மக்களுக்கு ஹாப்பி நியூஸ்..நகைக்கடன் தள்ளுபடி நகைகளை பெறும் தேதிகள் இதோ..அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு
திண்டுக்கல் : தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைகளுக்குள் நகை கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், பிப்ரவரி மாத இறுதி முதல் அடகு வைக்கப்பட்ட நகைகளை திரும்ப வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைகள் அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தார்.
ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் கடந்த செப்டம்பர் 13-ஆம் நாள் 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் நகை கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

நகைக்கடன் தள்ளுபடி
தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளில் கூட்டுறவுத் துறையின் சார்பில் கணக்கெடுக்கப்பட்டு சுமார் நாற்பத்தி எட்டு லட்சம் கடன் விவரங்கள் ஆராயப்பட்டன. தொடர்ந்து பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்கள், நகை கடனை முழுமையாக செலுத்தியவர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அரசு ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டது எனவும், அரசின் விதிமுறைகளின்படி சுமார் 13 லட்சம் பேர் நகை கடன் தள்ளுபடி பெற தகுதி உள்ளவர்கள் என அறிவிக்கப்பட்டது.

தகுதி இல்லை
சுமார் 49 லட்சம் நகை கடன்கள் அனைத்தும் கணினி மூலம் விவரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு அதில் சுமார் 35 லட்சம் கடன்கள் அரசு நிபந்தனைகளுக்கு உட்படாமல் இருந்ததால் தள்ளுபடி பெற தகுதி இல்லாதவை என அடையாளம் கண்டறியப்பட்டது. தொடர்ந்து மீதமுள்ள 13 லட்சம் அடகு வைக்கப்பட்ட நகை கடன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்ட நிலையில் நகைகள் எப்போது திரும்ப வழங்கப்படும் என எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்தது.

தேர்தலால் தாமதம்
தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் நகர்ப்புறங்களில் நகை கடன் தள்ளுபடி திட்டத்தை தொடங்க சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் இல்லாத கிராமப்புறங்களில் நகை கடன் தள்ளுபடி திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் எனவும், நகை கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கலாம் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.

நகைக் கடன்கள் தள்ளுபடி
இந்நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத பகுதிகளில் அடகு வைக்கப்பட்ட நகைகளை திரும்ப வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளது. நகர்ப்புறப் பகுதிகளில் எந்த நேரத்திலும் நகைகள் திரும்ப வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு ஒன்றினை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பேரூராட்சி பகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவு வங்கிகள் வைக்கப்பட்ட 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது எனவும், கிராம பகுதிகளில் தற்போது அடகு வைத்த நகைகள் திரும்ப வழங்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும் நகர்ப்புறப் பகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பின்னர் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் அடகு வைக்கப்பட்ட நகைகளை திருப்பி வழங்கப்படும் எனவும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications