளார். இந்த நிலையில், கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் ஒரு கபடி வீராங்கனை, செம்மஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராஜூ மீது பரபரப்பான புகார் அளித்தார்.
அந்த புகாரில், பயிற்சியாளர் ராஜூ தொடர்ந்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், தனது தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் மூன்று முறை வீட்டுக்கு வந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், வெளியே சொன்னால் இனி விளையாடவே முடியாது என மிரட்டி வந்ததாக கூறியிருந்தார்.

கபடி பயிற்சியாளர் ராஜூ
அதுமட்டுமின்றி, தன்னைப் போலவே மேலும் பல மாணவிகளும் ராஜூவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அவரிடம் பயிற்சி பெற்ற மாணவிகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், செம்மஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
தனிப்படை
வழக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ராஜூ தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை கைது செய்ய சென்னை காவல்துறை தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தது. இதற்கிடையில், கொடைக்கானல் பச்சை மரத்து ஓடை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ராஜூ பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார், நேற்று இரவு விடுதியில் தங்கியிருந்த ராஜூவை கைது செய்தனர்.
பாலியல் தொல்லை
பின்னர் அவரை பாதுகாப்புடன் சென்னை அழைத்து வந்த போலீசார், தற்போது செம்மஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் ஒரு முக்கிய திருப்பமாக, முதல் புகாரைத் தொடர்ந்து மற்றொரு மகளிர் கபடி வீராங்கனையும் ராஜூ மீது பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போலீசார் விசாரணை
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், ராஜூ பயிற்சி அளித்த விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற்ற மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோரிடமும் போலீசார் தகவல் சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதேபோன்று வேறு யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் முன்வந்து புகார் அளிக்கலாம் என்றும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடும் நடவடிக்கை
ஏற்கனவே பள்ளி கல்லூரி என பல இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பில் இருந்த ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வழக்கில் கைதான ராஜு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டுத்துறை வட்டாரங்களில் கோரிக்கை எழுந்துள்ளது.















Click it and Unblock the Notifications