திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த சுகுமார் என்பவர் பழநி பைபாஸ் ரோட்டில் மனமகிழ் மன்றம் நடத்தி வருகிறார். இவரிடம் மனமகிழ் மன்றப் பிரச்சினை இல்லாமல் தொடர்ந்து நடத்த திண்டுக்கல் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த விவாகரத்தில் 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் அவர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது தடையங்களை அழிக்க நடந்த முயற்சியை தடுத்த டிஎஸ்பி காயம் அடைந்துள்ளார்.
திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த 52 வயதாகும் சுகுமார் என்பவர் திண்டுக்கல் பைபாஸ் சாலையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மனமகிழ் மன்றம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் நகர தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் , சுகுமார் நடத்தும் மனமகிழ் மன்றத்துக்குச் சென்றுள்ளாராம்

அப்போது உங்களுடைய மனமகிழ் மன்றத்தில் சட்டவிரோதமான செயல்கள் நடப்பதாகப் புகார் வந்துள்ளது என்று சுகுமார் கூறினாராம். அந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் தனக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் லஞ்சமாகத் தரவேண்டும் என்று மிரட்டினாராம். இதைக் கேட்ட சுகுமார், அவ்வளவு தொகையைத் தன்னால் கொடுக்க முடியாது என்று தெரிவித்தார். பின்னர் ரூ.7 ஆயிரம் கொடுக்கும்படி கலையரசன் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாராம்.
இந்த நிலையில் மாதம் மாதம் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுகுமார், அதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி நாகராஜிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய டிஎஸ்பி நாகராஜன் புகாரில் உண்மை தன்மையை உறுதி செய்ய முடிவு செய்தார்.., கலையரசனை கையும் களவுமாகப் பிடிக்க முடிவு செய்தார். அதற்காக ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை சுகுமாரிடம் கொடுத்து, சப்-இன்ஸ்பெக்டரிடம் கொடுக்கும்படி கூறினார்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட சுகுமார், நேற்று இரவு 7 மணி அளவில் கலையரசனை செல்போனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது திண்டுக்கல் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு பேக்கரிக்கு வந்தால் பணத்தைக் கொடுப்பதாகத் தெரிவித்தார். தொடர்ந்து கலையரசனும் அவர் கூறிய இடத்துக்கு சாதாரண உடையில் வந்தார். அவர் வருவதற்கு முன்பே லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரூபா மற்றும் போலீசார் அங்கு மறைந்திருந்தனர்.
தொடர்ந்து சுகுமார், கலையரசனிடம் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.7 ஆயிரத்தைக் கொடுத்துள்ளார். அவர் அதை வாங்கும்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கலையரசனை கையும், களவுமாகப் பிடித்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து கலையரசன் தப்பியோட முயன்றார். இதையடுத்து அவரை மடக்கிப் பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், விசாரணைக்காக தாலுகா காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
அங்கு ரசாயன கரைசலுடன் இருந்த கண்ணாடி பாட்டிலில் கலையரசனின் கைவிரல்களை நனைக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது தனது கைகளில் இருக்கும் தடயத்தை அழிக்க நினைத்த கலையரசன், கண்ணாடி பாட்டிலை வலது கையால் தாக்கி உடைத்தாராம். அப்போது அவருடைய கையில் ரத்தக்காயம் ஏற்பட்டது.
பின்னர் அருகில் இருந்த மற்றொரு கண்ணாடி பாட்டிலையும் கலையரசன் உடைத்தாராம், உடைந்த கண்ணாடித் துண்டுகளை எடுத்து இடது கையில் தேய்க்க முயன்றார். இதைக் கவனித்த போலீஸ் டிஎஸ்பி நாகராஜ் அவரைத் தடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருடைய இடது கையில் கண்ணாடித் துண்டுகள் கீறியதில் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து திண்டுக்கல் உள்ள மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவக் குழுவினர் இருவருக்கும் சிகிச்சை கொடுத்தனர். இதையடுத்து கலையரசன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். மேலும் அவரை மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டும் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணாடி பாட்டிலை உடைத்து தனது கைகளில் கீறி தடயத்தை அழிக்க முயன்ற சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications