நாய் போல குரைத்து கடிக்க பாய்ந்த இளைஞர்.. அலறியடித்து ஓடிய நர்ஸ்.. அரக்கோணம் போல திண்டுக்கல்லிலும்
திண்டுக்கல்: வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பலர் தமிழகத்துக்கு வேலை வாய்ப்புக்காக தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளனர்.. பிழைப்பு தேடி இவர்கள் இங்கு வந்து குடும்பம் குடும்பமாக வாழ்ந்தும் வருகிறார்கள்.. எனினும் இவர்களில் சிலரது நடவடிக்கைகள் வித்தியாசமாக அமைந்துவிடுவதுடன், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலை தந்து விடுகிறது. அந்தவகையில், திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் நாய் போல குரைத்தபடி சக பயணிகளை கடிக்க பாய்ந்த பீகார் இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.
திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் அனந்தபுரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ஜெனரல் கம்பார்ட்மென்ட்டில் பயணித்த வடமாநில இளைஞர் ஒருவர், திடீரென பயணிகளை பார்த்து நாய் போல குரைக்க துவங்கினார்.

கடிக்க முயன்ற நபர்
இதைப்பார்த்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.. மேலும் சிலர் கலக்கமடைந்தனர்... எல்லாரையும் பார்த்து குரைத்து கொண்டேயிருந்த அந்த நபர், திடீரென சக பயணிகளை கடிக்க முயற்சிப்பது போன்ற செயலில் ஈடுபட்டார்.
இதனால் பயந்துபோன பயணிகள் அங்கிருந்து, வேறு இடத்துக்கு அலறியடித்து கொண்டு ஓடினார்கள்..
பிறகு இதுகுறித்து திண்டுக்கல் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதற்குள் அந்த ரயில், திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துவிட்டது.. அப்போது அங்கு தயாராக இருந்த ரயில்வே போலீசார், சம்பந்தப்பட்ட பயணியை பிடித்தனர்... அப்போதும் அந்த நபர் ஆக்ரோஷமாகவே காணப்பட்டார்.. இதனால் பொதுமக்களை அவர் கடித்து கடித்துவிடாமல் இருக்க முகம், கை, கால்களை துணியால் கட்டினார்கள்..
நர்ஸ்களிடமும் ஆக்ரோஷம்
பிறகு அந்த நபரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.. அங்கு டாக்டர்கள் அந்த இளைஞருக்கு சிகிச்சை அளிக்க முன்வந்தனர்.. அப்போதும்கூட, டாக்டர்களிடமும், நர்ஸ்களிடமும் அந்த இளைஞர் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது..
பிறகு அவர் யார் என்று திண்டுக்கல் போலீசார் விசாரித்தபோது, அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுரேந்தர் என்பது தெரியவந்தது. இவருக்கு என்ன நடந்தது? ஏற்கனவே உடல்நலக் கோளாறு இருந்ததா? என்று தெரியவில்லை.. அது தொடர்பான விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பயணியால் திண்டுக்கல் ரயில் பயணிகள் மத்தியில் பீதியும் அச்சமும் ஏற்பட்டுவிட்டது.
நாயை போல குரைத்த நபர்
இப்படித்தான், சில மாதங்களுக்கு முன்பு அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனிலும் இதேபோன்ற சம்பவம் நடந்தது.. வட மாநில இளைஞர் ஒருவர் ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்ததுமே, ஒரு இடத்தில் உட்காராமல் அங்குமிங்கும் சுற்றிக்கொண்டேயிருந்தார்.. நாற்காலிகள் காலியாக இருந்தும்கூட உட்காராமல் நடந்து கொண்டேயிருந்ததை அங்கிருந்தவர்கள் கவனித்தனர்.
பிறகு திடீரென அந்த இளைஞர் நாயை போல குரைக்க ஆரம்பித்தார்.. பிறகு மற்ற விலங்குகள் நடப்பது போலவே, பிளாட்பாரத்தில் நடக்க ஆரம்பித்தார்.. பிளாட்பாரத்தில் வைக்கப்பட்டிருக்கும் குழாயில் வந்த தண்ணீரை வித்தியாசமாக குடிப்பது போன்று பாவனைகள் செய்தார். ஒவ்வொரு நிமிஷமும் புதுபுது சேஷ்டைகளை செய்து கொண்டிருப்பதை பார்த்து பயணிகளும், ரெயில்வே ஊழியர்களும் கலக்கமடைந்தனர்.
அதற்குள் கையில் லத்தியுடன் போலீசார் வந்தனர்.. அவர்களை பார்த்ததுமே, அந்த வட மாநில இளைஞர் அங்கிருந்து வேகமாக ஓடி, ரெயில்வே அதிகாரி ஆபீசிற்குள் புகுந்துவிட்டார்.. எனவே, போலீசாரும் அந்த அலுவலகத்துக்குள் நுழைந்தபோது, அங்கிருந்த மேஜையின் அடியில் படுத்துக்கொண்டார்.
அரக்கோணம் அண்ணன்
பிறகு அவரை வெளியே அழைத்து வந்து போலீசார், அவரிடமிருந்த பெட்டியை ஆய்வு செய்தனர்.. ஒரு துண்டு சீட்டில் செல்போன் நம்பர் இருக்கவும், அதற்கு போன் செய்தார்கள். செல்போனில் பேசியவர், வடமாநில இளைஞர் தன்னுடைய தம்பி என்றார்.. உடனே அரக்கோணத்தில் தங்கியிருந்த அந்த அண்ணனை ஸ்டேஷனுக்கு வரும்படி போலீசார் சொன்னார்கள்..
இதனிடையே, ரெயில்வே டாக்டர் அந்த இளைஞரை பரிசோதனை செய்தனர். ஆனால், அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை, நன்றாக தான் உள்ளார், ஏதாவது விரக்தியில் இப்படியெல்லாம் செய்திருக்கலாம் என்றார்..
ஏன் சேஷ்டைகள்
அதற்குள் இளைஞரின் அண்ணனும் அங்கு வந்துவிடவும், அவரிடம் விசாரித்தனர்.. அந்த இளைஞர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரபு குமார் ஷர்மா என்பதும், வேலை வாய்ப்பு எதுவும் இல்லாததால், தன்னை தேடி பீகாரிலிருந்து அரக்கோணம் வந்துள்ளதாகவும் கூறினார்.
ஏன் இப்படியெல்லாம் சேஷ்டைகள் செய்கிறார் என்று போலீசார் கேட்டதற்கு, தனக்கு எதுவும் தெரியாது என்றார் அண்ணன்... பிறகு, அண்ணனிடம் கடிதம் மூலம் எழுதி வாங்கிக்கொண்டு ரெயில்வே போலீசார், தம்பியை அவருடன் பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமும் அப்போது அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை தந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications