பீடியால் வந்த வினை.. வீட்டுக்குள் வெடித்துச் சிதறிய பாட்டாசு! உடல் சிதறி ஒருவர் பலி.. கவனம் மக்களே!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே புகைபிடித்த போது வீட்டில் இருந்த பட்டாசுகள் வெடித்து ஒருவர் உடல் சிதறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் வீடுகளில் பட்டாசுகளை வைக்கும் பொதுமக்கள் மிகக் கவனமுடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளனர் போலீசார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பெரிய ராவுத்தர் தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது வயது 47. சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் தனது தாயாருடன் அதே பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அவரது தாய் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை ) இரவு சாகுல் ஹமீது வேடசந்தூரில் உள்ள ஒரு கடையில் பட்டாசுகள் வாங்கி வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார்.
வீட்டில் பட்டாசுகளை வைத்துவிட்டு சாகுல் ஹமீது உணவு அருந்தி உள்ளார். அதன் பிறகு வீட்டிற்குள் உட்கார்ந்து புகை பிடித்த போது நெருப்பு பற்றி வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் பயங்கரமாக வெடித்து சிதறியுள்ளன. இதில் சாகுல் ஹமீது உடல் மீது பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அவர் படுகாயமடைந்து பலியானார்.
திடீரென கேட்ட பயங்கர வெடி சத்தத்தை கேட்டு அருகில் வசிப்பவர்கள் ஓடிச் சென்று வீட்டு கதவை திறந்து பார்த்தபோது சாகுல் ஹமீது ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். மேலும் வீடு முழுவதும் புகை மூட்டமாக இருந்துள்ளது. இது குறித்து வேடசந்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் வீட்டில் இருந்த பட்டாசுகளை அப்புறப்படுத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருந்த சாகுல் ஹமீதின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் எச்சரிக்கை: தற்போது தீபாவளி பண்டிகையை கொண்டாட இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிரந்தர பட்டாசு கடைகள் மற்றும் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் பொதுமக்களும் பட்டாசுகளை வாங்கி வீட்டில் வைத்திருக்கின்றனர். கட்டிலுக்கு அடியில், பீரோவுக்கு மேல் என நினைத்த இடங்களில் எல்லாம் பட்டாசுகளை வைத்து செல்கின்றனர்.
மேலும் குழந்தைகள் எளிதில் அணுகும் வகையில் பட்டாசுகள் வைக்கப்படுவதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் சமையலறைக்கு அருகில் கூட சில வீடுகளில் இட பற்றாக்குறை காரணமாக பட்டாசுகள் வைக்கப்படுகிறது. அப்படி சாதாரணமாக வீட்டில் வைக்கப்பட்டதோடு பட்டாசுக்கு அருகிலேயே புகை பிடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாக கூறுகின்றனர் போலீசார். மேலும் பட்டாசுகளை வைக்கும் போது மிக கவனத்துடன் இருக்க வேண்டும், சிறுவர்களுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும், நேரடியாக வெயில் அல்லது நெருப்பு படும் இடங்களில் பட்டாசுகளை வைக்கவே கூடாது முடிந்த ,அளவு வீடுகளில் இருந்து பட்டாசு சேமிப்பதை தவிர்க்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications