பாலத்துக்கு அடியில் கை மட்டும் தான் சிக்குச்சு.. மனைவியை மண்ணோடு புதைத்த கணவன்! திடுக் திண்டுக்கல்!
திண்டுக்கல் அருகே மனைவி மாயமாகி விட்டதாக கணவன் சொன்ன நிலையில் அவரை கொலை செய்து உடலை புதைத்ததாக அதிர்ச்சி தரும் தகவலை கூறி இருக்கிறார். உடலை புதைத்த இடத்தில் தற்போது நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், வருவாய் துறையினரும் காவல் துறையினரும் இணைந்து உடலை தேடினர். பல நாட்களாக தேடுதல் பணி நடைபெற்ற நிலையில், புதைக்கப்பட்ட பெண்ணின் உடல் பாகத்தை போலீசார் மீட்டுள்ளனர்.
திண்டுக்கல் அருகில் உள்ள இரண்டெல்லைப்பாறையை சேர்ந்தவர் லாரன்ஸ். வயது 36 வயதான கூலித் தொழிலாளியான இவருக்கு கவுசல்யா (32) என்ற மனைவியும், 5 மற்றும் 2 வயதில் பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன் மனைவியிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கவுசல்யா மாயமானார். இதற்கிடையே திண்டுக்கல் குட்டத்துபட்டியில் உள்ள அவரது பெற்றோர் கௌசல்யாவை பார்ப்பதற்கு அவரது வீட்டிற்கு வந்தனர்.
அப்போது கௌசல்யா அங்கு இல்லை. இதுகுறித்து கணவர் லாரன்ஸ்சிடம் கேட்ட போது முறையாக பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த கௌசல்யாவின் பெற்றோர் கடந்த அக்டோபர் 28ந் தாலுகா போலீஸ் நிலையத்தில் மாயமான தங்கள் மகளை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் லாரன்ஸை வரவழைத்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் லாரன்ஸ் அவரது மனைவியை பெற்றோர் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று கல்நூத்தாம்பட்டி அருகே கழுத்தை நெரித்து கொலை செய்து ரிங் ரோடு பணிக்காக கொட்டப்பட்டுள்ள மணல் குவியலில் மணலை தோண்டி புதைத்து வைத்ததாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கௌசல்யா உடல் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் 3 நாட்களாக சுமார் 30 அடி ஆழம் வரை பொக்லைன் எந்திரம் மூலம் தோன்டினர். அப்போது காணாமல் போன கௌசல்யாவின் கை எலும்பு மற்றும் சேலை கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் எலும்பு துண்டு மற்றும் சேலையை கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து நேற்று திண்டுக்கல் கோட்டாட்சியர் பழனிவேல், கிழக்கு தாசில்தார் பானுலட்சுமி,வருவாய் ஆய்வாளர் வினோத், அடியனூத்து வி.ஏ.ஓ. சிவப்பிரதாப் ஆகியோர் முன்னிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவக் குழுவினர் புதைக்கப்பட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கை எலும்பு மற்றும் சேலையை டி.என்.ஏ. ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
இதையடுத்து திண்டுக்கல் தாலுகா போலீசார் கௌசல்யா மாயமான வழக்கை,கொலை வழக்காக மாற்றி லாரன்ஸை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications
