திண்டுக்கல் அருகே மருமகளுக்கு பிரசவ வலி.. நடுரோட்டிலேயே.. கொஞ்சம் கூட யோசிக்காத ராஜம்மாள்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள ஒட்டுப்பட்டியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி என்பவருடைய மனைவி சாந்தி.. இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள் ஆவர். சாந்தி கர்ப்பமானார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சாந்திக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து ஆட்டோவில் அவரது மாமியார் அழைத்து சென்றார். பிரசவ வலி அதிகமான நிலையில், நடுரோட்டில் ஆட்டோவை நிறுத்தி மருமகளுக்கு பிரசவம் பார்த்துள்ளார் மாமியார்.. அப்போது அழகான பெண் குழந்தை பிறந்தது.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள ஒட்டுப்பட்டியை சேர்ந்தவர் ராஜம்மாள். இவரது மகன் ராஜீவ்காந்தி (வயது 28). எலக்ட்ரீசியன் ஆவார். இவரும், அதே பகுதியை சேர்ந்த சாந்தி என்பவரும் கடந்த ஆண்டு காதலித்து கல்யாணம் செய்து கொண்டனர். கடந்த 10 மாதம் முன்பு சாந்தி கர்ப்பமானார். இதனால் அவர் அந்த பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையாக பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் பெற்று வந்திருக்கிறார்.

இதனிடையே நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ நாள் நெருங்கியிருந்தது. கர்ப்பிணி சாந்தி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கடந்த ஜனவரி 28ம் தேதி அதாவது நேற்று முன்தினம் பரிசோதனைக்காக சென்றுள்ளார். அப்போது பிரசவ வலி ஏற்படும்போது வருமாறு மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள் கூறி அனுப்பி வைத்தார்களாம்.
இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த சாந்திக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவரது கணவர் ராஜீவ்காந்தி வேலைக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் அவரது தாய் ராஜம்மாள், சற்றும் யோசிக்காமல் அப்பகுதியில் உள்ள ஆட்டோ மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆட்டோவை அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். திண்டுக்கலை ஆட்டோ நெருங்கிய நிலையில், வக்கம்பட்டி அருகே ஆட்டோ வந்துள்ளது. அப்போது சாந்திக்கு பிரசவ வலி அதிகமாகி இருக்கிறது. இதனால் சாந்தி கதறி அழுதுள்ளார். இதனால் செய்வதறியாது தவித்த ராஜம்மாள், உடனடியாக ஆட்டோவை நிறுத்துமாறு டிரைவர் செல்வத்திடம் கூறினார். பின்னர் ஆட்டோவில் வைத்தே சாந்திக்கு, ராஜம்மாள் பிரசவம் பார்த்தார். அப்போது அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து சாந்தியும், குழந்தையும் அதே ஆட்டோவில் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். பின்னர் அங்கு தாய் மற்றும் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டார்கள். தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர். பிரசவ வலியால் அலறி துடித்த மருமகளுக்கு நடுரோட்டில் மாமியார் பிரசவம் பார்த்து, பெண் குழந்தை பிறந்த சம்பவம் திண்டுக்கல் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications