திண்டுக்கல்: மெர்சலாக்கிய "வெங்காய திருடன்"... வடிவேலு பட பாணியில் கொள்ளையடித்து சிக்கிய பரிதாபம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே விவசாயி ஒருவரின் பட்டறையில் இருந்து 15 மூட்டை வெங்காயம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர் வடிவேலுவின் சினிமா பாணியில் கொள்ளையடித்ததால் கொள்ளையனும் அவனது கூட்டாளியும் வசமாக சிக்கி சின்னாபின்னமாகிப் போயினர்.
தக்காளி விலை உயர்வைத் தொடர்ந்து வெங்காயமும் விலை உயரக் கூடும் என்கிற தகவல் பரவி வருகிறது. இதனால் வெங்காய விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டு ஏற்றுமதி வெங்காயத்துக்கு 40% வரியும் விதித்துள்ளது. அத்துடன் வெங்காய கொள்முதலையும் மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வெங்காய திருட்டு சம்பவங்கள் ஆங்காங்கே செய்திகளாகி வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. செம்பட்டி அருகே உத்தையகவுண்டன்பட்டி விவசாயி முத்துராஜ் தமது தோட்டத்தில் பட்டறை அமைத்து வெங்காயத்தை சேமித்து வைத்திருந்தார். நேற்று காலையில் தோட்டத்துக்கு சென்ற முத்துராஜூக்கு பட்டறையில் வெங்காயம் திருடு போயிருந்தது தெரியவந்தது. சுமார் 15 கிலோ வெங்காயம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை உறவினர்களிடம் முத்துராஜ் தெரிவித்தும் இருந்தார்.
அப்போது முத்துராஜின் வெங்காய பட்டறையில் இருந்து ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வழிநெடுக வெங்காயம் சிதறியபடி இருந்தது. இந்த வெங்காய வழித்தடத்தை முத்துராஜூம் அவரது உறவினர்களும் பின்பற்றி சென்ற போது அழகம்பட்டி செல்வம் என்பவரது காளவாசல் வரை போனது. இதனையடுத்து காளவாசலை சல்லடை போட்டு தேடிய போது வெங்காய மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து காளவாசல் செல்வம், அவரது கூட்டாளி பொன்ராம் ஆகியோரை முத்துராஜூம் உறவினர்களும் தேடியதில் பொன்ராம் மட்டும் சிக்கினார். பொன்ராமை அடித்து துவைத்து செம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர் ஊர் மக்கள்.
அப்போது வெங்காய கொள்ளையன் பொன்ராமை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் முத்துராஜூம் அவரது உறவினர்களும் உடனே சிறையில் அடைக்க வலியுறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டினர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது பொன்ராமின் கூட்டாளி காளவாசல் செல்வத்தை செம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.
திரைப்படம் ஒன்றில் வடிவேலு கொள்ளையடிக்க கூட்டாளிகளுடன் செல்லும் போது மிளகாய் பொடியை தூவிவிட்டு வரச் சொல்லி போலீசில் சிக்கிக் கொள்வார். அதேபோல வெங்காய கொள்ளையன் வழிநெடுகிலும் வெங்காயத்தை சிதறவிட்டு சிக்கிய கதைதான் திண்டுக்கல் மாவட்டத்தில் ஹாட் டாபிக்.












Click it and Unblock the Notifications