சுயேட்சை வேட்பாளரை நம்பாதீங்க..அது போன வாரம்.. கழகம் அன்புடன் அழைக்கிறது..இது இந்த வாரம்.. கலகல களம்
திண்டுக்கல் : திண்டுக்கல் 17வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளரை நம்ப வேண்டாம் என கடந்த வாரம் திமுக துணைப் பொதுச் செயலாளரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் இன்று அவர் முன்னிலையிலேயே சுயேச்சை வேட்பாளர் வெங்கடேஷ் திமுகவில் இணைந்துள்ளது கூட்டணிக் கட்சியான காங்கிரஸை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து வார்டு உறுப்பினர்கள், மேயர் நகராட்சி போரூராட்சி தலைவர் துணைத்தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சை வார்டு உறுப்பினர்கள் திமுகவில் அடுத்தடுத்து இணைந்து வருவது தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் ரத்தினம்
நாற்பத்தி எட்டு வார்டுகள் கொண்ட திண்டுக்கல் மாநகராட்சியில் யாரும் எதிர்பாராத வகையில் திண்டுக்கல்லில் மெகா கோடீஸ்வரரான லயன் ரத்தினத்தின் மகன் வெங்கடேஷ் என்பவரும் சுயேச்சையாக களத்தில் இறங்கி அரசியல் கட்சிகளுக்கு இணையாக வாக்கு சேகரித்தார். தண்ணீர் குழாய் சின்னத்தில் போட்டியிட்ட வெங்கடேஷ் கோடீஸ்வர குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் குப்பைகளை சுத்தம் செய்வது, சாக்கடை அள்ளுவது, வாக்காளர்களின் காலில் விழுவது என அரசியல் கட்சியினருக்கு டாஃப் கொடுத்து வாக்கு சேகரித்தார். மேலும்

சுயேட்சை வேட்பாளர்
அரசியல் கட்சியினரை விட வாக்காளர்களை "நன்கு கவனித்துக் கொண்டதாகவும்", காலை மாலை என இருவேளைகளிலும் "துண்டுப்பிரசுரங்களை" கொடுத்து வாக்கு சேகரித்தார். குறிப்பாக எம்எல்ஏ தேர்தலை போல ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும் நூலகம் அமைக்கப்படும் உள்ளிட்ட பெரிய பெரிய வாக்குறுதிகளை அளித்து தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார். அவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் வேட்பாளர் குப்புசாமி என்பவர் போட்டியிட்டார். அதே தொகுதியில் அதிமுக உள்ளிட்ட பெரிய கட்சி வேட்பாளர்களும் சுயச்சை வேட்பாளர்களும் களத்தில் இறங்கிய நிலையில் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் வெங்கடேஷ் சுயேச்சையாக வெற்றி பெற்றார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி
இதையடுத்து தாரை தப்பட்டைகள் முழங்க பட்டாசுகள் வெடித்து வாக்காளர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் வெங்கடேஷ். இந்த நிலையில் ஏற்கனவே கணித்திருந்தது போல திமுகவில் ஐ.பெரியசாமி முன்னிலையில் இணைந்துள்ளார் வெங்கடேஷ். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அந்தப் பகுதியில் வாக்கு சேகரித்த திமுக துணை பொதுச் செயலாளரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான பெரியசாமி சுயேச்சை வேட்பாளரை நம்ப வேண்டாம் எனவும் அரசால்தான் மக்களுக்கு சேவை செய்ய முடியும் எனவே காங்கிரஸ் வேட்பாளர் குப்புசாமிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

காங்கிரஸ் அதிருப்தி
ஆளும் கட்சி எதிர்க்கட்சியை மீறி வெங்கடேஷ் ஜெயித்த நிலையில் அமைச்சர் ஐ பெரியசாமி முன்னிலையிலேயே அவர் திமுகவில் இணைந்து உள்ளது திமுகவினர் மட்டுமல்லாது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் செய்யும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் நடிகர் வடிவேலு ஒரு படத்தில் சொல்வது போல அது போனவாரம்.. இது இந்த வாரம் என்ற பாணியில் கழகத்தின் நடவடிக்கை இருப்பதாகவும் எதிர்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி தமிழகத்தின் இளம் வயது துணை மேயராக மகனை ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள திண்டுக்கல் ரத்தினத்தினம் தரப்பு, மிக முக்கிய திமுக அமைச்சரை அணுகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications