ஹாஸ்பிடலில் ஜஸ்டின் மணிகண்டன்.. ஜாமீன் தர முடியாது! அதிரடியாக உத்தரவிட்ட நீதிமன்றம்! என்ன நடந்தது?
திண்டுக்கல்: பழனியில் 100 கோடி ரூபாய் நில மோசடி விவகாரத்தில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், பத்திர எழுத்தரும் இடைத்தரகருமான ஜெயப்பிரகாஷ் ஆகியோரது முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜஸ்டின் மணிகண்டன் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 21ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பு நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் இதுவரை விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், மோசடியாக நிலம் வாங்கிய திருப்பூர் வெள்ளத்துரை, பழநி சேதுபதி, பத்திரம் தயாரித்து கொடுத்த வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகிய நால்வரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
பழனி நில மோசடி
இந்நிலையில் கொடைக்கானல் அருகே உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே ஜஸ்டின் மணிகண்டன் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற சிபிசிஐடி போலீசார் 06.08.26 அன்று அவரை கைது செய்து திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். இந்நிலையில், ஜஸ்டின் மணிகண்டனுக்கு ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஜஸ்டின் மணிகண்டன்
இதனை அடுத்து திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்திலிருந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அன்று இரவு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். பின் மறுநாள் (07.08.26) திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் வந்த திண்டுக்கல் நீதித்துறை நடுவர் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை ஜஸ்டின் மணிகண்டனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டு சென்றார்.
ஜெயபிரகாஷ்
அதே நிலையில் 07.08.26 அன்று தலைமறைவாக இருந்த மற்றொரு இடைத்தரகர் ஜெயபிரகாஷ் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து 08.08.26 அன்று ஜஸ்டின் மணிகண்டன் உடல்நிலை மோசமானதால் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அன்று (08.08.26) மதுரை மத்திய சிறையில் உடல்நிலை சரியில்லாமல் ஆன்வர்தீன் உயிரிழந்தார்.
மேல் சிகிச்சை
இந்த நிலையில் இன்று (12.08.26) ஜஸ்டின் மணிகண்டன் நெஞ்சு வலி சம்பந்தமான மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் ஜஸ்டின் மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த வாரம் ஜாமீன் கேட்டு முருகதாஸ், சேதுபதி, வெள்ளைதுறை தரப்பில் திண்டுக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு அனைவரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஜாமீன் மனு தள்ளுபடி
இந்த நிலையில் கடந்த 10.08.26 அன்று சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் பத்திர எழுத்தரும், இடைத்தரகருமான ஜெயபிரகாஷ் ஆகியோர் ஜாமீன் கேட்டு திண்டுக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இன்று (12.08.26) இந்த வழக்கு நீதிபதி பாக்கியராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் பத்திர எழுத்தரும், இடைத்தரகருமான ஜெயபிரகாஷ் ஆகிய இருவரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications
