சூப்பர்ல..பழனிக்கு படையெடுக்கும் முதல்வர்கள்! உலக முருக பக்தர்கள் மாநாடு.. ஆக்சனில் இறங்கிய அரசு
திண்டுக்கல்: பழனியில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள மூன்று மாநில முதல்வர்கள் பங்கேற்கும் உலக முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளதையொட்டி தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்த, கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த உயர்நிலை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.

இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள சமயப் பெரியோர், ஆன்மிக அன்பர்கள், முருக பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே, விழா ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அறநிலையத் துறை அலுவலர்கள், ஆன்மிகப் பெரியோர்களை இணைத்து குழுக்கள் அமைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
முருக பக்தர்கள் மாநாடு: இதனையடுத்து 20 பேரைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைத்து ஆணை பிறப்பிக்குமாறு, அறநிலையத் துறை ஆணையர் கேட்டுக் கொண்டார். அதன்படி, 20 பேரைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து, அரசு ஆணை பிறப்பித்தது. முருகனுக்கு உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் ஒன்றுகூடி பல நிகழ்வுகளை மேற்கொள்ளவும், முருகனின் புகழுக்கு புகழ் சேர்க்கும் வண்ணம் உலக முருக பக்தர்கள் மாநாட்டை பழனியில் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது.

ஆகஸ்டில் மாநாடு: இதற்காக முதலமைச்சர் தலமையில் கூட்டமும் நடத்தப்பட்டது. இந்நிலையில் 1980ஆம் ஆண்டுக்குப் பிறகு அதாவது சுமார் 44 ஆண்டுகளுக்கு பிறகு பழனியில் உலகத் தமிழர் முத்தமிழ் முருகர் மாநாடு ஆகஸ்ட் மாதம் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக உலகம் முழுவதும் இருந்து வரும் முருக பக்தர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டிற்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
சேகர் பாபு: அருள்மிகு பழனியாண்டவர் கலை கல்லூரியில் இந்த பணிகளை ஆய்வு செய்ய தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று வருகை தந்தார். காலையில் ரோப்கார் மூலம் மலைக்கோயில் சென்ற அவர் காலை பூஜையின் போது அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தார்.

ஆய்வு: தொடர்ந்து கோயிலில் செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளையும், பிற பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார். தொடர்ந்து பழனி ஆண்டவர் கல்லூரியில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவருடன் தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், செயலர் மணிவாசகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications