பயமா? சான்ஸே இல்லை.. முதல்வரை ஃபாலோ செய்யும் அப்பாவு! ஜாலியாக குடும்பத்துடன் டூர்.. என்ன சொன்னார்?
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் சபாநாயகர் அப்பாவு தனது குடும்பத்துடன் மலர்களை கண்டு ரசித்ததோடு சுற்றுலாப்பயணிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் தமிழக மக்களை யாரும் அச்சுறுத்த முடியாது என்றார்.
தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் குளுமையான சீசனை அனுபவிக்க கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்ததையடுத்து கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இவை அடுத்து இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிந்து வருகின்றனர்.
சபாநாயகர் அப்பாவு: முன்னதாக தேர்தல் நிறைவடைந்ததும் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு வந்திருந்தார. தொடர்ந்து பூங்கா கோல்ஃப் கிளப், நட்சத்திர ஏரி உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்ட அவர் தனது பயணத்தை முன்னதாகவே முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார். முதல்வரை தொடர்ந்து தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் வருகை புரிந்திருந்தார். தொடர்ந்து ஃப்ரையண்ட் புக்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை பார்வையிட்ட அவருடன் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

சட்டமன்ற கூட்டத் தொடர்: இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் ஜூன் 6 வரை சட்ட மன்ற கூட்டத்தொடர் இருக்காது. அரசு நிகழ்ச்சிகளிலும் நாங்கள் கலந்து கொள்ள கூடாது. 6ஆம் தேதி சட்ட மன்ற கூட்டத்தொடர் நடைபெறும். இதன் காரணமாக எனது குடும்பத்தினர் உடன் கொடைக்கானலில் நடைபெறும் மலர் கண்காட்சியை காண வேண்டும் என சொன்னதால் இங்கு குடும்பத்தினருடன் வந்துள்ளேன்.

அச்சுறுத்த முடியாது: தமிழ்நாட்டில் தமிழக மக்களை யாரும் அச்சுறுத்த முடியாது. தமிழ் தோன்றியது முதல் கொள்கை அடிப்படையில் இருக்க கூடிய கட்சி பயப்பட கூடியவர்கள் ஆட்சியில் இல்லை. கலைஞர் மகன் ஆட்சியில் உள்ளார். மக்களுக்கு உண்மைக்கு நியாயத்துக்கு பயப்படுவார்களே தவிர மிரட்டலுக்கு பயப்பட மாட்டார்கள். பாரத பிரதமர் அவர்கள் பொறுப்பு உணர்ந்து பேச வேண்டும். நேற்று சொல்வதை இன்று மாற்றி பேசுவதை பத்திரிக்கை ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன். நேரில் நான் பார்த்ததில்லை.
பிரதமர் மோடி: பாரத பிரதமர் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பிரதமர். ஜாதி, மத, இனம் எதுவுமே கிடையாது. தமிழக முதல்வர் எப்படி அனைவருக்கும் பொதுவான முதல்வராக இருக்கிறாரோ அதுபோல் பாரத பிரதமர் அனைவருக்கும் உண்டான பிரதமராக இருக்க வேண்டும். அவருக்கு வயதான காரணத்தால் மாற்றி மாற்றி பேசுகிறார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி கொடுக்கும் போது நான் ஒருவன் தான் எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.

ஜனநாயகம் இருக்காது: பாஜக வெற்றி பெற்றால் ஜனநாயகம் இருக்காது என ராகுல் காந்தி சொல்லியுள்ளார்.. ஆனால் தற்பொதே ஜனநாயகம் உள்ளதா என கேட்க தோன்றுகிறது. பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் யார் பயன் பெற்றார்கள்..? கார்பரேட் கம்பெனி கடன் தள்ளுபடி பெற்று பலன் பெறுகிறது. உலக பணக்காரர் பட்டியலில் 4வது இடத்தில் இருப்பவர்களுக்கு கடன் தள்ளுபடி பண்ண வேண்டுமா? விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி இல்லை? சிறு குறு நிறுவனங்களுக்கு எந்த தள்ளுபடியும் கிடையாது.. அவர்கள் பாதிக்கும் நிலைமையே உள்ளது" எனவும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications