பழனி முருகன் கோவிலில் மீண்டும் கும்பாபிஷேகம்! கோவில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! எப்போது?
திண்டுக்கல்: உலகப் புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் ராஜகோபுரத்தின் உச்சியில் சேதமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கும்பாபிஷேகம் நடந்த இரண்டாவது ஆண்டே ராஜகோபுரம் சேதமடைந்ததால் பக்தர்கள் பதற்றமடைந்த நிலையில், சேதமடைந்த ’டகோரம்’ என்ற பகுதி புனரமைப்பு செய்யப்பட்ட நிலையில் 24 ஆம் தேதி ’இலகு கும்பாபிஷேகம்’ நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களிலிருந்தும் ,வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகின்றனர்.

இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவிலின் அடிவாரம் முதல், கடைகள், பாதுகாப்பு, துப்புரவு பணி என அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை மூலமே மேற்கொள்ளப்படுகிறது.
பொதுவாக வெள்ளி, சனி ,ஞாயிறு தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் மின் இழுவை ரயில் ,ரோப்கார் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். மேலும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம், கார்த்திகை, கந்த சஷ்டி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரள்வார்கள்.
கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 16 ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து 48 நாட்கள் கோவிலில் மண்டல பூஜை நடந்தது. அந்த மண்டல பூஜை காலத்தில் உச்சி காலத்தில் சுவாமிக்கு சிறப்பு பூஜை அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மண்டல பூஜை காலங்களில் சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் தேதி மண்டல பூஜையும் நிறைவு பெற்றது. இந்த நிலையில் கும்பாபிஷேகம் முடிந்து இன்னும் முழுமையாக 2 ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் பழனி கோவில் ராஜகோபுரம் சேதமடைந்த சம்பவம் பக்தர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மலைக்கோவிலின் ராஜ கோபுரம் உச்சியில் ஒரு மூலையில் உள்ள இரண்டு புறமும் கொம்பு போன்ற பகுதியில் ஒரு பகுதி உடைந்துள்ள சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், சேதத்திற்கு என்ன காரணம் என வல்லுனர்கள் கொண்டு ஆராயப்பட்டது. தொடர்ந்து ழனி கோயில் தேவஸ்தானம், ஸ்தபதி குழுவிடம் இதனை சரி செய்ய கோரிக்கையும் அளித்தது. இதனிடையே பக்தர்கள் பதற்றமடைய தேவையில்லை என பழனி கோவில் நிர்வாகம் கூறியது.
மேலும், கோபுரங்கள் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள பதுமைகள் மற்றும் சிற்பங்கள் சேதமடைவது இயல்பானது. பழனி கோவிலில் உள்ள குரங்குகள் கோவில் கோபுரங்களில் ஏறி அதில் உள்ள சிற்பங்கள் மற்றும் பதுமைகளை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது எனவும் கூறியது. இந்த நிலையில் சேதமடைந்த ’டகோரம்’ என்ற பகுதி புனரமைப்பு செய்யப்பட்ட நிலையில் 24 ஆம் தேதி ’இலகு கும்பாபிஷேகம்’ நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பழனி கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் மலைக்கோயிலில் அமைந்துள்ள ஐந்து நிலை இராஜகோபுரத்தின் உச்சியில் வடக்கு பக்கம் அமைந்துள்ள பாதிப்படைந்திருந்த டகோரம் புனரமைப்பு செய்யப்பட்டு 24.10.2024 அன்று காலை 5.00 மணிக்கு மேல் 5.45 மணிக்குள் இலகு கும்பாபிஷேகம் நடைபெறும் என்ற விபரம் பக்தர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.” என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications