மீண்டும் மீண்டுமா? திண்டுக்கல் ரத்தினத்தை விடாது துரத்தும் அமலாக்கத்துறை! இன்று மறுபடியும் ரெய்டு!
திண்டுக்கல்: புதுக்கோட்டையை தொடர்ந்து திண்டுக்கல்லிலும் பிரபல தொழிலதிபர் ரத்தினத்தின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் தற்போது மூன்றாவது முறையாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள முத்துப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ரத்தினம். ஆனால் அவரை எல்லோரும் அழைப்பது திண்டுக்கல் ரத்தினம், ஊர் மாறி வந்து இன்று உலகப் புகழ் பெற்றவராக திகழ்கிறார் ரத்தினம்.

சாதாரண சர்வேயராக சைக்கிளில் வலம் வந்த இவர், இன்று ஜாகுவார் முதல் பிஎம்டபிள்யூ கார் வரை வீட்டில் நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் வெளியேயும் நிறுத்தி வைக்கும் அளவுக்கு பணபலமும், ஆள் பலமும் கொண்டவர். சர்வேயராக இருந்த அவர் அந்த வேலையை உதறிவிட்டு ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினார். செங்கல் சூளை, ரியல் எஸ்டேட் தொழிலை விரிவாக்கம் செய்து கொண்டவர் தொடர்ந்து மணல் குவாரி தொழிலில் கால் பதித்தார்.
புதுக்கோட்டை ராமச்சந்திரன், சிவகங்கை படிகாசு உள்ளிட்டோருடன் ஏற்பட்ட தொடர்புகள் இவரை ஒரே வருடத்தில் திண்டுக்கல்லில் மிகப்பெரிய பணக்காரராக மாற்றியது. மிகப் பெரிய தொழிலதிபரான சேகர் ரெட்டியுடன் ஏற்பட்ட அறிமுகம் மாநில அளவில் இவரது தொழிலை விரிவடையச் செய்தது. சேகர் ரெட்டியுடன் தொழில் கூட்டாளியாக இணைந்த பிறகு ரத்தினத்திற்கு சொத்துக்களுக்கு பஞ்சமே இல்லை என்ற நிலை ஏற்பட்டது.
இன்றைய நிலைமையில் அவருக்கு இருக்கும் சொத்துக்களை அவராலேயே எண்ண முடியாது என்பதுதான் ஹைலைட். இடையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சட்ட விரோதமாக பணம் மாற்றியதாக எழுந்த புகாரில் சேகர் ரெட்டி திண்டுக்கல் ரத்தினம் உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடைபெற்றது. பின்னர் திண்டுக்கல் ரத்தினம் உட்பட தொழிலதிபர்கள் மீதான அமலாக்கத்துறை தொடர்ந்த மணல் குவாரி வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவள சட்டம் சேர்க்கப்படாத நிலையில் தொழிலதிபர்கள் மீது மணல் குவாரி வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்தது சட்டவிரோதம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக விமர்சித்துள்ளது. முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரத்தினத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் இரண்டு முறை சோதனை செய்தனர்.
12.09.23 அன்று ரத்தினம் வீடு மற்றும் அலுவலகம் மற்றும் ரத்தினத்தின் மைத்துனர் ஹனிபா நகரில் உள்ள கோவிந்தன் வீடு மற்றும் அலுவலகத்தில் இரண்டு நாட்களாக சோதனை நடைபெற்றது. 2வது முறையாக 25.11.23 ஜிடிஎன் சாலையில் உள்ள ரத்தினத்தின் வீட்டில் சென்னை மற்றும் கோவையிலிருந்து வருகை தந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 பேர் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை 3 மணி நேர சோதனை செய்தனர்.
இந்த நிலையில் இன்று மூன்றாவது முறையாக திடீரென திண்டுக்கல் ரத்தனத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஜிடிஎன் சாலையில் உள்ள தரணி குழும அலுவலகத்தில் சோதனையானது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இருமுறை சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது மூன்றாவது முறையாக ரத்தினத்தின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சென்னை மற்றும் கோவையிலிருந்து வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில் ரெய்டுக்கான காரணம் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications