திண்டுக்கல் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.. என்ன நடந்தது! மாவட்ட ஆட்சியர் பூங்கொடி பரபர
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் ஏற்பட்ட மோசமான தீ விபத்தில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தீ விபத்து தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பூங்கொடி சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் திருச்சி சாலையில் பிரபல எலும்பு முறிவு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் இன்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து: அங்கிருந்த கணினியில் ஏற்பட்ட மின்சார கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக மருத்துவமனையில் எதிர்பாராத விதமாக இதுபோல தீ விபத்து ஏற்பட்டால் அதை அணைக்க தானியங்கி தீ அணைப்பான்கள் இருக்க வேண்டும். இந்த மருத்துவமனையில் தீ அணைப்பான்கள் செயல்படவில்லை என தெரிகிறது.
இதன் காரணமாக தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி இருக்கிறது. தீ விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இருப்பினும், இந்த பயங்கர தீ விபத்தில் லிப்ட்டில் சிக்கிய ஒரு குழந்தை உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். லிப்ட்டில் சிலர் சிக்கியுள்ளது குறித்த தகவல்கள் தீயணைப்பு படையினருக்குக் கடைசியாகவே தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே 7 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றொரு லிப்ட்டில் வேறு சிலர் சிக்கியிருந்த நிலையில், அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மாவட்ட ஆட்சியர் பூங்கொடி: இதற்கிடையே இது தொடர்பாகத் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த மருத்துவமனையில் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்த தகவல் கிடைத்த உடன் தீயணைப்புத் துறையினர், போலீசார், வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகள் அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு உள்ளே யாராவது உள்ளனரா என்று தீயணைப்புத் துறையினர் பார்த்தனர்.
உயிரிழப்பு: அப்போது தான் லிஃப்டில் சிலர் சிக்கியிருந்தது தெரிய வந்தது. அவர்கள் மயக்கமடைந்து சுயநினைவு இல்லாமல் இருந்தனர். அவர்களைப் பரிசோதிக்க அருகே உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி இருக்கிறோம். அதில் சிலர் உயிரிழந்து இருக்கலாம் என்று தகவல் கிடைத்துள்ளது. மருத்துவர்கள் சொன்ன பிறகே எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது சரியாகத் தெரிய வரும். இப்போது தான் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. அனைத்தும் முடிந்த பிறகே என்ன நடந்தது.. எவ்வளவு பேர் உயிரிழப்பு என்பது தெரிய வரும்" என்றார்












Click it and Unblock the Notifications