திண்டுக்கல்லில் இடைவிடாது கொட்டிய மழை- மலைக்கோட்டை கல் உருண்டு விழுந்தது- 2 பெண்கள் உயிர் தப்பினர்!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை மழை கொட்டித் தீர்த்தது. கனமழையின் போது திண்டுக்கல் மலைக்கோட்டையில் இருந்து கல் கீழே உருண்டு விழுந்ததில் 2 பெண்கள் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மிரட்டிய மாண்டஸ் புயல் கரையை கடந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக தமிழகத்தை கடந்தது. வங்க கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மழை வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. திண்டுக்கல்லில் நேற்று கனமழை கொட்டிய நேரத்தில் மலைக்கோட்டை பகுதியில் இருந்து கல் ஒன்று உருண்டு கீழே விழுந்தது.
திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் ஆர்.வி நகர் மற்றும் முத்தழகுபட்டி பகுதி உள்ளது. முத்தழகுபட்டி மற்றும் சின்னகாளை நகர் சந்திப்பு இடத்தில் மலைக்கோட்டை மேல் பகுதியில் இருந்து திடீரென நேற்று மாலை பாறையின் ஒரு பகுதி உருண்டு விழுந்தது. இதில் நல்வாய்ப்பாக இரண்டு பெண்கள் உயிர் தப்பினர்.
மேலும் அந்த பாறைகயின் பகுதிகள் அப்பகுதியில் உள்ள தனியார் கடலை மிட்டாய் கம்பெனிக்கு சொந்தமான காரின் பின்புறம் பகுதியில் பட்டதால் கார் நசுங்கி சேதமடைந்தது. இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மலைக்கோட்டையில் இருந்து பாறையின் ஒரு பகுதி உருண்டு கீழே விழும் சிசிடிவி காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இதேபோல் நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நீண்ட நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கூடிய மிக கன மழை பெய்தது. உதகையிலிருந்து குன்னூர், கோத்தகிரி செல்லும் மலைப்பாதையில் அடர்ந்த மேகமூட்டத்துடன் கூடிய கன மழை பெய்தால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
அதிகபட்சமாக குன்னூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குன்னூர் நகர பகுதிகளில் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல பெரும் சிரமம் ஏற்பட்டது. அதேபோல் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளின் அருகே மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

குன்னூரில் இருந்து உபதலை, பழைய அருவங்காடு செல்லும் சாலையில் அமைந்துள்ள அம்பிகாபுரம் பகுதியில் மண்சரிவு ஏற்ப்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் சாலையில் நிறுத்தி வைத்திருந்த கார்கள் மீது மண் மூட்டைகள் விழுந்ததில் இரு கார்கள் சேதமடைந்தன.
குன்னூர், கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீடித்து வருவதால் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித் உத்தரவிட்டார்.
இதனிடையே முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் கரையோர பகுதியில் வாழும் மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையில் மொத்தம் உயர்த்தக்கூடிய 142 அடிக்கு, தற்சமயம் 141 அடியை நீர்மட்டம் எட்டியுள்ளதால் கரையோர வாழும் பாதி மக்களுக்கு பொதுப்பணி துறையினர் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications