பட்டாக்கத்தி பைரவா..கேக்க நீயும் வெட்ட வா! கெத்தாக நினைத்து வெத்தாக போன 2கே கிட்! அள்ளி சென்ற போலீஸ்
திண்டுக்கல்: கடந்த சில நாட்களாகவே இன்ஸ்டாவில் கெத்துக்காக ரீல்ஸ் போட்டு கம்பி எண்ணி வரும் 2கே கிட்ஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கெத்துக்காக பட்டாக்கத்தியால் கேக் வெட்டி அதனை வீடியோவாக வெளியிட்ட திண்டுக்கல் பர்த் டே பேபியை, கொத்தாக தூக்கி கம்பிகளுக்கிடையே களி திண்ண வைத்திருக்கின்றனர் போலீசார்.. என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்..
சமூக வலைதளங்கள் வந்துவிட்டதும் போதும் ரீல்ஸ் மோகம் அனைவரையும் ஆட்டி படைக்கிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை செல்ஃபோனும் கையுமாகத்தான் அலைகின்றனர்.

குறிப்பாக இளைஞர்கள் ரீல்ஸ் போட்டு சிக்கலில் சிக்கிக் கொள்வதும் அதிகரித்து வந்திருக்கிறது. இருசக்கர வாகனங்களில் ஸ்டன்ட் செய்வது பட்டாக்கத்தியால் கேக் வெட்டுவது மது குடிப்பது போல ரீல்ஸ் விடுவது என ரீல் போட்டு காவல்துறையில் சிக்கி சின்னாபின்னமான சம்பவங்கள் ஏராளமாக நடந்திருக்கிறது.
அப்படி ஒரு சம்பவம் தான் திண்டுக்கல் மாவட்ட நத்தம் அருகே தற்போது நடந்திருக்கிறது. நத்தத்தில் அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கேக்கை பட்டா கத்தியால் வெட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா மகன் எம்.கே.ராஜா. இவர் புதிய திராவிட கழக கட்சியின் நத்தம் ஒன்றிய செயலாளராக செயல்பட்டு வருகிறார்.
இவருக்கு சில நாட்களுக்கு முன் (ஆகஸ்ட்-17-ம் தேதி) பிறந்த நாள். அதனால் அவரது பிறந்தநாளை நண்பர்கள் சிறப்பாக கொண்டாட எண்ணி நண்பனுக்காக கேக் வாங்கி வந்தனர். அந்த கேக்கை ராஜா அவரது வீட்டின் அருகே பட்டா கத்தியில் வெட்டி கொண்டாடியதாக கூறப்படுகிறது. திரைப்படங்களில் வருவது போல ஆட்டம் பாட்டம் கூத்து கும்மாளம் என கேக் வெட்டி கொண்டாடி அவர்கள் அதனை ரீல்ஸாக எடுத்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்தனர்.

இந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் டானுக்கு எல்லாம் டான் நான் தான் என்பது போல நடுவில் நின்று கத்தியுடனும், கழுத்தில் கத்தியை வைத்து மாஸ் காட்டி இருந்தார் ராஜா. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக கேக் வெட்டப்பட்டுள்ளதாகவும், ராஜாவின் இந்நடவடிக்கை பொதுமக்களை மிரட்டும் தொனியில் உள்ளதாகவும் போலீசார் ராஜாவை தேடி விரைந்தனர்.

இப்படி பட்டா கத்தியால் கேக் வெட்டினால் மற்ற இளைஞர்களிடம் இது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறி நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமையிலான போலீசார் ராஜாவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் இதுபோல் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும், வகையில் சமூக வலைதளங்கள் மற்றும் பொது இடங்களில் நடந்து கொள்ளும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.












Click it and Unblock the Notifications