மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காத மதுரை தவெக எம்எல்ஏ.. அமைச்சருடன் காட்டும் நெருக்கம்.. என்ன நடக்குது?
மதுரை: மதுரையில் மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காத ஒரே எம்எல்ஏ-வான கோபிசன், அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரின் ஆதரவாளராக மாறி வருவதாக அக்கட்சியினர் பேசத் தொடங்கி உள்ளனர். இதனால் மாவட்டச் செயலாளர் கல்லாணை மற்றும் கோபிசன் இடையிலான மோதல் தொடர்ந்து வருவதாக பார்க்கப்படுகிறது.
மதுரை தவெகவில் கோஷ்டி பூசல் உச்சத்தில் இருந்து வருகிறது. தேர்தலுக்கு முன் கல்லாணை, தங்கப்பாண்டி மற்றும் மருதுபாண்டி ஆகிய மூவர் மட்டுமே மாவட்டச் செயலாளர்களாக பொறுப்பு வகித்தனர். இதில் மருதுபாண்டியன் தொகுதி சிடிஆர் நிர்மல்குமார் போட்டியிட்டதால், மருதுபாண்டியன் போட்டியிடவில்லை. இதன்பி அவர் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரின் நிழலாக மாறிவிட்டார்.

ஆனால் அமைச்சர் பதவி இல்லாததால் கல்லாணை மற்றும் தங்கப்பாண்டி உள்ளிட்டோருக்கு தவெகவினர் மத்தியில் மரியாதை குறைந்தது. அதுமட்டுமல்லாமல் எம்எல்ஏ-க்கள் அனைவரும் மாவட்டச் செயலாளர் பதவி கேட்டு தலைமையிடம் கோரிக்கை வைத்தனர். இதன்படி மதுரையில் எம்எல்ஏ கோபிசன் தவிர்த்து 8 மாவட்டச் செயலாளர்கள் இருக்கின்றனர்.
மதுரை தெற்கு மாவட்டச் செயலாளராக கல்லாணை தொடர்ந்து வருகிறார். கோபிசன் தரப்பில் மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு நிர்வாகிகள் நியமனம் செய்து பரிந்துரை கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தவெக தலைமை கண்டு கொள்ளவே இல்லை. இதனால் கல்லாணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய சூழல் கோபிசனுக்கு இருந்து வருகிறது.
ஆனால் அமைச்சர் பதவிக்காக கல்லாணை, தங்கப்பாண்டி மற்றும் கோபிசன் இடையில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் கல்லாணை மற்றும் கோபிசன் இடையில் மோதல் நிலவி வருகின்றன. கோபிசனுக்கு தொகுதிக்குள் பெரியளவில் ஆதரவு இல்லை என்றாலும், தேர்தல் வெற்றிக்கு பின் ஆதரவு வட்டத்தை உருவாக்கி வருகிறார்.
அதேபோல் என்ஜிஓ-க்களை கொண்டு வருவது பலரின் கவனத்தை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாவட்டச் செயலாளர் கல்லாணையை நேரடியாக எதிர்த்தால், அது புஸ்ஸி ஆனந்த் காதுகளுக்கு செல்லும். இதனால் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் ஆதரவாளராக கோபிசன் மாறிவிட்டதாக அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சுகள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications
