Palani: பழனி ரூ 100 கோடி நில மோசடி! சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது! என்ன நடந்தது?
பழனி: பழனி மலையடிவாரத்தில் ரூ 100 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை ரூ 2 கோடிக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக எழுந்த புகாரில் கொடைக்கானல் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஏற்கெனவே 4 பேர் கைதாகி இருந்த நிலையில் தற்போது 5ஆவதாக ஜஸ்டின் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். சார்பதிவாளர் ஜஸ்டினின் முன்ஜாமீன் நேற்று ரத்தான நிலையில் அவரை சிபிசிஐடி போலீஸார் கொடைக்கானலில் வைத்து கைது செய்தனர்.

பழனி தண்டாயுத பாணி சுவாமி மடத்திற்கு சொந்தமாக 1.45 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த மாதம் 6ஆம் தேதி தனிநபர்கள் பெயரில் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
அதாவது ரூ 100 கோடி மதிப்பிலான நிலத்தை வெறும் ரூ 2 கோடிக்கு வெள்ளத்துரை, சேதுபதி ஆகியோருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக பழனி மலையடிவார போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் பத்திரப்பதிவை நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பழனி சார்பதிவாளர்கள் இந்த நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ய மறுத்து அவர்கள் விடுப்பில் சென்றனர்.
இதனால் கொடைக்கானலில் உள்ள சார்பதிவாளர் ஜஸ்டினை பழனி அலுவலகத்திற்கு அழைத்து வந்து முறைகேடான பத்திரப்பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் ஜஸ்டின் மணிகண்டனும், பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து பழனி கோயில் கண்காணிப்பாளர் சார்பில் இடையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் மனுதாரர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, சம்பந்தப்பட்ட நிலத்தை பத்திரப்பதிவு செய்யக் கூடாது என முந்தைய சார்பதிவாளர் குறிப்பு எழுதியிருந்தார்.
அதையும் பொருட்படுத்தாமல் சார்பதிவாளர் ஜஸ்டின் நிலத்தை பதிவு செய்தார். அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என நிபந்தனையுடன் இடைக்கால முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கோர்ட் உத்தரவின்படி ஜஸ்டின் மணிகண்டனிடம் கடந்த 27ஆம் தேதி முதல் 7 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டு நிறைவடைந்தது. ஆனால் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதால் அவரது முன்ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என சிபிசிஐடி, மதுரை அமர்வில் மனுதாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜசேகர், 2 பேரின் முன்ஜாமீன் உத்தரவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து இன்றைய தினம் ஜஸ்டின் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.
இந்த பழனி நில மோசடி வழக்கில் இதுவரை முருகதாஸ் (நிலத்தை விற்றவர்), வெள்ளைத்துரை, சேதுபதி (இருவரும் நிலத்தை வாங்கியவர்கள்), அன்வர்தீன் (பத்திரத்தை தயாரித்தவர்) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தற்போது 5 பேர் கைதாகியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
