பழனி கோவில் அருகே திடீரென கேட்ட வெடிச் சத்தம்.. பற்றி எரிந்த கார்! பதறிப் போன பக்தர்கள்.. என்ன ஆச்சு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான தங்கும் விடுதியில் வைக்கப்பட்டிருந்த ஸ்சானிடைசர் பேரல் வெடித்து அருகில் நின்றிருந்த கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த இருவர் காயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக் கடவுளாம் முருகப்பெருமானின் அறுவடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பழனி முருகன் கோவில் உள்ளது. ஆண்டி கோலத்தில் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்ட முருகர் இங்கு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

போகர் என்ற சித்தர் 9 வகையான விஷயங்களை கொண்டு உருவாக்கியதுதான் நவபாஷாண சிலை. இந்த கோவிலில் தைப்பூசம் உலகப் புகழ்பெற்றது.
மேலும் முருகனுக்கு உகந்த நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றனர். தமிழகத்தில் உள்ள கோவில்களில் ரோப் கார் வசதி கொண்ட முதல் கோவில் பழனி முருகன் கோவில் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.
அவ்வாறு பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக திருக்கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான தண்டபாணி நிலையம், இடும்பன் குடில் மற்றும் கிரிவிதி கோசாலை ஆகிய இடங்களில் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிக அறைகள் கொண்ட தங்கும் விடுதியான தண்டபாணி நிலையத்தில் கேரளாவைச் சேர்ந்த குடும்பத்தினர் கடம்பன் இல்லம் பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.

அவர்கள் காரை அறைக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவர்களது கார், அருகே தண்டபாணி நிலையம் துப்புரவு பணிகளுக்காக கடந்த 2020 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட மூன்று பேரல்களில் 750 லிட்டர் அளவில் வைக்கப்பட்டிருந்த சானிடைசர் பேரலை துப்பரவு பணியாளரான பிச்சால், முருகன் ஆகியோர் திறக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென பயங்கர சத்ததுடன் வெடித்து தீப்பிடித்தது. இதில் சானிடைசர் தெறித்து அருகில் இருந்த கார் தீப்பிடித்து எரிய துவங்கியது. வெடித்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி அடிவாரம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கார் தீ பிடித்து எரிவதை கண்டு அணைக்க முயற்சித்தனர்.
இருப்பினும் சானிடைசரில் ஏற்பட்ட தீயை அணைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. மேலும் இந்த விபத்தில் தண்டபாணி நிலையத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பிச்சால் மற்றும் முருகன் ஆகிய இரு பணியாளர்கள் காயமடைந்தனர். காயமடைந்த இருவரையும் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

திடீரென தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பொதுவெளியில் வைக்கப்பட்டிருந்த சானிடைசர் பேரல்களை துப்புரவு பணியாளர்கள் திறந்தபோது எதிர்பாராத விதமாக வெடித்து அருகில் இருந்த கார் தீப்பிடிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து கார் உரிமையாளர் திருக்கோவில் நிர்வாகத்தின் அலட்சியத்தாலேயே தீ விபத்து ஏற்பட்டதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அவர்களை சமாதானம் செய்த போலீசார் அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தியதை தொடர்ந்து கார் உரிமையாளர்கள் அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications