Oneindia special: ஒன்றல்ல இரண்டல்ல 163.. ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்யும் திண்டுக்கல் ’பிதாமகன்’
திண்டுக்கல்: உடல் நலக்குறைவு காரணமாகவோ, விபத்து காரணமாகவோ, பசியாலோ இறந்து, அனாதை பிணங்களாக சாலையில் கிடக்கும் பல சம்பவங்களையும் நாம் கேள்விப்பட்டிருப்போம் அல்லது கண்டிருப்போம்.. அப்படி ஆதரவற்றவர்களாய் சாலையோரங்களில் மாண்டுபோனவர்களின் 160க்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்து வருகிறார் வேல்குமார்.
இந்திய தேசத்தில் எங்கோ ஒரு மூலையில் பிறந்து, பிழைப்பு தேடி சொந்த ஊரை விட்டு,நாட்டை விட்டு வேறு நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்தவர்கள், பெற்ற பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு விரட்டி அடிக்கப்பட்ட பெற்றோர்கள், குடும்ப சூழல் கருத்து வேறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணத்தால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கில் தமிழகத்தில் உள்ளனர்..

இருக்க இடமின்றி சாலைகளில் சுற்றித் திரிவதையும், சாலையோரங்களில் அரவணைப்புக்கு ஆள் இல்லாமல் அனாதையாக படுத்து கிடப்பதையும் திண்டுக்கல் பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாம் பார்க்க முடிகிறது.
இப்படி இடம் பெயர்ந்தவர்களில் சிலர் உடல் நலக்குறைவு காரணமாகவோ, விபத்து காரணமாகவோ, பசியாலோ இறந்து, அனாதை பிணங்களாக சாலையில் கிடக்கும் பல சம்பவங்களையும் நாம் கேள்விப்பட்டிருப்போம் அல்லது கண்டிருப்போம். அப்படியான அனாதை பிணங்களை தத்தெடுக்கும் தாயாக, தந்தையாக இருந்து அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வருகிறார் வேல்குமார்.

திண்டுக்கல் பள்ளபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஜெயம் நகர் பகுதியில் வசித்து வருகிறார்.இவர் அன்னபூரணி அறக்கட்டளை மூலம் அன்னதானம் முதல் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்வது வரை பல்வேறு சமூகப்பணிகளை தூய்மையுள்ளத்தோடு செய்து வருகிறார். இதுவரை 160க்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்திருக்கும் இவர், நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கானோருக்கு உணவும் பல ஆண்டுகளாய் அளித்து வருகிறார்.
சமூக சேவையையே குறிக்கோளாக கொண்டுள்ள வேல் குமாரை ஒன் இந்தியா தமிழ் சார்பாக சந்தித்தபோது, நம்முடன் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

"அனாதை பிணங்களை அடக்கம் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லங்க. அனாதை பிரேதம் அடக்கத்திற்கு மருத்துவமனை, காவல் துறையினர், அரசு அதிகாரிகள் என அனைவரின் பங்களிப்பும் தேவை. இந்த மூவரின் ஒத்துழைப்பு இல்லையென்றால் இதை செய்ய முடியாது. இவர்களின் பார்வைக்கு அப்பால் நாம் ஏதாவது செய்தால் அது சட்டப்படி குற்றம்.
அதனால நண்பர்கள் ஒத்துழைப்புடன் சகிதமாக அரசு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு காவலர்கள் துணையோடு கடந்த 3 ஆண்டுகளில் 160-க்கும் மேற்பட்ட அனாதை பிரேதங்களை நல்லடக்கம் செய்துள்ளோம். அரசு மருத்துவமனை மற்றும் காவல்நிலையங்களுக்கு அனாதை பிணம் இருப்பது குறித்த தகவல் வந்தவுடன் அவர்கள் என்னை தொடர்பு கொள்வார்கள்.மரணத்துக்கு பிறகும் ஆதரவற்றோர் கவுரவமாக நடத்தப்படுவதில்லை என்று நினைக்கும்போது மனசுக்கு கவலையாக தான் இருக்கு.

இப்படி யாரும் ஆதரவற்ற நிலையில் கிடத்தப்படுபவர்களை ஜாதி, மத, இன வேறுபாடின்றி நாங்கள் சகிதமாக சில நேரங்களில் எங்கள் குடும்பமாக, சம்பந்தப்பட்ட சரக காவல் துறையினர் முன்னிலையில் நம் சம்பிரதாய முறைப்படி வாய்க்கரிசி இட்டு, மாலையிட்டு, பால் தெளித்து இறுதி காரியங்களை மன நிறைவுடன் செய்து கொண்டிருக்கின்றோம்.
மேலும் பெற்ற பிள்ளைகள் கைவிடப்பட்டு சாலையோரம் உள்ள முதியோர்களை சமூக நலத்துறை உதவியுடன் திண்டுக்கல்லை சுற்றியுள்ள அரசு காப்பகங்களில் சேர்த்துள்ளோம்.அரசு மருத்துவமனையில் ஆதரவற்று சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு அடிப்படை உதவிகளை செய்து வருகிறோம். சொந்தங்கள் இருந்தாலும் பொருளாதார வசதி இன்றி தவிப்பவர்களின் உறவினர் பிரேதத்தை நல்ல முறையில் அடக்கம் செய்துள்ளோம்.
திண்டுக்கல் நகர் பகுதிகளில் தேவைக்கு அதிகமாக உணவு இருப்பின் அந்த உணவுகளை எந்த நேரத்தில் அழைத்தாலும் அங்கு சென்று அதனை எடுத்து பசியால் வாடும் ஆதரவற்றவர்களுக்கு உணவு அளித்து வருகிறோம். அதோடு மட்டுமின்றி என் மனைவி மகேஸ்வரி உதவியுடன் தினமும் 150 க்கு மேற்பட்ட ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம். எனக்கு என் மனைவி,குழந்தைகள் மற்றும் நண்பர்கள், சமூக சேவகர்கள் ஒத்துழைப்பு தருவதால் சேவையை ஒரு கடமையாகவே செய்து வருகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications