முருகா எல்லாம் உனக்குத் தான்.. பழனி கோவிலில் கொட்டிக் கிடந்த தங்கம்! அள்ள அள்ள குறையாத வெள்ளி!
திண்டுக்கல்: உலகப்புகழ் பெற்ற முருகன் கோயில்களில் முதன்மையானதாக விளங்கும் பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் மற்றும் திருவாவினன்குடி உள்ளிட்ட உபகோயில்களில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், மொத்தம் 4 கோடியே 35 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான வருவாய் கிடைத்துள்ளது. மேலும், 954 கிராம் தங்கம் மற்றும் 9 ஆயிரத்து 331 கிராம் (சுமார் 9 கிலோ) வெள்ளிப் பொருட்கள் உண்டியலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.
உலகப்புகழ் பெற்ற முருகன் கோயில்களில் முதன்மையான கோயில் பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் தான். இந்த கோயிலுக்கு தமிழகத்தை தாண்டி கேரளாவில் இருந்து ஏரளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கிறார்கள்.

பழனிக்கு என்றே ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து தரிசனம் செய்வார்கள். குறிப்பாக பொதுவாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் முருக பெருமானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
பழனி முருகன் கோவில்
அந்த காலக்கட்டத்தில நிற்க கூட இடம் இல்லாத அளவிற்கு பல நாட்கள் கூட்டம் அலைமோதும். அதேநேரம் மற்ற நேரங்களில் விஷேச நாட்களில் மற்றும் வெள்ளி, செவ்வாய்கிழமைகளில், ஞாயிறுகளில் பழனி முருகன் கோயிலுக்கு கூட்டம் அதிகமாகவே இருக்கும். இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே தொடர் விடுமுறை மற்றும் வைகாசி விசாகம் காரணமாக பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது.
பக்தர்கள் காணிக்கை
குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பழனி முருகப் பெருமானை தரிசித்தனர். அவ்வாறு மலை கோயிலுக்கு வரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி, சேவல், தானியங்கள் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துவார்கள். தொடர்ந்து ஒரு மாதத்திற்கு ஒருமுறை அல்லது உண்டியல் நிரம்பியவுடன் அவற்றை திறந்து எண்ணுவது வழக்கம்.
உண்டியல் காணிக்கை
இதை அடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், வெள்ளி, பணம் ஆகியவை மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு தனித்தனியாக பிரிக்கப்பட்டது. பின்னர் பணம், நாணயம் ஆகியவற்றை என்னும் பணியில் கோவில் ஊழியர்கள், வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ மாணவிகள் ஈடுபட்டனர்.
பழனி கோவில் வருவாய்
அதன்படி, கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்றுடன் நிறைவடைந்தது. இரண்டு நாள் எண்ணிக்கை முடிவில் ரொக்கம் வரவு ரூபாய் 4 கோடியே 35 இலட்சத்து 55 ஆயிரத்து 571 கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
9 கிலோ வெள்ளி
தங்கம் 954 கிராமும், வெள்ளி 9 ஆயிரத்து 331 கிராமும் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு பணத்தாள்கள் 838 ம் கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணிக்கையில் தன்னார்வலர்கள், பழனியாண்டவர் கல்லூரி அலுவலர்கள், திருக்கோயில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். கிடைத்த காணிக்கை அனைத்தும் கோவில் வங்கி கணக்கு மற்றும் லாக்கரில் வரவு வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications