ஆம்பளைங்க குடிகாரன் ஆயிட்டாங்க..விளம்பர உலகத்தில் வாழும் ஸ்டாலின்! டாக்டர்.கிருஷ்ணசாமிக்கு கோபம்!
திண்டுக்கல்: தமிழக மக்களின் வாழ்வு நிலை, பொருளாதாரம், இளைஞர் நலன் ஆகியவற்றின் நிலை குறித்து எதுவுமே தெரியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் விளம்பர உலகத்தில் வாழ்ந்து வருவதாகவும், சமீப காலமாக மதமாற்றம் என்பது அதிகரித்து வருகிறது என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்," தமிழகத்தில் பெருந்தெய்வ வழிபாட்டுக் கோவில், சிறுதெய்வ வழிபாட்டுக் கோவில் என ஆயிரக்கணக்கான கோவில்கள் தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் பெருந்தெய்வ வழிபாட்டுக் கோவில்களில் அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் சிறுதெய்வ வழிபாட்டுக் கோவில்கள் மற்றும் கிராமங்களில் உள்ள சிறு கோவில்களில் சாதி பாகுபாடு இன்னும் நீடித்து உள்ளது.

கிருஷ்ணசாமி விமர்சனம்
சிறு கோவில்களில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சென்று வருவது பெரும் பிரச்சனையாக உள்ளது. ஏற்கனவே இந்து மதத்தில் சாதிப் பாகுபாடு உள்ளது என்று கூறி மதமாற்றம் செய்யும் முயற்சியில் சர்வதேச சக்திகள் இயங்கி வரும் நிலையில், கிராம கோவில்களில் ஏற்பட்டுள்ள இது போன்ற பிரச்சனைகள் மதமாற்றம் செய்ய அதிகளவில் வாய்ப்பைக் கொடுக்கிறது. சமீப காலமாக மதமாற்றம் என்பது அதிகரித்து வருகிறது. எனவே மத்திய மாநில அரசுகள் கோவில்களில் சமநிலையை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் மதமாற்றம் செய்வதைத் தடுக்கும் வகையில் சட்டம் இயற்றவும் முன்வர வேண்டும்.
ஸ்டாலின் அரசு
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆண்கள் குடிக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை இழந்து வருகின்றனர். தமிழக அரசு டாஸ்மாக் வருவாயை அதிகப்படுத்தும் நோக்கிலேயே செயல்படுகிறது என்றும், இப்போதைய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2011, 2012ஆம் ஆண்டுகளில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது என்றும், தமிழக மக்களின் நலனைக் கருதி வருகிற ஜனவரி 14-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டாஸ்மாக் தடை
இல்லையென்றால் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்படும். வருகிற அக்டோபர் மாதம் 23ஆம் தேதி பழனியில் இருந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 நாட்களுக்கு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பொதுமக்களை சந்திக்க உள்ளேன். வருகிற 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய தமிழகம் கட்சியின் மாநாடு நடைபெற உள்ளது. அப்போதுதான் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து புதிய தமிழகம் கட்சி முடிவு எடுக்கும். இருப்பினும் ஒற்றைக் கட்சி ஆட்சி முறையை ஒழித்து கூட்டணி ஆட்சியை அமைப்பது ஒன்றே கொள்கை.
புதிய தமிழகம் கட்சி
கூட்டணி ஆட்சிக்கு சம்மதிக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைத்து புதிய தமிழகம் தேர்தலை சந்திக்கும். முதலமைச்சர் அயல் நாடுகளுக்குச் சென்று ஈர்த்த அயல்நாட்டு முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை கேட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வெள்ளைத் தாளைக் காட்டிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் செயல், அவர்களிடம் ஒன்றும் இல்லை என்பதைக் காட்டுகிறது. அயல்நாட்டு முதலீடு என்பது எதுவும் இல்லை... அது வெறும் வெற்றுக் காகிதம் என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் வெள்ளைக் காகிதத்தைக் காட்டியுள்ளார். திமுகவின் திட்டங்கள் தமிழக மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்கியுள்ளதை கண்டு மலைத்துப் போனதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறி இருப்பது அவர் தனி உலகத்தில், ஒரு கனவு உலகத்தில் வாழ்ந்து வருவதைக் காட்டுகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications