மகளிர் உரிமைத் தொகை வேணுமா? ஓடிபி சொல்லுங்க! ஓரணியில் தமிழ்நாடு.. தலைமையை ஏமாற்றும் நிர்வாகிகள்?
திண்டுக்கல்: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் திமுக, பூத் அளவில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி இந்த திட்டத்தில் துவக்கி வைத்தார். ஒரு சில ஒன்றியங்களில் மகளிர் உரிமைத் தொகைக்கு என பேசி அவர்களிடம் ஓடிபி பெற்று ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் சேர்ப்பதாக புகார் எழுந்திருக்கிறது.
2026 சட்டமன்ற தேர்தல் களம் தற்போது சூடு பிடித்திருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் இருந்தாலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார் ரோட்சோ நடத்தி மக்களையும் சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் 2026 தேர்தலை வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 30 சதவீத வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக திட்டமிடப்பட்டது. மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் இதனை அறிவித்தார் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.

கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 234 தொகுதிக்கும் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் ஒருவர் நியமிக்கப்பட்டு உறுப்பினர் பதிவுக்கு தனி செயலி உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பயிற்சி பெற்ற ஐடி விங் நிர்வாகிகள் தமிழ்நாடு முழுவதும் 68,000 மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பூத் ஏஜென்ட்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறார்கள். ஜூலை ஒன்றாம் தேதி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, இரண்டாம் தேதி திமுகவின் 76 மாவட்டங்களில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.
மூன்றாம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று பரப்புரை செய்து உறுப்பினர்களை சேர்க்கவும், ஆகஸ்ட் 15ஆம் தேதி நிறைவு விழா நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் இல்லங்களுக்கும் சென்று திமுகவின் திட்டங்களை எடுத்துக் கூறி உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவு. பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்கள் இதனை தீவிரமாக கடைபிடித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு ஒன்றியங்களில் இந்த திட்டம் பெயருக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக திண்டுக்கல் வடக்கு ஒன்றியத்தில் வாக்காளர்களை நிர்வாகிகள் வீடு வீடாக சென்று சந்திக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. ஏற்கனவே எடுத்து வைக்கப்பட்டு இருந்த தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்திருக்கிறீர்களா? உங்களுக்கு வந்து விட்டதா? அல்லது ரிஜெக்ட் ஆகிவிட்டதா? என கேட்டு இப்போது உங்களுக்கு ஒரு ஓடிபி வரும் அதனை சொல்லுங்கள் என சில நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.
படிப்பறிவு இல்லாத மக்கள் இது தொடர்பாக பேசியதும் ஓடிபிஐ கொடுத்து விடுகின்றனர். பின்னர் ஓரணியில் தமிழ்நாடு மூலம் திமுகவில் இணைந்ததற்கு நன்றி என மெசேஜ் வருகிறது. இது தொடர்பாக கேட்டபோது நிர்வாகிகள் உரிய விளக்கம் அளிக்கவில்லை.
இந்த நிலையில் என்ன நடக்கிறது என திமுகவினர் சிலரிடமே பேசிய போது அதிர்ச்சி தரும் தகவல் கிடைத்தது. "மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்களிடம் திமுக நிர்வாகிகள் ஏற்கனவே தொலைபேசி எண்களை வாங்கி வைத்திருந்தனர். இந்த ஓடிபிஐ சொன்னால் தான் உங்களுக்கு அடுத்த மாதம் பணம் வரும், மேலும் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கும் பணம் கிடைக்கும் என தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஓடிபிஐ பெற்று ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் இணைத்து வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஒரு சில நிர்வாகிகள் உரிய முறையில் செயல்படாததால் இதுபோல திமுக தலைமைக்கு கெட்ட பெயர் வருகிறது என புலம்புகின்றனர். மேலும் உண்மையிலேயே நிர்வாகிகள் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் நினைத்தால் வீடு வீடாக செல்ல வேண்டும். அப்படி செய்யாதவர்கள் குறித்து திமுக தலைமைக்கும் புகார் பறந்திருக்கிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் திமுக தலைமை தயாராகி வருகிறது" என்றனர்.












Click it and Unblock the Notifications