கொடைக்கானல்ல கூட்டமே இல்லைனு யாருங்க சொன்னது? இ-பாஸ் போட்டும் இத்தனை பேரா? வெளியான முழு தகவல்
திண்டுக்கல்: இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறையவில்லை எனவும் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் இ-பாஸ் மூலம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருவதாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்போது கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் நகர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கொடைக்கானல் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களுக்கு இ பாஸ் நடைமுறையை அமல்படுத்த தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வர இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இ-பாஸ் காரணமாக கொடைக்கானலில் இருக்கக்கூடிய தங்கும் விடுதி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் எனவும், நீதிபதி அளித்துள்ள இந்த இ பாஸ் உத்தரவை மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும் என வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறையவில்லை எனவும் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் இ-பாஸ் மூலம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருவதாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிக்கு வருகை தரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்களுக்கு 'epass.tnega.org" என்ற இணைய முகவரி மூலம் இ-பாஸ் வழங்கப்பட்டு, வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, 07.05.2024-ஆம் தேதி முதல் 14.05.2024-ஆம் தேதி மாலை 04.00 மணி வரை 71,864 வாகனங்கள் மூலம் 4,45,088 பயணிகள் வேறுவேறு தேதிகளில் கொடைக்கானல் வருவதற்காக விண்ணப்பித்து இ-பாஸ் பெற்றுள்ளனர். அதில் 14.05.2024ஆம் தேதியான நேற்று 16,951 வாகனங்கள் மூலம் 93,115 பயணிகள் கொடைக்கானல் வருவதற்காக விண்ணப்பித்து இ-பாஸ் பெற்றுள்ளனர்.
கடந்த 07.05.2024 முதல் நேற்று(14.05.2024) மாலை 4.00 மணி வரை இ-பாஸ் பெற்ற வாகனங்களில் 18,506 வாகனங்கள் மூலம் 1,27,032 பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை புரிந்துள்ளனர். அதில் நேற்று(14.05.2024) மட்டும் 1,685 வாகனங்கள் மூலம் 11,951 பயணிகள் வருகை புரிந்துள்ளனர். அதனைத்தொடர்ந்து நாளை(15.05.2024) கொடைக்கானலுக்கு வருகை புரிய 2,330 வாகனங்கள் மூலம் 16,848 பயணிகள் இ-பாஸ் பெற்றுள்ளனர்." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications