அவரா? பெரிய ஆளாச்சே! திமுகவில் இருந்து விலகிய புள்ளி! இருளில் ஸ்டாலின்.. குடும்பம் மீது பரபர புகார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக வெளிநாடு வாழ் தமிழர் அணியின் இணைச் செயலாளரும், கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான புகழ் காந்தி, திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கூறியுள்ளார். சில குடும்பங்களே கட்சியை முழுமையாக கட்டுப்படுத்துவதாகவும், கட்சித் தலைவரான முக ஸ்டாலினிடம் உண்மையான நிலை எடுத்துச் சொல்லப்படவில்லை என்பது தன்னை மிகவும் வேதனைப்படுத்துவதாக கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடித்தத்தில்," 1996-ஆம் ஆண்டு நாகர்கோவில் திமுக மாணவர் அணியின் துணைச் செயலாளராகப் பொறுப்பேற்றதன் மூலம் தொடங்கிய எனது 30 ஆண்டு கால அரசியல் பயணம் முழுவதும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு பெருமைமிக்க உறுப்பினராகவும், பொறுப்பாளராகவும் செயல்பட்டுள்ளேன்.

Pugazh Gandhi resigns from DMK

அதன் பின்னர் திமுக வெளிநாடு வாழ் தமிழர் அணியின் இணைச் செயலாளராகவும், கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றினேன். இந்தப் பொறுப்புகள் நான் பதவியாகப் பார்க்காமல், முழு மனதுடனும், உண்மையான அர்ப்பணிப்புடனும் புனிதமாக கருதினேன்.

திமுகவில் எனது பயணத்தை அதிகார ஆசையால் தொடங்கப்படவில்லை; கொள்கை நம்பிக்கையால்தான் தொடங்கினென். தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோரின் உயரிய சிந்தனைகள், சமூகநீதிக்கான அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, பகுத்தறிவு, மாநில உரிமைகள் மற்றும் தமிழர் கண்ணியம் ஆகியவை என்னை ஈர்த்தன. அந்தக் கொள்கைகள்தான் எனது அரசியல் வாழ்க்கையின் அடித்தளமாக இருந்தன. இன்று கட்சி எந்த நிலைக்கு மாறியுள்ளது என்பதை, அதே கொள்கைகளின் அடிப்படையில்தான் நான் மதிப்பிடுகிறேன்.

2021 முதல் 2026 வரை நீங்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில், வெளிநாடு வாழ் தமிழர் நல வாரிய உறுப்பினராக என்னை நியமித்ததற்கு உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அந்தப் பொறுப்பை முழு மனதுடனும் ஏற்று, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பெருமையுடனும் பொறுப்புடனும் சேவை செய்ய என்ன ஆன முயற்சிகளை செய்தேன்

நீங்கள் லண்டன், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோ, துபாய் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்றபோது, அங்குள்ள தமிழர் புலம்பெயர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தது எனக்கு பெருமையாக இருந்தது. மேலும், 2021 முதல் 2026 வரை ஆண்டுதோறும் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற்ற உலகத் தமிழர் புலம்பெயர் தின நிகழ்வுகளை, உலகத் தலைவர்கள், முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து வந்த தமிழர்களை உங்கள் தலைமையில் ஒருங்கிணைக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.

வெளிநாடு வாழ் தமிழர் அணியின் இணைச் செயலாளராக, அமெரிக்கா, ஐரோப்பாவின் பல நாடுகள், சிங்கப்பூர், மலேசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்து, அங்குள்ள திமுக வெளிநாடு வாழ் தமிழர் அணிகளை ஒருங்கிணைத்து, உலகத் தமிழர்களை ஒரே நோக்கில் இணைக்கும் பணியில் ஈடுபட்டேன்.

மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், சயின்சஸ் போ உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில், திராவிட மாடல் ஆட்சி மற்றும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரின் சமூகநீதி பங்களிப்புகள் குறித்து உரையாற்றிய பெருமையும் எனக்குக் கிடைத்தது.

டாக்டர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுடன் இணைந்து, உலகம் முழுவதும் திராவிட மற்றும் சமூகநீதி கொள்கைகளைப் பரப்பும் நோக்கில் "திராவிட தொழில்முறை நிபுணர்கள் மன்றம்" என்ற சிந்தனைக் குழுவை உருவாக்கிய பெருமையும் எனக்கு உள்ளது. அதன் மூலம் சசி தரூர், பேராசிரியர் கிறிஸ்டோப் ஜாஃப்ரிலோ, பேராசிரியர் அருண் குமார், தத்துக் பி. கமலநாதன் உள்ளிட்ட உலகின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய ஆளுமைகளுடன் இணையவழி கருத்தரங்குகளை நடத்தினேன். சமூகநீதி தொடர்பான பல கொள்கைக் குறிப்புகளையும் எழுதியுள்ளேன்.

