பிரதமர் மோடி நவ.11-ல் தமிழகம் வருகை? திண்டுக்கல் காந்தி கிராம பல்கலை.பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு?
திண்டுக்கல்: பிரதமர் மோடி நவம்பர் 11-ந் தேதி தமிழகம் வருகை தரக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கலாம் எனவும் கூறப்படுகிறது.
பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு நடத்திய 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழாவில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 30-ந் தேதி பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க போவதாக தகவல்கள் பரவின.
ஆனால் பிரதமர் மோடி, தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்கவில்லை; அப்படி ஒரு தகவலை யார் பரப்பிவிட்டார்கள் என தெரியவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

மோடி சகோதரர்
பிரதமர் மோடியின் சகோதரர் தாமோதர தாஸ் பங்கஜ மோடி, பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதனால் பிரதமர் மோடி வருகைக்காக முன்னோட்டமே அவரது சகோதரரின் பயணம் எனவும் தகவல்கள் பரவி இருந்தன. இருந்தபோதும் பிரதமர் மோடி வருகை குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

காந்தி கிராமம்
இந்நிலையில் திண்டுக்கல் காந்தி கிராமம், காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க நவம்பர் 11-ந் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளதாக புதியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திண்டுக்கல் அருகே, மதுரை நெடுஞ்சாலையில் காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. சிறுமலை அடிவாரப் பகுதியில் பிரம்மாண்டமாக விரிந்து பரந்து கிடக்கிறது.

2019-ல் பட்டமளிப்பு
2019-ம் ஆண்டு திண்டுக்கல் காந்தி கிராம கிராமியப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் மத்திய அமைச்சராக இருந்த ரமேஷ் பொக்ரியால் பங்கேற்றார். அதன் பின்னர் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. முன்னதாக 2018-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதியாக இருந்த வெங்கையா நாயுடு பங்கேற்றார்.

பிரதமர் மோடி வருகை?
இந்நிலையில் காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா வரும் நவம்பர் 11-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திண்டுக்கல் மற்றும் திண்டுக்கல்- மதுரை நெடுஞ்சாலையில் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் பிரதமர் மோடி வருகை தொடர்பாக காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் மாவட்ட ஆட்சியர் விசாகன் ஆய்வு நடத்தினார் எனவும் கூறப்படுகிறது. ஆனால் பிரதமர் மோடியின் தமிழகம் வருகை தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வரை வெளியாகவும் இல்லை.












Click it and Unblock the Notifications