பாஜகவின் முகமாக உருமாறிய சீமான்... நாம் தமிழர் கட்சிக்கு குட் பை- திமுகவில் திண்டுக்கல் நிர்வாகிகள்!
திண்டுக்கல்: பாரதீய ஜனதா கட்சியின் (பாரதிய ஜனதா கட்சி) முகமாகவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாறிவிட்டதாக கூறி நாம் தமிழர் கட்சியில் இருந்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் விலகி உள்ளனர். மேலும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகள், தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் செயலாளர் வினோத் ராஜசேகரன், இளைஞர் பாசறை செயலாளர் இமானுவேல், பழனி தொகுதி செயலாளர் ஈஸ்வரன், தொழிற்சங்க செயலாளர் டேவிட் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளனர். நாம் தமிழர் கட்சியில் இருந்து மொத்தமாக வெளியேறிய அவர்கள், திண்டுக்கல் திமுக அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

பாஜகவின் முகம்
பாஜகவின் முகமாக, பாஜகவின் சங்கியாக மாறிவிட்டார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். பொதுக் கூட்டங்களில் பேசும் பொழுது பாஜகவை கடுமையாக பேசுகிறார் சீமான். ஆனால் திரைமறைவில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு செயல்படுகிறார்.

பாஜகவுடன் கூட்டணி
பொதுக் கூட்டங்களில் பாஜகவை பற்றி தவறாக பேசக்கூடாது என எங்களிடம் கூறினார். இன்று 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜகவை ஆதரிப்பேன் என்கிறார். நாளை தமிழர் நிலத்தில் நின்று கொண்டு பாஜகவை ஆதரிப்பேன் என சீமான் பேசுவார். இதை எங்களால் ஏற்க முடியாது.

ஜாதியும் நாம் தமிழரும்
மேடைகளில் ஜாதிக்கு எதிராக சீமான் பேசுகிறார். ஆனால் நாம் தமிழர் கட்சிக்குள் ஜாதிய கட்டமைப்புதான் உள்ளது. ஜாதி அடிப்படையில்தான் நாம் தமிழர் கட்சியில் பொறுப்புகளே வழங்கப்படுகின்றன. வேட்பாளர்களும் அறிவிக்கப்படுகின்றனர். சீமான் மோசடியான அரசியல் செய்து வருகிறார். சீமானை நம்பி ஏராளமான இளைஞர்கள் தங்களது வாழ்க்கையையே தொலைத்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு வினோத் ராஜசேகரன் கூறினார்.

கூண்டோடு விலகல்
இந்த நிகழ்ச்சியில் பழனி எம்.எல்.ஏ. ஐ.பி.செந்தில்குமார் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கூண்டோடு நாம் தமிழர் கட்சியினர் வெளியேறி உள்ளனர். இது திமுகவுக்கு பலத்தை தரும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications