செங்கல்பட்டு ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு தட்டுப்பாடு .. முதல்வருக்கு பாஜக கேள்வி
செங்கல்பட்டு: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான செய்தியை டேக் செய்துள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார்.

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதில் துவரம்பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் ரேஷன் கடைகளில் விரும்பி வாங்கும் அத்தியாவசிய பொருட்கள் ஆகும். தற்போது தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. கடந்த மாதத்தில் 3வது வாரத்தில் இருந்தே பாமாயில் கிடைக்கவில்லை. செஙகல்பட்டு பட்டு மாவட்டத்தில் துவரம்பருப்புக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வந்தள்ளதை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறுகையில், "நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு உறுதி செய்ய வேண்டும்!
ஏற்கனவே தமிழகத்தில் விஷம் போல ஏறிக் கொண்டிருக்கும் விலைவாசியால் சாமானிய மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கையில், தற்போது செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் பாமாயில், பருப்பு ஆகிய பொருட்கள் கிடைப்பதில்லை எனவும், தமிழகத்தின் பல நியாய விலைக்கடைகளில் முதியோருக்கான விலையில்லா வேட்டி, சட்டை வழங்கப்படவில்லை எனவும் வெளியாகியுள்ள செய்திகளை முதல்வர் விஜய் அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் இருக்கிறார்கள், ஆனால் 30 ஆயிரத்திற்கும் அதிகமான நியாய விலைக் கடைகள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளன. அப்படியிருக்கையில், அந்தக் கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை என்றால் மக்கள் எங்கு போவார்கள், என்ன செய்வார்கள்? நியாய விலைக் கடைகளில் ரூ. 30-க்கு விற்கும் துவரம் பருப்பையும் ரூ. 25-க்கு விற்கும் பாமாயிலையும், ரூ. 100 முதல் 150 வரை கொடுத்து மக்கள் வெளிச்சந்தையில் வாங்க முடியுமா? இது மக்கள் மீது அரசே வலுக்கட்டாயமாக திணிக்கும் நிதிச்சுமை இல்லையா?
அதுமட்டுமன்றி தீபாவளியை முன்னிட்டு முதியோருக்கான விலையில்லா வேட்டி சட்டை நேற்று முதல் அனைத்து நியாய விலை கடைகளிலும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில், ஒரு நாளிலேயே பல நியாய விலைக் கடைகளில் வேட்டி சட்டை எப்படி தீர்ந்து போகும்? தவெக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நியாய விலைக் கடைகளில் என்ன முறைகேடு நடந்து கொண்டிருக்கிறது?
எனவே, வழக்கம் போல இந்த விவகாரத்தையும் ஆளும் அரசு அசட்டை செய்யக் கூடாது எனவும், தீபாவளிப் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
