அவசரப்பட்டுட்டியே ஆமு.. கையில் அரிவாளுடன் பஸ் ஸ்டாண்டில் கெத்தாக ரீல்ஸ்.. கொத்தாக தூக்கிய போலீஸ்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்தில் அரிவாளுடன் வலம் வந்த இளைஞரின் வீடியோ வைரலான நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிரபல ரவுடியின் ரீல்ஸ் பார்த்து தானும் அதுபோல ரவுடியாக நினைத்த 2கே கிட்ஸ் இளைஞரை கம்பி எண்ண வைத்துள்ளனர் போலீசார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம்- அண்ணாநகரை சேர்ந்தவர் ஆமு என்ற ரபீக்ராஜா (வயது 29). இவர் மீது திருட்டு, கொள்ளை, கஞ்சாவிற்பனை,பொது சொத்துகளை சேதப்படுத்துதல், வழிப்பறி,தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளது.
இந்நிலையில் நேற்று(19-08-2025) மதியம் இவர் நத்தம் பேருந்து நிலையத்தில் கையில் நீண்ட அரிவாளுடன் தரையில் உரசியபடி பேருந்து நிலையத்தில் உலா வந்தார். தொடர்ந்து குட்டூரை சேர்ந்த ராஜா என்பவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி தங்க மோதிரத்தை பறித்து கொண்டு சென்ற ஆமு ரபீக்ராஜா பேருந்து நிலையத்தில் உள்ள கடைக்காரர்களையும் மிரட்டினர்.

நத்தம் பேருந்து நிலையம்
இதைப் பார்த்த கடைக்காரர்கள் கடையை அடைத்து விட்டு ஓடிவிட்டனர். மேலும் மாலை நேரம் என்பதால் மாணவ, மாணவிகளும்,பொதுமக்களும் அதிகமாக கூடியிருந்த நேரத்தில் பேருந்து நிலையத்தில் நீண்ட அரிவாளுடன் நடமாடிய ரபிக் ராஜாவை பார்த்த பொதுமக்கள் பயத்தில் பொதுமக்களும் அங்கும், இங்குமாக சிதறி ஓடினர். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பரவியது. மேலும் இச்சம்பவம் குறித்து நந்தகுமார் என்பவர் நத்தம் போலீசில் புகார் செய்தார்.
பொதுமக்கள் பீதி
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் போலீஸ்- இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், சப்,இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட போலீசார்கள் பேருந்து நிலையத்தில் அரிவாளுடன் சுற்றி திரிந்த ரபீக்ராஜாவை சுற்றி வளைத்து பிடித்து அவரிடமிருந்து அரிவாளை கைப்பற்றினர். தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு நத்தம் போலீசார் அவரை கைது செய்து நத்தம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்றத்தில் தகராறு
அப்போது நீதிமன்றத்திலும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அவரை மதுரை சிறையில் போய் அடைத்தனர். இச்சம்பவத்தால் நத்தம் பேருந்து நிலைய பகுதியில் 1 மணி நேரம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் ரபீக்ராஜா இன்ஸ்டாகிராமில் கச்சாநத்தத்தை சேர்ந்த பிரபல ரவுடி சுள்ளான் அகிலன் வீடியோக்களை பார்த்து அதே போல் தானும் ரவுடி ஆக வரவேண்டும் என மாஸ் ஆக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் தகராறு
அதில் மது பாட்டில்களுடனும், காவல் நிலையத்திலும், சிறைச் சாலையிலும் உள்ளே சென்று வீடியோக்களை பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் தான் பெரிய ரவுடி என காட்டிக் கொள்ள நினைத்து விபத்தில் வலது கை உடைந்த நிலையிலும் பந்தா காட்டியவருக்கு போலீசின் சிறப்பு கவனிப்பின் பின்னர் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
ரவுடி கலாச்சாரம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல்லைச் சேர்ந்த கொலை செய்யப்பட்ட ரவுடி பட்டறை சரவணன் கொலைக்கு பழிவாங்கும் விதமாக சில ரவுடிகளின் புகைப்படத்தை வைத்து ரிலீஸ் போட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் இதுபோல பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், பொது மக்களை அச்சுறுத்தும் வகையிலும் ரீல்ஸ் போட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications