மலைக்கோட்டை மாநகரின் முதல் பெண் மேயர் இவர்தானா? பரபரக்கும் திண்டுக்கல்..திமுகவில் இணைந்த சுயேட்சைகள்
திண்டுக்கல் : நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திண்டுக்கல் மாநகராட்சியை தனிப் பெரும்பான்மையுடன் திமுக கைப்பற்றியுள்ள நிலையில் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் 21மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் உட்பட உள்ளாட்சி அமைப்புகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது.
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது போல திண்டுக்கல் மாநகராட்சியிலும் திமுக தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சி
திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 48 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன . குறிப்பாக மாநகராட்சியை கைப்பற்ற தேவையான 25இடங்களுக்கும் 5 இடங்கள் கூடுதலாக அதாவது 30 வார்டுகளில் திமுக தனித்தே வென்றுள்ளது. திமுக 30 இடங்களிலும், கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும், இந்திய காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி , விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

தனிப்பெரும்பான்மையுடன்
பிரதான எதிர்கட்சியான அதிமுக 5 இடங்களிலும், தனித்து போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. ஆச்சரியம் அளிக்கும் வகையில் திண்டுக்கல் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட சுயேச்சைகள் 5 இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர். மேலும் திண்டுக்கல் மாநகராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 41வது வார்டு விமலா ஆரோக்கியமேரி, 44 வது வார்டு மார்த்தாண்டன், 38வது வார்டு வசந்தி, 46வது வார்டு குலோத்துங்கன் ஆகியோர் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். திண்டுக்கல் மாநகராட்சியில் திமுக கூட்டணியின் பலம் 41ஆக உயர்ந்துள்ளது.

தயாரான திமுக
அதே நேரத்தில் திமுக சார்பில் மேயர் வேட்பாளர் யார் என இதுவரை தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் தெரியாத அளவு ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உள்ள சூழ்நிலையில் ஐ.பெரியசாமி ஆசி பெற்ற வேட்பாளராக கருதப்படும் இந்திராணி என்பவர் மேயராக ஆவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக மூத்த உடன் பிறப்புகள் கூறி வருகின்றனர். அவர் இல்லையெனில் முன்னாள் ஒன்றிய சேர்மன் சந்திரசேகரனின் மருமகளான சரண்யா, அடுத்ததாக முன்னாள் சேர்மன் பெருமாள்சாமியின் மனைவிக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

துணை மேயர் பதவி
அதேபோல் துணை மேயராக யார் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள் என்பதும் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி திண்டுக்கல் திமுகவின் மூத்த நிர்வாகியும் நகர செயலாளருமான ராஜப்பா துணை மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும், அதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக திமுகவினர் கூறி வருகின்றனர். அதேபோல திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் மூன்று முறை தொடர்ந்து வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆனந்த ஜோதி துணை மேயராக தேர்ந்தெடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தொடங்கிவிட்ட நிலையில் மார்ச் 4ஆம் தேதி அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications