1970ல் கலைஞர் கொண்டுவந்த சட்டம்.. 1974 தீர்ப்பை 52 ஆண்டுகளுக்கு பிறகு உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு 1970-ல் கொண்டுவந்த கூடுதல் விற்பனை வரிச் சட்டத்தை உறுதி செய்த 1974 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பு, 52 ஆண்டுகளுக்குப் பின்னரும் சரியானதுதான் என்று உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வு நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.

கலைஞர் கருணாநிதி முதல் முறையாக 1969ல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனபிறகு, அவர் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை 1969 ஆம் ஆண்டு அன்றைய நிதி அமைச்சர் கே.ஏ. மதியழகன் சட்டசபையில் தாக்கல் செய்தார். அதையடுத்து 1970 - 71 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் கே.ஏ. மதியழகன் 1970 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்தார்.

After 52 Years Supreme Court Upholds Landmark Verdict on Kalaignar Govt s Additional Sales Tax Act

கூடுதல் விற்பனை வரி விதிக்கும் திட்டம்

இந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் கே.ஏ. மதியழகன் வாசித்து முடிக்கும் போது, மாநில அரசின் வருவாயை அதிகரிப்பதற்கான பல்வேறு வரி விதிப்பு மாற்றங்களை அதிரடியாக அறிவித்தார். மோட்டார் வாகனங்கள், குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை வரியை உயர்த்துவது, சிமெண்ட் உள்ளிட்ட சில பொருட்களுக்கான வரி விகிதங்களை மாற்றுவது, மோட்டார் வாகன வரி, பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான வரியில் மாற்றங்களைச் செய்வது என பல அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகளில் ஒன்றுதான் கூடுதல் விற்பனை வரி விதிக்கும் திட்டம்.

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த கூடுதல் விற்பனை வரிச் சட்டம், 1970-ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றது; மே 28 ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் விற்பனை செய்யும் வணிகர்கள், வழக்கமான விற்பனை வரியின் மீது 5 சதவீத கூடுதல் வரி செலுத்த வேண்டியிருந்தது. அந்தக் கூடுதல் வரியை வாடிக்கையாளர்களிடம் தனியாக வசூலிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு

இதனை எதிர்த்து வணிகர்கள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு கூடுதல் விற்பனை வரிச் சட்டத்தை எதிர்த்த மேல்முறையீடுகளுடன், கேரள மாநிலத்தின் வரிச் சட்டம் தொடர்பான வழக்கும் சேர்த்து விசாரிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம், 'கூடுதல் விற்பனை வரி என்பது, வரியின் விகிதத்தை உயர்த்துவதே ஆகும். இது வருமான வரி அல்ல' என கூறி, மாநில பட்டியலின் கீழ், மாநில அரசுகளுக்கு கூடுதல் வரி விதிக்க முழு அதிகாரம் உள்ளது' என தீர்ப்பளித்தது.

எஸ். கோடார் vs கேரள மாநில அரசு (S. Kodar vs State of Kerala) என்ற வழக்கின் பெயரில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியானது. 1974-ஆம் ஆண்டு தலைமை நீதிபதி ஏ.என். ரே, நீதிபதிகள் கே.கே. மேத்யூ, ஏ. அழகிரிசாமி, பி.கே. கோஸ்வாமி, ஆர்.எஸ். சர்க்காரியா ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.

1974ல் அளிக்கப்பட்ட தீர்ப்பு

கூடுதல் விற்பனை வரி என்பது வணிகர்களின் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரி அல்ல; பொருட்களின் விற்பனை மீதான வரிதான். எனவே, அரசியல் சாசனத்தின் 7-வது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலின் 54-வது பிரிவின்படி இந்த வரியை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கூடுதல் வரியை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் மட்டும் வணிகர்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்படுவதாகக் கூற முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது. கூடுதல் விற்பனை வரிச் சட்டத்தை எதிர்த்த மேல்முறையீடுகளைத் தள்ளுபடி செய்து, அன்றைய திமுக அரசு கொண்டுவந்த சட்டத்தின் செல்லுபடியை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

ஒடிசா வழக்கு

கலைஞர் கருணாநிதி அரசு 1970 ஆம் ஆண்டு கொண்டு வந்ததைப் போன்ற கூடுதல் விற்பனை வரி விதிப்பு முறையை ஒடிசா அரசும் 1990-ஆம் ஆண்டு கொண்டுவந்தது. ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மொத்த வர்த்தக வருவாய் கொண்ட வணிகர்களுக்கு, 10 சதவீதம் முதல், 15 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்பட்டது. ஒடிசா அரசின் இந்தக் கூடுதல் வரியை எதிர்த்து அர்ஜுன் ஃப்ளவர் மில்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடின.

இந்த வழக்கில் 1974 ஆம் ஆண்டு கோடார் vs கேரள அரசு வழக்கு தீர்ப்பு மீண்டும் விவாதத்துக்கு வந்தது. 1999 ஆம் ஆண்டு இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. எஸ்.கோடார் வழக்கின் தீர்ப்பு சரியாக வழங்கப்பட்டதா? மாநில அரசுகளுக்கு உண்மையிலேயே கூடுதல் வரி விதிக்க அதிகாரம் உள்ளதா? என்பதை மறு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் முடிவெடுத்தது.

7 நீதிபதிகள் அமர்வு

1974 ஆஆம் ஆண்டு கோடார் தீர்ப்பும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வால் வழங்கப்பட்டிருப்பதால், அந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமானால் அதைவிட கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு தேவை என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்பப்பட்டது.1999-ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட வழக்கில்தான் 27 ஆண்டுகளுக்குப் பின்னர், நேற்று நவம்பர் 4 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன், எஸ்.வி.என். பட்டி, ஜாய்மால்ய பாக்சி, என்.வி. அஞ்சாரியா, அருண் பள்ளி, வி. மோகனா ஆகிய 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் எழுதிய தீர்ப்பை மேலும் 5 நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். நீதிபதி கே.வி. விஸ்வநாதன் தனியாகத் தீர்ப்புரை எழுதினார். எனினும் 7 நீதிபதிகளுமே ஒருமித்த கருத்தையே வெளிப்படுத்தி உள்ளனர்.

52 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உறுதி

கோடார் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதையே 7 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு உறுதிப்படுத்தியுள்ளது. ஒடிசா வழக்கில் எழுப்பப்பட்ட பிரதான கேள்வியான மாநிலங்களுக்கு கூடுதல் வரி விதிக்க அதிகாரம் உள்ளதா என்பதற்கு, 1974 ஆம் ஆண்டின் 'எஸ்.கோடார்' தீர்ப்பே இன்னமும் செல்லுபடியாகும் என தீர்ப்பளித்து, உச்ச நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

அதாவது கூடுதல் விற்பனை வரி என்பது உண்மையில் பொருட்களின் விற்பனை மீதான வரிதான் என்ற அந்தக் கருத்து இன்றும் பொருந்தும் என்று 7 நீதிபதிகள் அமர்வு ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும், 2017ல் ஜிஎஸ்டி வரி நாடு முழுதும் அமல்படுத்தப்பட்டுவிட்டது. எனவே இந்த வழக்கு நடைமுறை முக்கியத்துவத்தை இழந்துவிட்டது. கூடுதல் வரி விதிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்விக்கு தற்போது பதில் அளிக்க வேண்டிய அவசியமே எழவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

1970 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் வருவாயைப் பெருக்கவும், அதிக அளவில் வணிகம் செய்பவர்கள் அதற்கேற்ப வரி செலுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும் கலைஞர் அரசு கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்த வழக்குக்கு, 1974 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், கலைஞர் அரசின் முடிவுக்கு அங்கீகாரம் அளித்தது. இன்று, 52 ஆண்டுகளுக்குப் பின்னரும் அந்தத் தீர்ப்பு சரியானதுதான் என்று 7 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+