எவ்வளவு ஏத்தம் இருக்கு.. வெள்ளை காகிதத்தை காட்டிய டிஆர்பி ராஜாவை விளாசிய எடப்பாடி பழனிச்சாமி
திண்டுக்கல்: ‛‛தொழில் துறை அமைச்சர், ஒரு வெள்ளை காகிதத்தைக் காட்டி இதுதான் வெள்ளை அறிக்கை என்கிறார். எவ்வளவு ஏத்தம் இருந்தால் இப்படிப் பேசுவார்..? நாட்டில் பல லட்சம் பேர் வேலையில்லாமல் சிரமப்படுகிறார்கள். இந்த 52 மாத ஆட்சியில் 922 ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும், 10.5 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும், 32 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் 75% ஒப்பந்தங்கள் முடிந்துவிட்டதாகவும் ஸ்டாலின் சொன்னார்.
ஸ்டாலின் அவர்களே, டி.ஆர்.பி ராஜா அவர்களே... இதற்கு நீங்கள்தான் விளக்கம் கொடுக்க வேண்டும்'' என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்தார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், கரூர் சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்தித்தார்.

முதலில் வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல் - கரூர் பிரதான சாலையில் குழுமியிருந்த எராளமான மக்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.
அப்போது திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக வெள்ளை அறிக்கை விஷயத்தில் கிண்டல் தொனியில் பதிலளித்த தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவை கடுமையாக சாடினார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:
மருத்துவ கல்லூரி கொண்டு வந்த அதிமுக
‛‛திண்டுக்கல் மாவட்டம் அதிமுகவின் கோட்டை வேடசந்தூர் தொகுதியில் தெரியும் எழுச்சியின் மூலமாக இங்கு அதிமுக வெற்றி உறுதியாகிவிட்டது. திமுகவின் இந்த நான்காண்டு காலத்தில் ஏதாவது பெரிய திட்டம் இந்த தொகுதிக்கு கொண்டுவந்தார்களா?
அதிமுக ஆட்சியில் திண்டுக்கல் மாவட்ட மக்கள் கோரிக்கையை ஏற்று, 350 கோடியில் மதிப்பில் அற்புதமான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து, ஏழை மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கச் செய்தோம். அதிமுக ஆட்சியில் இருந்தபோது இதேபோல தமிழகத்தின் பல மாவட்டங்களில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து சாதனை படைத்தோம்.
10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 17 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து வரலாற்று சாதனை படைத்தோம்.
இந்த நாலாண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட கொண்டுவருவதற்கு திராணியற்றது இந்த விடியா திமுக அரசு. மக்களுக்குத் தேவையான திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஜெயலலிதா இருக்கும்போதும் மறைந்தபிறகும் மக்கள் எண்ணோட்டத்துக்கு தகுந்தவாறு அதிமுக அரசு செயல்பட்டது.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்துவிட்டது. போதைப் பொருள் விற்பனை அமோகம். இந்த ஆட்சியால் எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை.
பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்லை
போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துங்கள் என்று பலமுறை நாங்கள் சொல்லியும் கேட்கவில்லை.
'மாணவர்களே, இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள்' என்று இப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். உதயநிதி போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்கிறார். இதெல்லாம் எப்போது..? எல்லோரும் போதைக்கு அடிமையாகி சீரழிந்த பின்னர் சொல்லி என்ன பயன்? எதிர்க்கட்சி சொல்லும்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் தடுத்திருக்கலாம். நாங்கள் சொன்னதை அலட்சியப்படுத்தியதால் இளைஞர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி சீரழிகிறார்கள். போதை ஆசாமிகளால் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை.
சிறுமி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. கொலை, கொள்ளை, பாலியல் சீண்டலில் போதை ஆசாமிகள் ஈடுபடுவதால் தமிழகத்தின் அமைதி தலைகீழாக மாறிவிட்டது. இப்படிப்பட்ட அவல ஆட்சி தொடர வேண்டுமா?
திமுக நிர்வாகிகளின் குடும்பத்தினர், போதைப் பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருப்பதால்தான் போதைப் பொருட்களை தடுக்க முடியவில்லை. தமிழகத்தில் போதைப் பொருள் எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்பதை சொல்ல வேண்டியது எங்களது கடமை. பத்திரிகையில் வந்த செய்தியை சொல்கிறேன்.
சிறப்பாக வளர்ந்துள்ளதா?
திண்டுக்கல் துணை மேயர் மகனுக்கு பெங்களூரு போதைப் பொருள் நுண்ணறிவுப் போலீஸார் செவ்வாய்க்கிழமை அழைப்பாணை வழங்கியிருக்கிறார்கள். திண்டுக்கல் நகராட்சி துணை மேயர் ராஜப்பா, திமுக மாநகரச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார். இவரது மகன் கார்டினல் இம்மானுவேல் கட்டுமான நிறுவனம் நடத்தி வருவதுடன் திண்டுக்கல் மாவட்ட பொறியாளர் அணியில் துணை அமைப்பாளராக உள்ளார். இவர் திண்டுக்கல் கிழக்கு, ஆரோக்கியமாதா தெருவில் வசித்துவருகிறார். இவர் மீது போதைப் பொருள் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
நான் வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் செய்தி வெளியிடுவதாகச் சொல்வார்கள் என்பதாலே பத்திரிகை செய்தியை எடுத்துக் காட்டுகிறேன். இதன் மூலம் போதைப் பொருள் விற்பனைக்கு திமுக நிர்வாகிகள் துணை நிற்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. இப்படிப்பட்ட அவல ஆட்சி தொடர வேண்டுமா?
தமிழகத்தின் கல்வி வளர்ச்சியைப் பாராட்டுவதற்காக தெலங்கானா முதல்வர் சிறப்பு அழைப்பாளராக வந்துள்ளார். அப்படி சிறப்பாக வளர்ந்துள்ளதா..?
தேர்ச்சி குறைந்து விட்டது
ஏனென்றால் திமுக ஆட்சியில் அரசு பள்ளியில் சேரும் மாணவர்கள் சேர்க்கை குறைந்துவிட்டது, அரசுப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. யாரும் திமுக ஆட்சியில் நியமிக்கப்படவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1.5 லட்சம் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால்1.5 லட்சம் ஆசிரியர்கள் மன உளைச்சலில் உள்ளனர், அவர்களுக்கு அரசு என்ன செய்யப்போகிறது என்று சொல்லவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அதிகம் என்று தவறான செய்தியை வெளீயிட்டு போட்டோஷூட் நடத்தி விளம்பர் மாடல் அரசு மக்களை ஏமாற்றுகிறது.
அரசு ஆரம்பப் பள்ளியில் 5ம் வகுப்பு மாணவனால் 3ம் வகுப்பு பாடப் புத்தகத்தை படிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இப்படிப்பட்ட நேரத்தில் முதல்வர் புதிய நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்.
இன்று நெல்லையில் ஒரு வகுப்பறையில் மாணவர்கள் அரிவாளால் வெட்டிக்கொண்டனர். பள்ளியில் படிப்பதற்கு புத்தகம் எடுத்துப் போவார்கள். ஆனால் இப்போது அரிவாளைத் தூக்கி சென்றுள்ளனர். இது வெட்கக்கேடான ஆட்சி, இதுக்கு தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதாக தோற்றத்தைக் காட்டுகிறார். இவை அத்தனையும் பொய்.
டிஆர்பி ராஜா மீது ஆக்ரோஷம்
தொழில் துறை அமைச்சர், ஒரு வெள்ளை காகிதத்தைக் காட்டி இதுதான் வெள்ளை அறிக்கை என்கிறார். எவ்வளவு ஏத்தம் இருந்தால் இப்படிப் பேசுவார்..? நாட்டில் பல லட்சம் பேர் வேலையில்லாமல் சிரமப்படுகிறார்கள். இந்த 52 மாத ஆட்சியில் 922 ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும், 10.5 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும், 32 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் 75% ஒப்பந்தங்கள் முடிந்துவிட்டதாகவும் ஸ்டாலின் சொன்னார்.
ஸ்டாலின், டி.ஆர்.பி ராஜாவே இதற்கு நீங்கள்தான் விளக்கம் கொடுக்க வேண்டும்.
922 ஒப்பந்தங்கள் போடப்பட்டது என்று சொன்னால், அதில் 75% நிறைவேற்றப்பட்டது என்று சொன்னால் சுமார் 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். இத்தொகுதியில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? 32 லட்சத்தில் 75% என்றால் 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டுமே.. சொல்வது அத்தனையும் பொய்.
பிரதான எதிர்க்கட்சி மக்களுடைய பிரச்னைகளை எடுத்துச்சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், 10.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்ததாகச் சொன்னதற்கு வெள்ளை அறிக்கை கேட்டேன். தொழிலின் நிலை என்ன? எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்தது என்று விளக்கம் கேட்டால், வெள்ளை காகிதத்தை காட்டுகிறார்.
வெற்று விளம்பர ஆட்சி
டிஆர்பி ராஜாவே உங்களுடைய ஆட்சி வெற்று விளம்பர ஆட்சி என்பதை வெள்ளை காகிதத்தைக் காட்டி நிரூபித்துவிட்டீர்கள். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். அங்கு ஒன்றுமே இல்லை. எனவே வெள்ளை காகிதத்தைத் தான் காட்டியாக வேண்டும். இந்த ஆட்சியில் அத்தனையும் பொய், பொய் தவிர்த்து வேறு ஒன்றுமேயில்லை.
ஒரு புள்ளி விவரம் சொல்கிறேன். தொழிற்சாலைகளில் 2019-20 ஆண்டில் தொழிலாளர்கள் எண்ணிக்கை 16.91 பர்சண்டேஜ். அதே 2023-24 திமுக ஆட்சியில் இந்த எண்ணிக்கை 15.95% என்று குறைந்திருக்கிறது. 2019-20ல் ஃபேக்ட்ரி கவுன்ட் பெர்சன்டேஜ் 15.75%, அதே 2023-24 திமுக ஆட்சியில் 15.42%. அப்படியென்றால் தொழிற்சாலை அதிகமாக வந்து வேலை அதிகமாக கிடைத்தது என்றால் என்ன அர்த்தம்? அத்தனையும் பொய்.
இப்படி பொய் செய்திகளை வெளியிட்டு திமுக மக்களை ஏமாற்றுகிறது. வேடசந்தூர் பகுதி நூற்பாலைகள் நிறைந்த பகுதி, பல்லாயிரக்கணக்கான பேருக்கு வேலை கிடைக்கிறது. நூற்பாலை தொழில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறது, மின்கட்டணம் உயர்ந்துவிட்டதால் நூல் மில்கள் எல்லாம் மூடுகின்ற அபாயமும், தொழிலாளர் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனது தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். அவற்றில் 10% கூட நிறைவேற்றவில்லை, ஆனால் 98% நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலினும், அமைச்சர்களும் பச்சை பொய் சொல்கிறார்கள்.
100 நாள் வேலை திட்ட சம்பளம் இல்லை
100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்றார், சம்பளம் உயர்த்தப்படும் என்றார், ஆனால் செய்யவில்லை. முழுமையாக சம்பளம் கூட கொடுக்க வக்கில்லாத அரசு திமுக அரசு. அதிமுக ஆட்சி இருக்கும்போது 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளிக்கு குறிப்பிட்ட காலத்தில் வங்கியில் பணம் போய் சேரும், அது அதிமுக ஆட்சியின் திறமை.
விவசாயத்துக்கு தண்ணீர் முக்கியம். அந்த நீரை கொடுப்பதற்காக குடிமராமத்துத் திட்டத்தை கொண்டுவந்து அதன்மூலம் ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் தேக்கப்பட்டன, அதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது.
ஒருபக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொருபக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது. விவசாயிகள் எந்நேரமும் மோட்டாரை பயன்படுத்த ஏதுவாக மும்முனை மின்சாரம் 24மணிநேரம் கொடுத்தோம்.