எழுத்தாளராகவும், கட்டுரையாளராகவும், இலவச நலத்திட்டங்கள், பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத்தொகை, மாநில உரிமைகள் உள்ளிட்ட திமுக அரசின் நலத்திட்டங்களை தி இந்து, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி வயர், தி பிரிண்ட், தி நியூஸ் மினிட் உள்ளிட்ட தேசிய ஊடகங்களில் தொடர்ந்து ஆதரித்து எழுதினேன். இவை அனைத்தையும் சமூகநீதி என்ற உயரிய கொள்கைக்காகவே செய்தேன்.

கட்சி நிர்வாகியாக இருந்தபோது, 2011 முதல் 2021 வரை ஆட்சி செய்த அதிமுக அரசின் ஊழல்களை வெளிக்கொணருவதில் முன்னணியில் இருந்தேன். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய டெண்டர்கள், நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்கள், அம்மா மினி கிளினிக் நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்தேன். திமுக ஆட்சிக்கு வந்தால் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட நிர்வாகம் அமையும் என்ற நம்பிக்கையில்தான் இவற்றை செய்தேன்.

ஆனால் வருத்தத்துடன் கூறுகிறேன், 2021 முதல் 2026 வரை இருந்த திமுக அரசு, நாம் எதிர்த்து பிரச்சாரம் செய்த நிர்வாகத் தோல்விகளில் இருந்து வேறுபட்டதாக இருக்கவில்லை. மாறாக, சில நேரங்களில் அவை மேலும் மோசமாகவே இருந்தன. இதற்கான தீர்ப்பை தமிழக மக்கள் தேர்தலில் வழங்கிவிட்டனர். கட்சி சந்தித்த தோல்வி, மக்களின் ஏமாற்றத்தின் வெளிப்பாடாகும்.

என்னை மிகவும் வேதனைப்படுத்துவது என்னவென்றால், கட்சித் தலைவரான உங்களிடம் உண்மையான நிலைமைகள் எடுத்துச் செல்லவில்லை என்பதே. உங்களைச் சுற்றியிருந்தவர்கள் அனைத்தும் நன்றாக உள்ளது என்ற தோற்றத்தை மட்டுமே உருவாக்கினர். நீங்கள் இருட்டில் வைக்கப்பட்டு, மக்கள் தரையில் துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் போது நல்லது நடப்பது போல் காட்டப்பட்டது. பல ஆண்டுகளாக, கட்சி அதன் அடிப்படைக் கொள்கைகளில் இருந்து விலகிச் செல்வதை கவலையுடன் பார்த்து வருகிறேன். எனது பார்வையில், திமுக தற்போது செல்வந்தர்களின் ஆதிக்கம் கொண்ட ஆட்சியாகவும், சில சமயங்களில் பொதுச் சொத்துகளை சிலரின் நலனுக்காக பயன்படுத்தும் அமைப்பாகவும் மாறியுள்ளது.

Pugazh Gandhi resigns from DMK

இந்தப் போக்கு கட்சியின் உச்ச மட்டத்தில் மட்டுமல்ல; மாவட்டம், ஒன்றியம், வார்டு, வாக்குச்சாவடி என அனைத்து நிலைகளிலும் ஊடுருவியுள்ளது. சில குடும்பங்களே கட்சியை முழுமையாகக் கட்டுப்படுத்துகின்றன. புதிய தலைமுறையினருக்கும், திறமையான இளைஞர்களுக்கும், சாதாரண தொண்டர்களுக்கும் முன்னேறும் வாய்ப்பு இல்லை. பழைய அதிகார மையங்களும், அவர்களது வாரிசுகளும் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் அமைப்பாக கட்சி மாறியுள்ளது.

மேலும் கவலைக்குரியது என்னவென்றால், ஒருகாலத்தில் சாதி ஆதிக்கத்தை எதிர்க்க பயன்படுத்தப்பட்ட பிராமணிய எதிர்ப்பு என்ற வரலாற்றுச் சிந்தனை, இன்று கட்சிக்குள் எழும் நியாயமான விமர்சனங்களை அடக்குவதற்கும், குடும்ப ஆதிக்கம் மற்றும் ஊழலுக்கு மறைமுக பாதுகாப்பு வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. சமூகநீதிக்கு எதிரானது என்ற பெயரில் கருத்து வேறுபாடுகள் ஒடுக்கப்படும்போது, அது பெரியாரின் கொள்கையின் ஆன்மாவையே துரோகம் செய்வதாகும்.

எனவே, எந்தவித தனிப்பட்ட கசப்பும் இன்றி, தெளிவான மனசாட்சியுடன், திமுக வெளிநாடு வாழ் தமிழர் அணியின் இணைச் செயலாளர், திமுக தேசிய செய்தித் தொடர்பாளர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் உடனடியாக விலகுகிறேன். உங்களுக்கும், கட்சிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். திமுக மீண்டும் தனது மனசாட்சியை உணர்ந்து, தனது வேர்களுக்குத் திரும்பி, அறிஞர் அண்ணா கனவு கண்டபடி உண்மையாக தமிழ்மக்களுக்கு சேவை செய்யும் இயக்கமாக மாற வேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்புகிறேன்." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+