டான்ஸ் ஆடுங்க! கோரஸாக குரல் எழுப்பிய கிராமமக்கள்! திருவிழாவில் ஆட்டம் போட்ட அமைச்சர் சக்கரபாணி!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்துகொண்ட உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, அங்கு டான்ஸ் ஆடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
Recommended Video
அமைச்சருடன் சேர்ந்து திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் வேலுச்சாமியும் இணைந்து அந்த திருவிழாவில் நடனமாடினார்.
கிராமமக்களின் அன்புக் கோரிக்கையை ஏற்று அவர்கள் இருவரும் டான்ஸ் ஆடி திருவிழாவில் கலந்துகொண்டவர்களை மகிழ்வித்தனர்.

காளி கோவில்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே காளியம்மன் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. அந்த திருவிழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் வேலுச்சாமி ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். அப்போது அங்கே எழுப்பப்பட்ட இசை மேளத்துக்கு ஏற்றபடி அமைச்சரையும், எம்.பி.யையும் நடனமாடுமாறு அங்கிருந்தவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

ஆரம்பத்தில் தயக்கம்
ஆனால் அமைச்சர் சக்கரபாணி இருக்கட்டும் பரவாயில்லை எனக் கூறி ஆரம்பத்தில் தயக்கம் காட்டியிருக்கிறார். ஆனாலும் கோரஸாக குரல் எழுப்பிய கிராம மக்கள், அமைச்சரை நடனம் ஆடுமாறு அன்புத் தொல்லை கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து ஸ்டார்ட் மியூசிக் என்கிற வகையில் அமைச்சர் சக்கரபாணி உற்சாக ஆட்டம் போட்டு அங்கிருந்தவர்களை மகிழ்வித்தார். இதனிடையே அங்கிருந்தவர்கள் அமைச்சர் டான்ஸ் ஆடுவதை செல்போன்களில் மும்முரமாக படம் பிடித்தனர்.

செல்போனில் படம்
அதனை அமைச்சருடன் வந்தவர்கள் படம் பிடிக்க வேண்டாம் என கண்டிப்பு காட்டிய நிலையில், அமைச்சர் சக்கரபாணி படம் பிடித்துக் கொண்டிருந்தவர்களிடம் எதுவும் சொல்லவில்லை. ஏற்கனவே அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி இதேபோல் கோவையில் நடைபெறும் திருவிழாக்களில் கலந்துகொண்டு நடனம் ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும் அவர் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும் கவனிக்கத்தக்கது.

சுற்று வட்டார மக்கள்
ஆனால் திமுகவில் அமைச்சர் ஒருவர் கோவில் திருவிழாவில் நடனம் ஆடி மகிழ்ந்திருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. காளியம்மன் கோவில் திருவிழாவில் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதி மக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications