தமிழகத்தில் ஒரே வாரத்தில் ஒழிந்த ஊழல்.. இன்னும் 60 நாள் டைம் குடுங்க: ஆதவ் அர்ஜுனா அதிரடி
சென்னை: தமிழக நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்களை முன்னெடுத்துள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஒரே வாரத்தில் ஊழலை ஒழித்துள்ளதாகப் பெருமிதத்துடன் அறிவித்துள்ளார். தமிழகத்தின் சீரமைப்பிற்கு இன்னும் 60 நாட்கள் மட்டும் அவகாசம் கொடுங்கள், முழுமையான நிர்வாக மாற்றத்தைக் கண்முன்னே காட்டுவோம் என்று அவர் விடுத்துள்ள சவால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் ஆளுநர் உடனான விவகாரங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.

தமிழகத்தின் நிர்வாக கட்டமைப்பை சீரமைக்க அரசு எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் குறித்தும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலும் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அரசின் செயல்பாடுகள் மற்றும் ஆளுநர் விவகாரம் குறித்துப் பேசியதாவது:
ஆதவ் அர்ஜூனா சொன்ன தகவல்
"தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து முதல் நாளே முதல்வர் விஜய் கவர்னரிடம் 5 நிமிடங்கள் பேசினார். எங்கள் கட்சியின் பெயரே தமிழக வெற்றிக் கழகம்தான். தமிழ்தான் எங்களுக்கு முதன்மை என்பதை அவரிடம் தெளிவாகக் கூறிவிட்டோம்.
ஆனால், வந்தே மாதரம் முதலில் பாடப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து சுற்றறிக்கை வந்திருப்பதாக கவர்னர் தெரிவித்துவிட்டார். தமிழக அரசு சார்பில் இதுவரை அரசு நிகழ்ச்சிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இனி அவை நடக்கும்போது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாடப்படும்.
சி.ஜோசப் விஜய் என்று சொல்லி ஓட்டு கேட்டு, மத அரசியலை எங்கள் தலைவர் தூக்கி எறிந்திருக்கிறார். தமிழ்நாட்டு மக்களும் சாதி, மத அரசியலைத் தூக்கி எறிந்துவிட்டார்கள்.
ஒரே வாரத்தில் ஒழிந்த ஊழல்
சமூகநீதி அடிப்படையிலான இந்த அமைச்சரவையை மக்கள் கொண்டாடுகின்றனர். 60 நாட்களில் அனைத்தையும் மாற்றி காட்டுவோம். மிகப்பெரிய நிர்வாக மாற்றம் இருக்கும். பல்வேறு துறைகளில் 35% வரை வசூலிக்கப்பட்ட கட்சி நிதி முறையை ஒழித்துள்ளோம். தூர் வாராமல் வாரியதாக பில் போட முடியாது. பினாமி பில் முறையை ஒழிப்போம். தவறுகளை கண்டறிந்து வருகிறோம். விரைவில் மாற்றுவோம். தமிழகத்தில் ஒரே வாரத்தில் ஊழல் ஒழிந்தது.
மக்கள் சாதியின் அடிப்படையில் வாக்களிப்பதில்லை. சாதி பார்த்து தவெக யாரையும் முன்நிறுத்தவில்லை. ஆனால் அமைச்சர்களின் சாதியை வைத்து எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்கின்றன.
அறநிலையத்துறைக்கு இந்த சாதியில் இருந்து அமைச்சரை நியமித்துள்ளதாகச் சொல்கிறார்கள். ரமேஷை அமைச்சர் ஆக்கும் வரை அவர் என்ன சாதி என்றே எங்களுக்குத் தெரியாது. தேர்தலில் எந்த வித அடிப்படையும் இல்லாமல், கடுமையாக உழைத்தவர்களுக்குத் தலைவர் விஜய் இடம் கொடுத்துள்ளார்.
18 மணி நேரம் உழைக்கும் நிர்மல்குமார்
ஆ.ராசாவின் பதிவை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். திருமாவிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். எல்லாவற்றிற்கும் குரல் கொடுக்கும் கனிமொழி இதனை கண்டிக்க வேண்டும். பொதுவெளியில் இது போன்ற சொற்களைப் பயன்படுத்துகிறவர்கள் மீது புகார் கொடுத்தவுடன் நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்தியுள்ளோம்.
பெண்ணுடைய உறவை மையப்படுத்தி ஒரு தலைவரை விமர்சிப்பதா? பெரியார், அண்ணா கற்றுக் கொடுத்த பாடம் இதுவல்ல. திமுக அடிக்கடி சொல்லும் 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்று. இப்போது இந்த மூன்றும் திமுகவிடம் இல்லை.
மின்சாரத் துறையில் நிறைய கடன் சுமை இருப்பதாகவும், நிலக்கரியில் ஊழல்கள் நடந்திருப்பதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் சொல்லியிருக்கிறார். அவர் அதை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். தினமும் 18 மணி நேரத்திற்கு மேலாக அவர் உழைத்துக் கொண்டிருக்கிறார். அந்தந்த அமைச்சர்கள் துறை சார்ந்து விளக்கம் தருவார்கள்.
ஸ்டாலின், உதயநிதி
திமுக தலைவரும் உதயநிதி ஸ்டாலினும் தேர்தலில் ஏன் தோற்றோம் என ஆராய்வதற்கு 36 பேர் கொண்ட குழுவை அமர்த்தியிருக்கிறார்கள். இன்னும் அவர்களுக்கு ஏன் தோற்றோம் என தெரியவில்லை.
முதல்வர் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் நேர்மையாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். எங்கள் அரசு மதச்சார்பற்ற கொள்கையிலும் முற்போக்கு கொள்கையிலும் உறுதியாக இருக்கும். போதைப் பொருளை ஒழிக்க விளையாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று முதல்வர் எனக்கு அமைச்சகத்தை ஒதுக்கி உள்ளார்.
60 நாட்கள் டைம் கொடுங்க
தமிழகத்தில் கொலை, கொள்ளைகள் நடப்பதாகக் கூறுகிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்து சில நாட்கள்தான் ஆகின்றன. 50 ஆண்டுப் பணியைச் சீரமைக்க வேண்டும். சிஎம்டிஏவில் வீடு கட்ட சதுர அடிக்கு 40 ரூபாய் லஞ்சம் வாங்கப்பட்டு வந்தது. இதை ஒழித்திருக்கிறோம். கட்சி நிதி, அமைச்சர் நிதி, முதல்வர் நிதி ஆகியவற்றை ஒரு வாரத்தில் ஒழித்திருக்கிறோம். இதனால் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதில்லை. டிடிசிபி அப்ரூவல், டாஸ்மாக்கில் நடந்த ஊழல்களை ஒழித்திருக்கிறோம்.
நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை ஆகியவற்றின் டெண்டர்களை மறுசீரமைத்து வருகிறோம். அமைச்சர் பெயரைச் சொல்லி யாரும் முறைகேட்டில் ஈடுபடுவதில்லை. குவாரிகளில் கனிம வளங்கள் திருடப்படுவதில்லை, கரூரில் ஆற்று மணல் அள்ளப்படுவதில்லை. இவை அனைத்தும் நிர்வாக ரீதியான மாற்றம். அதிகாரிகள் மத்தியிலும் சீரமைப்பு நடந்து கொண்டிருக்கிறது. 60 நாட்கள் மட்டும் கொடுங்கள், ஒட்டுமொத்தமாக நிர்வாக மாற்றத்தைக் கொடுப்போம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications