நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!
திண்டுக்கல்: நாங்கள் (அதிமுக) பத்தாயிரம் ரூபாய் தருவோம் என்று சொல்லியிருக்கிறோம். அவர்கள் (திமுக) எட்டாயிரம் என்கிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால், 'அத்தைக்கு மீசை வச்சு சித்தப்பான்னு கூப்பிடுற மாதிரி' இருக்கு எனவும், மக்கள் எதை நம்ப வேண்டுமோ? அதைத்தான் நம்புவார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி திண்டுக்கல் பேருந்து நிலையம் பின்புறம் பகுதியில் திண்டுக்கல் அதிமுக தேர்தல் அலுவலகத்தை அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்," இறைவன் அருளால் எங்களுடைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி அறிவித்தபடி, அதிமுக, இந்திய தேசிய ஜனநாயகக் கூட்டணியினுடைய வேட்பாளராக திண்டுக்கல் தொகுதிக்கு அறிமுகப்படுத்துவதில் நான் இன்று மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
அதிமுக-வின் வெற்றி 234 தொகுதிகளிலும் எழுதப்பட்ட ஒன்று. ஏற்கனவே அதிமுக சார்பாக பொதுச்செயலாளர் எடப்பாடி சொல்லியபடி, 210 தொகுதிகளில் நிச்சயமாக அதிமுக வெற்றி பெற்று முதலமைச்சர் பொறுப்பை எடப்பாடியார் ஏற்று அவர் தலைமையிலே ஆட்சி நடக்கும், நடக்கும், நடக்கும். திண்டுக்கல்லில் அதிமுக வெற்றி எழுதப்பட்ட ஒன்று. மக்களின் அன்பால், ஆசியால் அனைத்து மக்களும் சேர்ந்து மீண்டும் என்னை தேர்ந்தெடுப்பார்கள். வெற்றி நிச்சயம், நிச்சயம்.

எடப்பாடியார் அவர்களின் தேர்தல் அறிக்கை மக்களிடம் சிறப்பாக சென்றடைந்துள்ளது. மக்கள் வாயார வாழ்த்துகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் குடும்பத் தலைவிகளுக்கு தருவதாகச் சொல்லியிருக்கார். அரிசி அட்டைக்கு இரண்டு ஆயிரம் ரூபாய் தருவதாகச் சொல்லியிருக்கார். கல்விக்கடன் ரத்து என என்னென்ன சொல்லியிருக்காரோ அதைச் சொல்லி நிறைவேற்றுகிற உத்தமர் எடப்பாடியார். எனவே மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
திண்டுக்கல் சீனிவாசனை எதிர்த்து திமுக அமைச்சர் ஐ பெரியசாமி மகன் ஐபி செந்தில்குமார் நிறுத்தி இருக்கிறது திமுக. என்னை எதிர்த்து நிற்பவர்கள் யாராக இருந்தாலும் கவலையில்லை. ஐந்து தடவை எம்.பி., போட்டியிட்டு நான்கு முறை வெற்றி பெற்றுள்ளேன். இரண்டு முறை எம்.எல்.ஏ., அமைச்சர் என இத்தனை அனுபவங்களோடு மூன்றாவது முறையாக இந்த தொகுதியில் நிற்கிறேன். கடந்த முறையை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள்.
திமுக எப்பொழுதுமே எங்களுக்கு எதிரிதான். அவர்கள் நேராக வந்தாலும் சரி, வளைந்து வந்தாலும் சரி, அவர்களது கூட்டணியில் யார் வந்தாலும் அது திமுக-தான். எங்களது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடியார் ஆகியோரின் ஆசியுடன் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி. தேர்தல் ஆணையத்தின் விதிகளை அதிமுக தொண்டர்கள் முழுமையாக மதிப்பார்கள். சட்டத்திற்கு உட்பட்டு நடப்போம்.
திமுக-வின் தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. அவர்கள் என்னதான் சொன்னாலும் மக்கள் அதை நம்பப்போவதில்லை. நாங்கள் பத்தாயிரம் ரூபாய் தருவோம் என்று சொல்லியிருக்கிறோம். அவர்கள் எட்டாயிரம் என்கிறார்கள். இது எப்படி இருக்கு என்றால், 'அத்தைக்கு மீசை வச்சு சித்தப்பான்னு கூப்பிடுற மாதிரி' இருக்கு. மக்கள் எதை நம்ப வேண்டுமோ அதைத்தான் நம்புவார்கள்.
தவெக வேட்பாளர் அறிவிப்பு பற்றி நான் பார்க்க வில்லை. பார்த்தால்தான் அதைப்பற்றி பேச முடியும். திமுக தேர்தல் அறிக்கை தான் ஹீரோ என மு க ஸ்டாலின் கூறியுள்ளார். ஒரிஜினல் கதாநாயகன் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எங்களுடைய கூட்டணியில் டாக்டர் அன்புமணி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், டிடிவி தினகரன், ஏசி சண்முகம், ஜான் பாண்டியன் என அனைத்து கட்சித் தலைவர்களும் ஒருங்கிணைந்து எங்களது வெற்றிக்கு பாடுபடுவார்கள். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஜோசியரை பிடித்துள்ளேன். வேட்பு மனு ரகசியமாக செய்ய முடியாது. நல்ல நாள் பார்த்து வேட்பு மனு செய்ய வேண்டும்" என கூறினார்.












Click it and Unblock the Notifications