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ஒரே அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை தள்ளுபடி செய்தோம். வறட்சி ஏற்பட்டக் காலங்களில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுத்த ஒரே அரசாங்கம் அதிமுக அரசுதான். விவசாயத் தொழிலாளிகளுக்கு பசுமை வீடுகள், ஆடுகள், கறவை மாடுகள், கோழிகள் கொடுத்தோம். உழவர் பாதுகாப்புத் திட்டம் கொடுத்தோம். முதியோர் உதவி திட்டம் மூலம் லட்சக்கணக்கான முதியோருக்கு மாத உதவித்தொகை 1000 ரூபாய் கொடுத்தோம்.
மாணவர்கள் ஆல்பாஸ்
ஒரே சட்டமன்ற விதி 110ன் கீழ் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பைக் கொடுத்து, 90% பேருக்குக் கொடுத்தோம்.
கொரோனா காலத்தில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள் அரிசி, சர்க்கரை, எண்ணெய் கொடுத்தோம், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் கொடுத்தோம்.
அதேயாண்டு தைப் பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட பொங்கல் பரிசு 2500 ரூபாய் கொடுத்தோம். கொரோனா காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம், சிறப்பாக தேர்வெழுதி பட்டம் பெற்றனர். பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆல் பாஸ் போட்டுக்கொடுத்தோம். மாணவர், தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவருக்கும் பொதுவான அரசாக இருந்தது அதிமுக அரசு.
22 ஆயிரம் கோடி கொள்ளை
10 ரூபாய் என்றால் பாலாஜி பேர்தான் மக்களுக்கு ஞாபகம் வருகிறது, அடுத்த கூட்டம் கரூருக்குத்தான் போகிறேன். தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை இருக்கின்றன. டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். இந்த பணம் மேலிடத்துக்கு போயிருக்கிறது, இப்படிப்பட்ட ஊழல் அரசு தொடர வேண்டுமா?
பத்திரப்பதிவுக்குப் போனால் உடனே பதிவு செய்ய மாட்டார்கள், அதுக்கு ஒரு ரேட், கமிஷன். 50 லட்சத்துக்கு சொத்து வாங்கினால் 10% அதாவது 5 லட்ச ரூபாய் லஞ்சம் வழங்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சி எல்லா பகுதியிலும் மின்கட்டணம் கடுமையாக உயர்ந்துவிட்டது. 67% உயர்ந்துவிட்டது. குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசுதான். விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது.
மாணவர்களுக்கு லேப்டாப்
அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் 7300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது. அதையும் திராவிட மாடல் அரசு நிறுத்திவிட்டது. திமுக அரசால் நிறுத்தப்பட்ட இத்திட்டமும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அமல்படுத்தப்படும்.
தமிழகத்தில் கிராமப்புறங்களில் மட்டும் 3 லட்சத்து 80 ஆயிரம் பேர், அதாவது 41% பேர் அரசுப் பள்ளியில் படிக்கிறார்கள். வெறும் 9 பேருக்குத்தான் மருத்துவக் கல்வி கிடைத்தது. அத்தகைய ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நனவாக்க, 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கினோம். அதன்மூலம் 2818 பேர் ஒரு ரூபாய் செலவில்லாமல் இலவசமாக மருத்துவம் படித்து இப்போது மருத்துவர் ஆகியிருக்கிறார்கள்.
ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு அதிமுக அரசுதான் உதாரணம். 7.5% இட ஒதுக்கீட்டில் பலன் பெற்றவர் இங்கேயே இருக்கிறார், இதுதான் அதிமுகவின் சாதனை.
உங்களுடன் ஸ்டாலின் என்று நான்காண்டு கழித்து மக்களிடம் வந்திருக்கிறார் முதல்வர். வீடு வீடாக அதிகாரிகள் வருகிறார்கள். மக்களிடம் இருக்கும் 46 பிரச்சனைகள் பற்றி மனு கொடுத்தால் அதனை நிறைவேற்றிக் கொடுப்பார்களாம். இன்னும் 7 மாதத்தில் ஆட்சி முடியப்போகிறது. அதற்குள் நிறைவேற்ற முடியுமா? மக்களின் பிரச்ச னையை தீர்க்கத்தான் அரசு, ஆனால் மக்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்பதையே இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார். மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்.
2026 தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்" என்றார் உற்சாகத்துடன்.
-
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி!












Click it and Unblock the Notifications