மாடுகளால் அபாயம்.. மக்கள் உயிர் முக்கியமில்லையா? ஆட்சியர் உத்தரவை மதிக்காத திண்டுக்கல் அதிகாரிகள்
திண்டுக்கல்: சென்னையை போலவே திண்டுக்கல்லிலும் கடந்த சில நாட்களாக சாலைகளில் உலா வரும் மாடுகளால் மக்கள் ரத்த காயம் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மாடுகளை சாலையில் உலாவவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகளும், பிற அரசுத் துறைகளும் அதனை கண்டுகொள்ளாததால் சாலைகளில் விபத்துகளை சந்திக்கும் அபாயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள திண்டுக்கல்லில் மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிவது அதிகரித்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில மாதங்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்டோர் மாடுகள் தாக்கி படுகாயம் அடைந்திருக்கின்றனர்.

மேலும், தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் பொது மக்களை கடித்து அச்சுறுத்தும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிவதும், சாலைகளில் மாடுகள் உலாவுவதும் பொதுமக்களை அச்சுறுத்தலில் ஆழ்த்தியுள்ளது.
பெயருக்கு மட்டுமே திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதோடு, மாதத்திற்கு ஒரு முறை கணக்கு காட்டுவதற்காக மாடுகளைப் பிடித்து அபராதம் விதிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. ஆனாலும் மாட்டின் உரிமையாளர்கள் கண்டு கொள்வதாக தெரியவில்லை. இந்நிலையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவதோடு, திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தொல்லை தரும் வண்ணம் மாடுகளை சாலைகளில் திரிய விட்டால் மாடுகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி உத்தரவிட்டிருந்தார்.

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் மாடுகளை திரிய விட்டு பொதுமக்களுக்கும், பொது சுகாதாரத்திற்கும் இடையூறு இல்லாமல் தங்களது சொந்த இடத்தில் அடைத்து வைத்து சுகாதார முறையில் கழிவுகளை அகற்றி பராமரித்திட வேண்டும். பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் தொல்லை தரும் வண்ணம் மாடுகளை சாலைகளில் திரிய விட்டால் எவ்வித முன் அறிவிப்புமின்றி மாடுகளை பிடித்து பவுண்டில் அடைக்கப்படுவதுடன், மாடுகளின் உரிமையாளருக்கு முதல் முறை மாடு ஒன்றிற்கு ரூ.2,000 வீதமும், இரண்டாம் முறை ரூ.5000 வீதமும், அபராதக் கட்டணம் விதிக்கப்படும்.
அதே உரிமையாளர் மீண்டும் மாடுகளை திரிய விட்டால் மாடுகள் திருப்பி வழங்கப்படாது. மாடுகளை பொது ஏலம் மூலம் விற்பனை செய்து மாநகராட்சி கணக்கில் செலுத்தப்படும். மேலும் 1939ம் வருட தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் பிரிவுகள் 41(1) (3) (4) (8) 42,43,45,47,51 மற்றும் 134ன் கீழ் உரிய நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் காவல் துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார்.

கடந்த நவம்பர் மாதமே மாவட்ட ஆட்சியர் இவ்வாறாக உத்தரவிட்டிருந்த நிலையில் ஆட்சியரின் உத்தரவை நடைமுறைப்படுத்த திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகமும், அதிகாரிகளும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. காலை தொடங்கி இரவு வரை சாலையில் வாக்கிங் செல்வதைப் போல மாடுகள் உலாவுகின்றன. இரவு நேரங்களில் பேருந்து நிலையம், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல பகுதிகளில் மாடுகள் உலா வருகின்றன.
ஏற்கனவே இதே பகுதியில் சாலையில் மாடு தாக்கி வாகன ஓட்டி ஒருவர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் அதனை நடைமுறைப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பும் பொதுமக்கள், மாடுகளை சாலையில் உலாவ விடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, ஆட்சியரின் உத்தரவை மதிக்காத மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.













Click it and Unblock the Notifications