விர்ரென விலையேற்றம்.. அரிசி விலை உயர்வுக்கு நாங்கள் பொறுப்பல்ல.. மழையைக் கைகாட்டும் விக்கிரமராஜா!
திண்டுக்கல்: அரிசி உள்ளிட்டவற்றின் விலைவாசி உயர்வுக்கு வியாபாரிகள் பொறுப்பல்ல. கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து வரும் அரிசி குறைந்ததாலும், விவசாயத்திற்கு போதிய நீர்வளம் இல்லாத காரணத்தாலுமே விலை உயர்ந்துள்ளது எனவும், தற்போதைய குறுவை சாகுபடி சரியாக இல்லை என்றாலும் விலையேற்றம் ஏற்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கம் சார்பில் 22 ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விக்கிரமராஜா கலந்து கொண்டார். பின் மத்திய அரசுக்கு 5 கோரிக்கை தீர்மானங்களும், மாநில அரசுக்கு 9 கோரிக்கை தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வர்த்தக சங்கத்தின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேசும்போது, திண்டுக்கல் வேகமாகப் வளர்ந்து வருகிறது. புதிய பேருந்து நிலைய பணிகள் போர்க்கால அடிப்படையில் மிக விரைவாக முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்.
விக்கிரமராஜா
கடந்த ஆட்சியின் போது கட்டிட வரி உயர்த்தப்பட்டதால் மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகித் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், தற்போதைய அரசும் கட்டிடங்களை மீண்டும் வரைமுறைப்படுத்த அளவீடு செய்யும் பணிகளைத் தொடங்கி, தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதனை அரசு முறையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். மக்களின் பொருளாதார நிலைப்பாட்டை முழுமையாகப் புரிந்து கொண்டுதான் வரி உயர்வை அமல்படுத்த வேண்டும்.
உள்நாட்டு வணிகம்
தற்போது பல்வேறு இடங்களில் சோதனைச்சாவடிகள் (செக்போஸ்ட்கள்) அமைத்து ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனைகள் நடத்தி வருகிறார்கள். இது சாமானிய சிறு வணிகர்களை பெரிதும் அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. 'உள்நாட்டு வணிகத்தைப் பெருக்க வேண்டும், உள்நாட்டுப் பொருட்களை வாங்க வேண்டும்' எனப் பிரதமர் வலியுறுத்தி வரும் நிலையில், இத்தகைய அச்சுறுத்தும் நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட்டு உள்நாட்டு வணிகத்தை அரசு ஊக்குவிக்க வேண்டும்.
ஜிஎஸ்டி வசூல்
வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜிஎஸ்டி வசூல் அதிகரித்து ரூ. 2 லட்சம் கோடியை எட்டியுள்ளது. வரி செலுத்தும் நடைமுறைகளைத் தொடர்ந்து எளிமைப்படுத்தினால், இந்த வசூல் ரூ. 3 லட்சம் கோடியாக உயரும். எனவே, வரி வசூல் என்ற பெயரில் வணிகர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை அதிகாரிகள் கைவிட வேண்டும்.
முதலீட்டாளர்கள் மாநாடு
சட்டசபையில் வணிகர்களுக்கான எந்த அறிவிப்பும் வராதது வருத்தமளிக்கிறது. விரைவாக முதலமைச்சரை சந்தித்து எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை வழங்க இருக்கிறோம், அவை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம். முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்பு வணிகர்களிடம் ஆலோசனை செய்தும், எங்களது கருத்துக்கள் அதில் பதிவு செய்யப்படவில்லை.
அரிசி விலை உயர்வு
அரிசி உள்ளிட்ட விலைவாசி உயர்வுக்கு வியாபாரிகள் பொறுப்பல்ல. கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து வரும் அரிசி குறைந்ததாலும், விவசாயத்திற்கு போதிய நீர்வளம் இல்லாத காரணத்தாலுமே விலை உயர்ந்துள்ளது. தற்போதைய குறுவை சாகுபடி சரியாக இல்லை என்றால் மேலும் விலையேற்றம் ஏற்படும். இதனைத் தவிர்க்க, ரோடுகளில் வைக்கப்பட்டு மழையில் முளைத்து வீணாகும் நெற்பயிர்களைக் காக்க, மற்ற துறைகளைப் போல விவசாயத் துறைக்கும் முழுமையாக நிதி செலவு செய்து நெற்பயிர்கள் வீணாகாமல் காக்கப்பட வேண்டும்.
வணிகர் சங்க பேரமைப்பு
நீராதாரத்தை பெருக்க கால்வாய்கள், குளங்களை சீரமைக்கும் அரசின் அறிவிப்பை முழுமையாக செயல்படுத்த, ஓய்வுபெற்ற அப்பழுக்கற்ற ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடத்தில் அமர்த்தி ஒவ்வொரு ஏரி, குளங்களையும் சீரமைத்து முறைப்படுத்த வேண்டும். இதற்கு அரசுக்கு தேவையான முழு ஒத்துழைப்பையும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வழங்கும்.
மேகதாது அணை
வருங்காலத்தில் நீராதாரம் சரியாக இருந்தால் மட்டுமே பொருளாதாரம் மேம்பட்டு, விவசாயப் பொருட்கள் தடையின்றி கிடைத்து விலைவாசி குறையும். மேகதாது அணை விவகாரத்தில் வணிகர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவது குறித்து, நாளை மறுநாள் ஏலகிரியில் நடைபெறும் மாநில செயற்குழு கூட்டத்தில் அனைத்து மாவட்டத் தலைவர்களுடனும் விவாதித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படும்.
அரசின் செயல்பாடுகள்
புதிய அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், அவர்களின் செயல்பாடுகளை முழுமையாக மதிப்பிட இக்காலக்கட்டம் போதாது. ஆறு மாதங்கள் கடந்த பின்னரே அரசின் செயல்பாடுகள் குறித்த எங்களது தெளிவான நிலைப்பாட்டை தெரிவிக்க முடியும். மின்சார கட்டணம் உயர்த்தப்படாது என ஆரம்பத்தில் கூறப்பட்ட நிலையில், தற்போது 85% வரை உயர்த்தப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை அரசு மறுபரிசீலனை செய்து குறைக்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications
