புதிய மாவட்டங்கள் : அமைச்சர் அறிவிப்பால் பழனியை முன்வைத்து திண்டுக்கல் மாவட்டத்தில் குழப்பம்!
திண்டுக்கல்: தமிழ்நாட்டில் 8 புதிய மாவட்டங்கள் உருவாகும் என சட்டசபையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்திருப்பது திண்டுக்கல் மாவட்டத்தில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. பழனி புதிய மாவட்டமாக உருவானால் எந்தெந்த வட்டங்கள் அதில் இணையும் என்பதுதான் குழப்பத்தின் பின்னணி.
தமிழ்நாடு சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ. சேவூர் ராமச்சந்திரன், ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்குமா? என கேள்வி எழுப்பினார். மேலும் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படுமா என அரசு கொறடா கோவி.செழியன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தமிழகத்தில் 8 புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்பது கோரிக்கை. இது தொடர்பாக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மனு அளித்துள்ளனர். அதேபோல் வருவாய் கோட்டம், வட்டங்கள் பிரிப்பு தொடர்பாகவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. புதிய மாவட்டங்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பரிசீலித்து முடிவெடுப்பார் என்றார்.
திண்டுக்கல் மாவட்டமானது மதுரை மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தை 2 ஆக பிரிக்க வேண்டும் என்பது தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என தற்போதைய எம்.எல்.ஏ. செந்தில்குமார் வாக்குறுதியும் அளித்திருந்தார். திமுக ஆட்சி அமைந்தது முதலே பழனி மாவட்டம் தொடர்பான சர்ச்சையும் விவாதமும் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடருகிறது.
திண்டுக்கல் மாவட்டமானது திருச்சி, கரூர், மதுரை, திருப்பூர், தேனி மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, நிலக்கோட்டை, நத்தம், ஆத்தூர், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், குஜிலியம்பாறை மற்றும் கொடைக்கானல் ஆகிய வட்டங்களைக் கொண்டது.
திண்டுக்கல் மாவட்டத்தின் வருவாய் என்பது கொடைக்கானல் சுற்றுலா தலம், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை மற்றும் உலகப் புகழ் பெற்ற பழனிமலை திருக்கோவில் ஆகியவற்றை சார்ந்ததுதான். இதுதான் திண்டுக்கல் மாவட்டத்தின் பிரதான வருவாய் ஆதாரம்.
தற்போது திண்டுக்கல் மாவட்டம் 2 ஆக பிரிக்கப்பட்டு புதியதாக பழனியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவானால் பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் கொடைக்கானல் மூன்றுமே அந்த மாவட்டமுடன் இணைவது தவிர்க்க முடியாததாகிவிடும். கொடைக்கனால் அடிவாரத்தில்தான் (65 கிமீ) பழனி உள்ளது; பழனியில் இருந்து 28 கிமீ தொலைவில் ஒட்டன்சத்திரம் உள்ளது. இவை தவிர மடத்துக்குளம் உள்ளிட்டவையும் பழனியுடன் இணைக்கப்படும்.
இப்படி பழனி மாவட்டம் உருவாகிவிட்டால் திண்டுக்கல் மாவட்டம் வருவாய் அற்ற மாநிலமாகிவிடும். அத்துடன் வேடசந்தூர், குஜிலியம்பாறை தாலுகாக்கள் எந்த மாவட்டத்துடன் இணையும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. வேடசந்தூரில் இருந்து 50 கிமீ தொலைவில் பழனி உள்ளது; ஆனால் திண்டுக்கல் 20 கிமீ தொலைவில்தான் உள்ளது. அதனால் நிச்சயம் வேடசந்தூர் திண்டுக்கல் மாவட்டத்துடன் இருக்கும் என்பது ஒரு நம்பிக்கை. அதேநேரத்தில் வேடசந்தூர் சார்ந்த கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டமாக பழனிதான் இருக்கிறது. இதனால்தான் வேடசந்தூர் திண்டுக்கல்லுடன் இருக்கப் போகிறதா? பழனியில் இணையுமா? என்கிற குழப்பம் உருவாகி உள்ளது.
குஜிலியம்பாறையானது திண்டுக்கல்லில் இருந்து 47 கி.மீ தொலைவில் உள்ளது. ஆனால் குஜிலியம்பாறையில் இருந்து கரூர் 35 கி.மீ. தொலைவில்மட்டுமே உள்ளது. மிக நீண்ட கால போராட்டத்துக்குப் பின்னர் கடந்த அதிமுக ஆட்சியில் குஜிலியம்பாறை தாலுகா உருவானது. ஆகையால் திண்டுக்கல் மாவட்டம் பிரிக்கப்படும் போது பேசாமல் குஜிலியம்பாறையை கரூருடன் இணைத்துவிடலாம் என்கிற பேச்சும் உள்ளது.
இப்படி கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், குஜிலியம்பாறை, பழனி, வேடசந்தூர் என அத்தனையும் பழனி மாவட்டத்துக்குப் போய்விட்டால் திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, நிலக்கோட்டை, நத்தம், ஆத்தூர் ஆகிய 5 வட்டங்கள் மட்டுமே திண்டுக்கல் தொகுதியில் இருக்கும். இந்த 5 வட்டங்களும் எந்த ஒரு வருவாய் ஆதாரமும் இல்லாமல் வேறுவழியே திண்டுக்கல் மாவட்டத்துடன் இணைந்தே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும். இதனால் திண்டுக்கல் மாவட்டம் மிக மோசமான பாதிப்பை எதிர்கொள்ளும் என்கிற அச்சம் இருக்கிறது.
ஏற்கனவே திண்டுக்கல் நகராட்சி- மாநகராட்சி என அரசியல் காரணங்களுக்காக மட்டுமே உயர்த்தப்பட்டது. இன்னமும் திண்டுக்கல் மாநகராட்சி என்பது நடைமுறைக்கு வராமல்தான் இருக்கிறது. ஆகையால் திண்டுக்கல் மாவட்டம் 2 ஆக பிரிக்கப்பட்டால் திண்டுக்கல் மாவட்டம் ஒரு நகராட்சி நிலைக்கு தள்ளப்பட்டுவிடும் என்கிற குமுறலையும் கேட்க முடிகிறது.












Click it and Unblock the Notifications