அசுர வாத்தியத்தின் அரசன்.. பிரதமர் கையால் டாக்டர் பட்டம் பெறும் மிருதங்க கலைஞர்! யார் இந்த சிவராமன்?
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இதில், இளையராஜா மற்றும் மிருதங்க கலைஞர் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு டாக்டர் பட்டத்தையும் வழங்குகிறார்.
கடந்த 70 ஆண்டுகளாக 'அசுர வாத்தியம்' எனப்படும் மிருதங்கத்தை வாசித்து வரும் உமையாள்புரம் சிவராமன் இதுவரை பெண் கலைஞர் ஒருவருக்குக்கூட பக்க வாத்தியம் வாசித்ததில்லை.

டாக்டர் பட்டம்
திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த விழாவில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் மிருதங்க கலைஞர் 'உமையாள்புரம் சிவராமன்' ஆகியோருக்கு டாக்டர் பட்டத்தையும் வழங்குகிறார். இதில் இளையராஜா குறித்து பலருக்கு தெரியும். ஆனால் உமையாள்புரம் சிவராமன் குறித்து பரவலாக பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1935ல் பிறந்த சிவராமன் இசை மீது தீராத பற்று கொண்டிருந்தார். இந்த பற்றுதான் அவரை 10 வயதில் அரங்கேற்றத்தை நோக்கி அழைத்து சென்றுள்ளது.

கற்றல்
அருபதி நடேசன், தஞ்சாவூர் வைத்தியநாதன், பாலக்காடு டி.எஸ்.மணி ஐயர், கும்பகோணம் ரங்கு ஆகியோரிடம் இசையை கற்றுக்கொண்ட இவர், 'அசுர வாத்தியம்' எனப்படும் மிருதங்கத்தில் பல்வேறு நுணுக்கங்களை கற்று தேர்ந்துள்ளார். அதேபோல பல புதுமைகளையும் மிருதங்கத்தில் புகுத்தியுள்ளார். தான் கற்று தேர்ந்தது தன்னுடன் நின்றுவிடக்கூடாது என்பதற்காக அதனை மற்றவர்களுக்கும் கற்பித்து வருகிறார். பொதுவாக 'கர்நாடக' சங்கீதம் குறிப்பிட்ட சாதியினர் மத்தியில் மட்டுமே குவியப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக நீடித்து வருகிறது.

கற்பித்தல்
இவ்வாறு இருக்கையில், தனக்கு மிருதங்கம் செய்து கொடுக்கும் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவரின் மகனுக்கு இவர் மிருதங்க வாசிப்பை கற்றுக்கொடுத்திருக்கிறார். சங்கீதத்துக்கு சாதி வேற்றுமை கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். இப்பேர்ப்பட்ட கலைஞருக்குதான் பிரதமர் டாக்டர் பட்டத்தை கொடுக்கிறார். இதற்கு முன்னர் 2010ல் பத்ம விபூஷன் விருதினை வழங்கி மத்திய அரசு இவரை கவுரவித்திருந்தது. அதேபோல பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

பக்க வாத்தியம்
இவருடைய தனிச்சிறப்பே, பாடகரின் குரலுக்கேற்ப சங்கீதத்தை வளைத்து கொடுக்கும் தன்மைதான். மட்டுமல்லாது முதன் முதலாக இழைக்கண்ணாடியால் உருவாக்கப்பட்ட மிருதங்கத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இவரின் வாழ்க்கை வரலாறு குறித்து 'ஓவர்டோன்' எனும் 30 நிமிட ஆவணப்படமும் வெளிவந்துள்ளது. இவ்வளவு பெருமைக்குரிய இவர் இதுவரை ஒரே ஒரு பெண் கலைஞரின் நிகழ்ச்சியில் பங்கேற்று பக்க வாத்தியம் வாசித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications